வாரம் ஓர் அலசல் - ஆகஸ்ட் 23 அடிமை வியாபார ஒழிப்பும் விழிப்பும்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
வரலாற்றை நினைவு கூறுவது கடந்த காலத்தைத் திருப்பிப் பார்ப்பதற்காக மட்டுமல்ல, எதிர்காலத்தை சிறப்பாக்குவதற்காகவே. அவ்வாறு மனித குலம் அனுபவித்த துன்பங்களிலிருந்து கற்றுக் கொண்டு, அனைவரும் சுதந்திரமாகவும் மரியாதையுடனும் வாழும் உலகை உருவாக்க வேண்டிய பொறுப்பை நமக்கு நினைவூட்டும் நாளே அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்.
அடிமைமுறை என்பது மனிதர்களை மனிதர்களே வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலவந்தமாக வேலையை வாங்கும் முறையாகும் .இம்முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துள்ளது. குறிப்பாக கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திலேயே இந்த அடிமைமுறை வழக்கில் இருந்துவந்துள்ளதை நாம் அன்றாடம் வாசிக்கும் திருவிவிலியத்தின் குறிப்பாக பழைய ஏற்பாட்டு நூல்களின் வழியாக நாம் அறிந்த ஒன்றே. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து, உணர்வுகளை இழந்த உயிரற்றப் பொருள்களாகவே பார்க்கப்பட்டனர். பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட போர்களில் தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். இங்கு பெண்களும் குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ அல்லது மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களாகவோ இருக்கலாம்.
உலகில் உள்ள பெரிய மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் எல்லா இனங்களும் தங்களை விட கீழ் நிலையிலிருந்த இனத்தவர்களை கொடுமையான அடிமை முறை மூலம் கடுமையான வேலை வாங்கி இருக்கிறார்கள். அந்த அடிமைகளை அடித்து காயப்படுத்தி துன்புறுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில், அவர்களுக்கு சரியான உணவு, உடை, உறைவிடம் எதையும் வழங்காமலே இந்தக் கொடுமைகளை மேற்கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
அடிமைகள் முதலில் அரசர்கள் குடும்பத்திற்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அரசர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். அடிமை முறை மெசபத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூக வழக்காக காணமுடிகிறது. ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, அடிமைத் தனம், இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். இவ்வாறு அடிமைகளாக்கப்பட்டவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் பயன்படுத்தப்பட்டதுடன், ஆபத்து நிறைந்த வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். யூத இனம், எகிப்து, கிரேக்கம், அரேபியா, சீனாவிலும் அடிமைமுறை பெரும்பங்கு வகித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அடிமைகள் சந்தையில் விற்கப்பட்டனர்.
மக்களாட்சிமுறையின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில் 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமைர் காலத்திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை காண முடிகின்றது. உரோமையர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாக்கினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின்படி கி.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் திருமணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது. உரோமையர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் பலம்பொருந்திய முன்னாள் போர் வீரர்களாகவும் இருந்துள்ளனர்.
பண்டைய இந்தியாவில் அடிமைகள் வியாபாரம் பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வசதி படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டனர். அடிமைகள் மீது ஆடு, மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச் சின்னம், சிவன் கோவில் அடிமைகளுக்கு திரிசூலச் சின்னம், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னம் இடப்பட்டன.
ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் புதுப் பரிமாணம் எடுத்து கொடிகட்டி பறந்த காலம் அது. 1730 -ஆம் ஆண்டில் பதினைந்து கப்பல்கள் மட்டுமே அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792 ஆம் ஆண்டில் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் வெகு சிறப்பாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் ஈட்டியது. 1760 இல் அமெரிக்காவில் ஆறு இலட்சத்து 97 கருப்பின அடிமைகள் வாழ்ந்துள்ளனர். 1861 இல் நாற்பது இலட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பியர்கள் அடிமை முறையை ஓர் உற்பத்தி முறையாக உலக பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக மாற்றினார்கள். உலகிலிருந்த அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களின் அடிமைமுறை மிகவும் மோசமான முறையாக கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்த அடிமை முறையால் ஏறக்குறைய ஆறு கோடி ஆப்பிரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடிமைகளாக்கப்பட்ட இந்தப் பல கோடி மக்கள் சித்திரவதை, நோய் மற்றும் மனத்துயரினால் மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள் .
மனித இன வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்தக் கோரினாலும் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துதான் அடிமைமுறையை மொத்தமாக ஒழிப்பதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. . இவர்1787-ல் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழுவின்’ முதல் தலைவர் ஆவார். பிரெஞ்சு புரட்சியின் போது முதல் குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. மாவீரன் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைகளுக்கான பல தடைகள் நீக்கப்பட்டன. 19- ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்தலும் தடை செய்யப்பட்டன.
