MAP

ஒருவருக்கொருவர் உதவும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனிதர்கள் 

வாரம் ஓர் அலசல் – ஆகஸ்ட் 19. உலக மனிதாபிமான நாள்

1893-இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் திருவள்ளுவர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

மனிதாபிமானம் என்பது மனிதன் மனிதனுக்குக் காட்டும் பரிவு, அக்கறை, அன்பு, உதவி மனப்பான்மை ஆகியவற்றின் ஒருமைப்பாடு ஆகும். அதாவது மனிதனை மனிதனாக நடத்துவதே மனித நேயம்.  மனித நேயம் என்றால், துன்பத்தில் உள்ளவர்களுக்கு கரம் நீட்டுவது, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவுவது, அநீதிக்கு உள்ளாகும் மக்களுக்கு நியாயம் கேட்பது ஆகியவை அடங்கும். மதம், இனம், மொழி, தேசம் என்று எதையும்  பாராமல், எல்லோரையும் ஒரே குடும்பமாகக் கருதி நடப்பதே உண்மையான மனித நேயம். `மனித நேயம்’ என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும்.  `நேயம்’ என்ற சொல் ‘நேசம்’; என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு ‘அன்பு’ என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது. `அன்பு’ என்பதற்கு “ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு” என்று தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. இரா. சக்குபாய் “உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும், ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்” என விளக்கம் தருகிறார்.

இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித நேயம் குறைந்து வருவது கவலைக்குரியது. பணம், பதவி, புகழ் ஆகியவற்றின் பின் ஓடும் மனிதன், பரிவு மற்றும் பாசத்தை மறந்து விடக்கூடாது. சிறிய உதவியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும். இன்றைய சூழலில் பெரும்பாலான மனிதர்கள்   மனித நேயத்தை இழந்து சுயநலத்தோடு வாழ்கின்றனர். மனித வாழ்க்கைக்குத் தேவையான அன்பு,பாசம்,போன்ற உணர்வுகள் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் அன்பை மறந்து, உறவுகளை மறந்து தன் நலம் பேணத்    தொடங்கிவிட்டான். தன் நலம் மட்டுமே பேணப்படும் மனத்தில் மனித நேயத்தைக் காண்பது கடினம்.

இவ்வுலகில் இயற்கைச்சீற்றங்களால், சாதி, மதச்சண்டைகளால், நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் மானுடத்துயர்   நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள்தான். எந்தவித குற்றமும் இழைக்காத இலட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் சிக்கிக்கொள்கிறார்கள், சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள். அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றார்கள்.

இப்படிப்பட்டத் துயரங்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள். காயம்பட்டு குருதி வழிந்து கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். எனது சாதியா, எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனித உயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும், தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்களை நினைவுகூரும் நாள்தான் மனிதநேய நாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

பிரேசில் நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ வியரா டி மெல்லோ, 37 ஆண்டுகள் ஐ.நா. அவையின் மனித நேயப் பணிகளில் தொண்டாற்றியவர். மிகச் கடினமான போர் சூழல்களில் சிக்கித் தவிக்கும் சாதாரண குடிமக்கள்படும் வேதனைகளை வெளிக்கொண்டு வந்தவர். அவர்களுக்கான நிவாரணங்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர். 2003ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும்   ஐ.நா. உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டி மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள், 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். 2008இல் ஸ்வீடன் நாட்டின் முன்மொழிதலுடன், ஐ.நா.பொது அவை,  செர்ஜியோ அவர்கள் நினைவை சிறப்பிக்கும் விதமாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனிதாபிமான தினமாக சிறப்பிக்கப்படும் என அறிவித்தது.

“தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்....”என்ற பாரதிதாசனின் வார்த்தைகளுக்கு ஏற்ப தன் பிள்ளை,தன் வீடு,தன் குடும்பம் என்ற கடுகு போன்ற மிகச்சிறிய உள்ளம் படைத்தவர்களால் மனித நேயம் ஒருபக்கம் குறைந்து கொண்டே வந்தாலும், இன்னமும் மனித நேயம் படைத்த சிலரால் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மனித நேயம் என்பது இடம், சூழல், தேவைக்கு ஏற்ப  வெளிப்பட வேண்டும். அன்பாக, கருணையாக, உதவியாக, எளிமையான சொற்களாக வெளிப்படலாம்.

1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கொல்கத்தா நகரின் தெருக்களிலே தொழுநோயால் படுத்துக்கிடந்த மனிதர்களுக்கு தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனிதநேயப் பணியாளர்கள்.

‘தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்; தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்; தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். சங்க இலக்கியங்கள் காதல், போர், வீரம், கொடையை மட்டுமின்றி மனிதநேயத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலப் புலவர்கள் நுண்ணறிவும், ஆழ்ந்த சிந்தனையும், மனித நேயம் கொண்டவர்களாகத் திகழ்ந்திருந்தனர். மனிதன் மற்ற உயிர்களிடத்தில் காட்டும் அன்பு மனிதநேயம். மனிதன் என்ற சொல்லானது மனம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். இத்தகைய மனதை உடையவன் தான் மனிதனாகிறான். மனதில் பலவகை எண்ணங்கள் தோன்றினாலும் நல்ல எண்ணங்கள் ஒருவனை மனிதனாக்குகின்றன. இத்தகைய சிறப்புப் பெற்ற மனிதனின் பண்புகளை வெளிப்படுத்துவது மனிதநேயம். சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை அனைத்தும் மனிதநேயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமானால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அன்புதான் இன்பத்தின் ஊற்றுக்கண். அவ்வின்ப ஊற்று மனித இனத்தில் படிந்துள்ள குற்றங்களைப் போக்கி மனிதனது பெருமையையும் உரிமையையும் மதிக்கும் வகையில் போற்றப்படுவது மனிதநேயம் ஆகும். நாடு, மொழி, இனம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைக் கடந்து மேலோங்கி நிற்பது மனிதநேயம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

