வாரம் ஓர் அலசல் - பன்னாட்டு எழுத்தறிவு நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு‘
என்பார் பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர். எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ போன்றது என்று இக்குறளின் வழியாக எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். எழுத்தறிவித்தவனை இறைவனாகப் போற்றும் சூழலும் நம்மத்தியில் இருந்து வருகின்றது. தான் எழுத்தறிவு பெறாவிட்டாலும் பரவாயில்லை தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்கள் இம்மண்னில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒரு கைப்பிடி சோறும், படுக்க இடமும் கொண்ட பாமர மக்கள் கூட தங்களது பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று எண்ணி கடினப்பட்டு அவர்களைப் படிக்க வைக்கின்றார்கள். கல்வியை மட்டும் கொடுத்து விட்டால் போதும் எப்படியாவது என் பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று கூறும் எண்ணற்ற குரல்கள் நம் மத்தியில் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அண்மையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் படித்து பயன்பெற்ற எண்ணற்ற மாணவர்கள் தங்களது பழைய வாழ்க்கை புது வாழ்க்கை இரண்டையும் மக்களுக்கு எடுத்துரைத்து நம் கண்களை பனிக்கச்செய்தது நாம் அறிந்ததே. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று நகைச்சுவையாக அல்ல மாறாக உள்ளார்ந்த உவப்புடன் அவர்கள் கூறினார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் கல்வியறிவு. வாழ்க்கையில் சிறக்க வேண்டுமா? பொருளாதாரத்தில் உயரவேண்டுமா? கல்வியை உங்கள் ஆயுதமாகக் கொள்ளுங்கள் என்று எண்ணற்ற அறிஞர்களும் வாழ்க்கையில் சிறந்து விளங்கும் பெருமக்களும் கூறுகின்றனர். ஆக இந்தக் கல்வியறிவு எழுத்தறிவு என்பது நமக்கு மிக முக்கியமானது என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று பன்னாட்டு எழுத்தறிவு நாளானது சிறப்பிக்கப்படுகின்றது.
1967 ஆம் ஆண்டு முதல், பன்னாட்டு எழுத்தறிவு நாளானது (ILD) ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு எழுத்தறிவு, நீதி, அமைதியான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு எழுத்தறிவு மிக முக்கியமானது என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது. எழுத்தறிவு என்பது அனைவருக்கும் ஓர் அடிப்படை மனித உரிமை. மனித உரிமைகள், அதிக சுதந்திரங்கள், உலகளாவிய குடியுரிமையை அனுபவிப்பதற்கான கதவுகளைத் திறக்கிறது. சமத்துவம், பாகுபாடு காட்டாத தன்மை, சட்டத்தின் ஆட்சி, ஒற்றுமை, நீதி, பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதியின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவுகின்றது. தன்னுடனும், மற்றவர்களுடனும், இப்புவியுடனும் இணக்கமான உறவுகளை உருவாக்குவதற்கும் பரந்த அறிவு, திறன்கள், மதிப்புகள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளைப் பெறுவதற்கு எழுத்தறிவு ஓர் அடித்தளமாக விளங்குகின்றது.
எழுத்தறிவு பெறுவதில் முன்னேற்றம் பல இருந்தபோதிலும், உலகளவில் குறைந்தது 73 கோடியே 90 இலட்சம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அடிப்படை எழுத்தறிவு திறன்களைப் பெறவில்லை என்று 2024-ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை எடுத்துரைக்கின்றது. அதே நேரத்தில், 10 குழந்தைகளில் 4 பேர் குறைந்தபட்ச வாசிப்புத் திறனை அடையவில்லை என்றும், 2023- ஆம் ஆண்டில் 27 கோடியே 20 இலட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாகவும் தரவுகள் எடுத்துரைக்கின்றன.
"டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்" என்ற கருப்பொருளின் கீழ் 2025-ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு எழுத்தறிவு நாளானது சிறப்பிக்கப்படுகின்றது. மின்னியல் (டிஜிட்டல்) மயமாக்கல் என்பது அதில் நாம் எவ்வாறு ஈடுபடுகிறோம் என்பதைப் பொறுத்து, நேர்மறை மற்றும் எதிர்மறை வழிகளில் நம்மை மாற்றுகின்றது. நாம் கற்றுக் கொள்கின்ற, வாழ்கின்ற, வேலை செய்கின்ற, சமூகமயமாக்கும் வழிகளையும் இந்த மின்னியல் மயம் மாற்றி வருகிறது. அடிப்படை எழுத்தறிவு திறன்கள் இல்லாத பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்த டிஜிட்டல் கருவிகள் உதவும் என்றாலும், இந்த டிஜிட்டல் மாற்றம் இரட்டை ஓரங்கட்டலை உருவாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது. அதாவது பாரம்பரிய எழுத்தறிவு கற்றலில் இருந்து மட்டுமல்லாது, டிஜிட்டல் யுகத்தின் நன்மைகளிலிருந்தும் விலக்குதல் என்னும் இரட்டை அபாயத்தினையும் ஏற்படுத்துகின்றது.
மாற்றங்களை உள்ளடக்கியதாகவும், பொருத்தமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கு எழுத்தறிவு ஒரு முக்கியமானதாகும். காகிதத்தில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் அப்பால், டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவு மக்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பாதுகாப்பாகவும் சரியான முறையிலும் அணுக, புரிந்துகொள்ள, மதிப்பீடு செய்ய, உருவாக்க, தொடர்பு கொள்ள ஈடுபட உதவுகிறது. விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும், நம்பகமான தகவல்களைப் புரிந்துகொள்வதற்கும் எழுத்தறிவு அடிப்படையாக உள்ளது.
செப்டம்பர் 8 ஆம் தேதி, ILD2025 உலகளாவிய, பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் எழுத்தறிவில் முன்னேற்றத்தைக் கொண்டாடும் இந்நாளானது, எழுத்தறிவு என்றால் என்ன, இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவு கற்பித்தல் மற்றும் கற்றல், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் கண்காணிக்கப்படுகின்றன என்பது பற்றிய விமர்சன ரீதியான பிரதிபலிப்புக்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
எழுத்தறிவு என்பது படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மட்டுமல்லாது, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான அடிப்படையான திறன் என்பதில் கவனம் செலுத்துகிறது. உலகின் பல பகுதிகளில் மக்கள் இன்னும் எழுத்தறிவு இல்லாமல் உள்ளனர். தரமான கல்வி வாய்ப்புகளை அனைவருக்கும் அளிப்பது முக்கியம் என்பதைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது.
அறிவொளி இயக்கத்தின் பங்கு, எழுத்தறிவுவிற்கு மிக முக்கியமானதாகும். சாலை வசதிகள் அல்லாத, மின் விளக்குகள் வசதிகள் அல்லாத கிராமங்களுக்கு கூட அறிவொளி இயக்கத்தினர் சென்று அங்கிருக்கும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி அவர்களுக்கு கல்வியின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளனர். அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் பெருமளவு அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டு 52.1% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம், 65.4% ஆக அதிகரித்தது. அதிலும், கிராமப்புற எழுத்தறிவு விகிதம் 14.7% அதிகரித்தது. 2019 மற்றும் 2021க்கு இடையில் இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் எழுத்தறிவு விகிதம்: ஆண்கள்: 89.6%, பெண்கள்: 83%.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதத்தில் 94 சதவிகித புள்ளிகளைப் பெற்று கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து டெல்லி (86.2), சண்டிகர்(86) முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 80.1% புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இளைஞர்களையும் குழந்தைகளையும் அதிகளவு கொண்டுள்ள இந்தியா, இன்னும் எழுத்தறிவில் முழுமை பெறவில்லை என்பது சோகமான ஒன்றாகும். 100% எழுத்தறிவு பெற்ற நாடாக இந்தியா வேகமாக உயர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். எழுத்தறிவித்தவன் இறைவனுக்குச் சமம் என்பதை உணர்ந்து கல்வியறிவற்றவர்களுக்கு அதனை வழங்க முயல்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்