அடிமைகளாக்கப்பட்ட மக்களின் பேச்சுரிமையும், சிந்தனை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் விளைவாக ஹெய்தி நாட்டில் 1791, ஆகஸ்ட் 23 ஆம் நாள் அடிமைகள் புரட்சி செய்தனர். இப்புரட்சியின் விளைவாக பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. சிலே 1823-இலும், ஸ்பெயின் 1837-இலும், டொமினிக்கன் குடியரசு 1844-இலும், ஈகுவதோர் 1854-இலும், பிரேசில் 1888-இலும் அடிமை வியாபார முறையைத் தடை செய்தன. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று உலகம் முழுவதும் “அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்” கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை யுனெஸ்கோ 1998 ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் நோக்கம், உலக வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய மனித உரிமை மீறலான அடிமை வணிகத்தின் கொடூரத்தை நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல், அதை முடிவுக்குக் கொண்டுவந்த போராட்டங்களையும் வீரர்களையும் கௌரவிப்பதாகும்.
அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கருப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. இன்றைக்கு அவர்கள் அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் முயற்சியால் அங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று 155 ஆண்டுகள் நிறைவடைந்த வேளையில் ஒரு கருப்பினத்தவரான பராக் ஒபாமாவை அரசுத்தலைவராக தரும் அளவிற்கு கருப்பினத்தவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். மேலும், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைக் காத்த நேபாளத்தின் அனுராதா கொய்ராலா போன்ற சமகால சமூகப் போராளிகளும் தொடர்ந்து பாடுபட்டு வருவதும் கவனத்துக்குரியது.
வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் ஆங்காங்கே அடிமை முறை விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இக்காலக்கட்டத்தில் அக்கறை படிந்த வடுக்களை நினைவூட்டுவதன் வழியாக பல படிப்பினைகளைப் பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.
தற்காலத்தில் அடிமைத்தனம் பல விதங்களாக நடந்து வருவதாக 'அடிமை ஒழிப்பு சங்கம்' தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் கூறப்பட்டுள்ள ஒரு சில அடிமைத்தனத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம். இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் பொருட்களை வைத்து மறைமுகமாக சிக்கிக்கொள்கின்றனர். இதில் ஒருநபர் முதலாளிகளிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தானும் சிக்கிக் கொண்டு தன் மனைவி மக்களையும் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றான். அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள், பணம் படைத்தவர்கள் என இவர்களில் பலரும் ஆட்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஏமாற்றி கட்டாயப்படுத்தி வேலைகளை வாங்கி துன்புறுத்தலிலோ, வன்முறையிலோ தள்ளுகிறார்கள். சில சமுதாய பிரச்சனைகளில் கீழ்மட்டத்தில் பிறந்தவர்களை பிற சமுதாயத்தினர் கட்டாய வேலை வாங்கி அடிமைகளாகவே வைத்துள்ளனர். இதற்கும் மேல் மனிதர்களை மனிதர்களே கடத்தி கொடுமை செய்கின்றனர். பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் இவர்களை கடத்தி கொடுமைபடுத்துவது இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் நவீன அடிமைத்தனத்தால் 5 கோடி மக்களும், கட்டாய வேலைகளில் 2.8 கோடி மக்களும், பாதிக்கப்பட்டு வருவதாகவும் ,13.8 கோடி சிறுவர்கள் அடிமைத் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. இவர்களின் உடல் நலத்துக்கு எந்தவித உத்திரவாதமும் இன்றி, எந்தவித பாதுகாப்பில்லாமல் வேலை செய்துவருகின்றனர். நவீன காலத்தில் வீடுகளில் வீட்டுவேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றும் பெண்களும் ஒரு வகையில் அடிமை வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வியாபாரச் சந்தையில் 39.4 விழுக்காட்டினர் பாதிக்கப்படுகின்றனர். அடிமைமுறையின் முக்கிய மூல காரணமாக, பணம், பொருள் மற்றும் பூமியின் மீதான ஆசை, மற்றவர்களை அடக்கி ஆளும் ஆதிக்க ஆசையே இருந்திருக்கிறது. எனவே தன்னலம் தவிர்த்து, அடக்கியாளும் மனநிலையைக் கைவிட்டு, இத்தகைய அடிமைத்தனங்களை எதிர்கொண்டு, சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை உரிமைகள் என்பதை வலியுறுத்தவே இந்த அடிமை வியாபார ஒழிப்பு தினம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. அடிமைத்தனம் மனித குலத்தின் இருண்ட அத்தியாயம் என்பதை உணர்ந்து அடிமை வணிகத்தின் வரலாற்றை பள்ளி, கல்லூரிகளில் கற்பித்து, புதிய தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய வேலை போன்ற சமகால அடிமைத்தனத்திற்கு எதிராக சட்ட ரீதியான, சமூக ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் காலத்தைச் சிறப்பாக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்