அன்பு எனும் இனிய மகத்துவத்தை உலக உயிர்களுக்கு இறைவன் அளித்துள்ளான். மேன்மையான அன்பு வெளிப்பாட்டை பிறரிடத்தும், பிற உயிர்களிடத்தும் காட்ட வேண்டுமென்பது பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இதனையே வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனக் கூறினார். அன்பு செலுத்துவதோடு மட்டுமின்றி பிறருக்குச் சேவை செய்வதே உயர்ந்ததாகும். சேவை மனம் படைத்தவர்கள் பிறருக்குத் தொண்டு செய்வதைப் பாரமாக நினைப்பதில்லை. சைவ சமயத்தில் இறையடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு இறைவனுக்கே செய்யும் தொண்டு என்பர். சைவ சமயம் வளர்த்து இறையருள் பெற்ற காரைக்கால் அம்மையார் வந்தோர்க்கு உணவளித்தலே இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்று குறிப்பிடுகிறார். இதனையே, சின்னஞ்சிறிய உங்கள் சகோதர சகோதரிகளுக்குச் செய்வதையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்கிறார் இயேசு.

பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் வறுமையினால் குமண வள்ளலைப் பற்றிப் பாடல் பாடி பரிசுப் பெறுகிறார். அவ்வாறு பெற்ற செல்வங்களை மனைவியிடம் கொடுத்து குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு சொல்கிறார். பெற்ற பரிசுப் பொருட்களை தான் மட்டுமே வைத்துக்கொள்ளாமல் வறியவர்,பகைவர் என எல்லாருக்கும் கொடுக்கச் சொல்கிறார். இவ்வாறு வறுமை, பகைமை என எந்தச் சூழலிலும் தன்னை மட்டுமே மையப்படுத்தாமல் பிறரையும் தன்னை போல் எண்ணி மனித நேயத்துடன் வாழ்ந்துள்ளார்.

உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்கம் என்ற ஓர் அமைப்பு உண்டு. இதனை நிறுவியர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான். இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும், பூகம்பமாக இருந்தாலும், ஆழிப்பேரலையாக இருப்பினும், எரிமலை வெடிப்பாக இருப்பினும், தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை, தங்குவதற்குத் தேவையான இடங்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் வழங்கி உதவி புரிகிறது. இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணித் தொடர்கிறது. இச்செயலை ஏறக்குறைய   20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளார். இவர் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம். பாரதப் போர் நடைபெற்றதோ வட இந்தியாவில்.  பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளார் என்ற செய்தியை “ஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையிலான செயலாகப் பார்க்க முடிகின்றது. போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புறும் மனித நேயமே என்று கொள்ளலாம். மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறரிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள்.

கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்த்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்! முதலாளித்துவ சமூக அமைப்புக்கள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு செய்யும் உதவிகள் கூட பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் அமைந்திருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. நவீன தொழில்நுட்ப அறிவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்திக்கும்போது மனிதாபிமானத்தின் அடிப்படையை உணரத் தவறுகிறோம். மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்படுமிடத்து இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு எப்போதோ திர்வு கண்டிருக்கலாம்.

இன்றைய உலகம் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இருந்தாலும், இயற்கை பேரழிவுகள், போர்கள், வறுமை, நோய்கள், சூழல் சீர்கேடுகள் போன்ற சவால்களைச் சந்தித்து வருகிறது. இதனால், பல இடங்களில் மனிதாபிமானச் செயல்கள் வெளிப்படுகின்றன. புலம்பெயர்த்தோருக்கு அடைக்கலம் கொடுத்தல், தங்களிடம் உள்ள உணவு, உடை போன்ற உதவி பொருட்களைப்  பகிர்ந்தளித்தல் எனத் திருஅவையும் தன்னால் இயன்ற மனிதாபிமான உதவிகளை, தன்னைப் போல் பிறரை நேசி என்னும் கிறிஸ்துவின் வழி நின்று இன்றும் உக்ரைன், காசா, சிரியா போன்ற போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கி வருவதுடன், வெறுப்பு மற்றும் வன்முறையை மனித இதயங்களில் இருந்து அகற்றவும்,  இராணுவ செலவினங்களைக் குறைத்து, அதிகமான மனிதாபிமான தேவைகள் வழங்கப்படுவதற்கும், மரணத்தின் கருவிகளை வாழ்க்கையின் கருவிகளாக மாற்றுவதற்கும் குரல் கொடுத்தும் வருகின்றன மனிதாபிமான குழுக்கள்.

"மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது."  பிறர் நலம் காக்க வேண்டும். பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே மனித நேயம் உயரும். மனிதாபிமானச் செயல்கள் என்பது பெரிய அமைப்புகள் மட்டுமே செய்யும் ஒன்று அல்ல. பழந்தமிழராகிய நம் முன்னோர் வழி நின்று,  பசியால் தவிக்கும் ஒருவருக்கு உணவு அளித்தல், காயமுற்ற விலங்குக்கு தண்ணீர் கொடுத்தல், மரம் நடுதல் போன்று அன்றாட  வாழ்க்கையில் நாம் செய்யும்  சிறு சிறு  நற்செயல்களும்  மிகப் பெரிய மனிதாபிமானச் செயல் ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஆகஸ்ட் 2025, 13:34