ஆப்கானிஸ்தான் நில அதிர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் யுனிசெஃப்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் நிலஅதிர்வினால் ஆயிரக் கணக்கான குழந்தைகள் ஆபத்தில் இருக்கின்றனர் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு யுனிசெஃப் அமைப்பினர் உதவி வருகின்றனர் என்றும் எடுத்துரைத்தார் ஆப்கானிஸ்தான் பகுதிக்கான யுனிசெஃப் பிரதிநிதி தாஜுதீன் ஓயேவாலே.
ஆகஸ்டு 31, ஞாயிறன்று மாலை கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான ஆற்றல் மிக்க நிலஅதிர்வால் ஏராளமான இடங்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றும், பல குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்தார் தாஜூதீன்.
இந்த பேரழிவால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் பேரழிவால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பல குழந்தைகள் மற்றும் மக்கள் தங்களது அன்புக்குரியவர்களையும் உடைமைகளையும் இழந்துள்ளனர் என்றும் எடுத்துரைத்தார் தாஜூதீன்.
யுனிசெஃப் குழுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் பணியாற்றி வருகின்றனர் என்றும், அவசரத் தேவைகளுக்கு விரைவாக பதிலளிக்க உள்ளூர் பங்காளர்கள் மற்றும் ஐ.நா. நிறுவனங்களுடன் இணைந்துப் பணியாற்றி வருகின்றனர் என்றும் எடுத்துரைத்தார் தாஜூதீன்.
குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான உயிர்காக்கும் தலையீடுகள், குனார் மாநிலத்தில் உள்ள சவ்கே மற்றும் நுர்கல் ஆகிய பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் முதலுதவி மற்றும் உடனடி சிகிச்சை அளிக்க நடமாடும் நலவாழ்வுக் குழுக்களை அனுப்புவது போன்ற பணிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார் தாஜூதீன்.
வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மருந்துகள், நலவாழ்வுப் பொருட்கள், குளிர்போக்கும் ஆடைகள், காலணிகள், போர்வைகள், சமையலறை உபகரணங்கள், அத்துடன் கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அவசர பொருட்களையும் யுனிசெஃப் அனுப்பி வருகின்றது என்றும், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் உயிர்வாழத் தேவையான உதவியை விரைவில் பெறுவதை உறுதி செய்வதற்காக, சுகாதாரம், குடிநீர், சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தை பாதுகாப்பு, தற்காலிக தங்குமிடம் மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றிற்கான அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது என்றும் குறிப்பிட்டார் தாஜூதீன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்