கற்பனை செய்ய முடியாத வறுமை சூழலில் காசா நகரம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
காசா நகரம் வேகமாக குழந்தைகள் வாழ முடியாத இடமாக மாறி வருகிறது என்றும், அச்சம், இடம்பெயர்தல், இறப்பு போன்றவை ஏற்படும் நகரமாக காசா மாறி வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளது யுனிசெஃப் அறிக்கை.
செப்டம்பர் 5, வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பானது, காசா நகரில் இராணுவத் தாக்குதல் தீவிரமடைவது அங்கு இன்னும் வாழ்ந்து வருகின்ற ஏறக்குறைய 10 இலட்சம் மக்களுக்கு ஒரு பேரழிவாக, கற்பனை செய்ய முடியாத சோகமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளது.
மேலும் காசா நகரில் யுனிசெஃப் ஆதரிக்கும் 92 வெளிநோயாளர் ஊட்டச்சத்து சிகிச்சை மையங்களில் 44 மட்டுமே இன்னும் செயல்பட்டு வருகின்றன என்றும், பகுதி நேரமாக செயல்படும் 11 மருத்துவமனைகளில், 5 மட்டுமே இன்னும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
40 இன்குபேட்டர்களில் 80 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இருப்பதால் நெரிசலான சூழலில் அந்த இயந்திரங்களில் குழந்தைகள் தங்கள் உயிருக்குப் போராடுகிறார்கள் என்றும், காசாவில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான யுனிசெஃப் பிராந்திய அலுவலகத்தின் தகவல் தொடர்பு மேலாளர் டெஸ் இங்க்ராம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், ஆறு வார சிகிச்சையின் போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வருவதாகவும் எடுத்துரைத்தார் மேலாளர் டெஸ் இங்க்ராம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்