மொராக்கோ நிலஅதிர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் காரித்தாஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மொராக்கோவில் ஏற்பட்டுள்ள நிலஅதிர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியினை அங்குள்ள காரித்தாஸ் அமைப்பு முன்னெடுத்து செய்து வருகின்றது என்றும், மக்களின் மாண்பு, சமூக நீதி, ஒற்றுமை போன்றவற்றை வழங்க அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வோடு அப்பணியினைச் செய்து வருகின்றது என்றும் கூறினார் மொராக்கோ காரித்தாஸ் அமைப்பின் தலைவர் பெனடிக்ட் பெர்கோர்ன்.
செப்டம்பர் 8, 2023 அன்று, உள்ளூர் நேரம் இரவு 11:00 மணிக்கு, மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வினால் 2,946 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5,674 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் எடுத்துரைத்தார் பெர்கோர்ன்.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் கடுமையாக அழிக்கப்பட்டதால், இடம்பெயர்ந்தவர்களுக்கு வீட்டுவசதிக்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறிய பெர்கெரான் அவர்கள், 59,674 வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன என்று மொராக்கோ அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.
நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட சாலைகள் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை சிக்கலாக்கின என்றும், அருகிலுள்ள அட்லஸ் மலைகளில் அமைந்துள்ள தொலைதூர கிராமங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன என்றும் பகிர்ந்தார் பெர்கோர்ன்.
மொராக்கோ மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமனதுடன் உதவ முன்வந்தனர் என்றும், தங்கள் சக குடிமக்களுக்கு உணவு, போர்வைகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்க அதிக எண்ணிக்கையில் விரைந்தனர் என்றும் கூறினார்.
உயிர் பிழைத்தவர்களின் தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அரசாங்கம் பொருளாதார உதவியை வழங்கி வருகின்றது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசரத் தேவைகளான, தற்காலிக தங்குமிடங்கள், உணவுக்கூடைகள், நலவாழ்வுப் பெட்டிகள் மற்றும் விளக்குகளுக்கான விளக்குகளை விநியோகிப்பதை செய்து வருகின்றது என்றும் குறிப்பிட்டார் பெர்கோர்ன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்