MAP

மனிதாபிமான உதவி செய்யும் நபர் மனிதாபிமான உதவி செய்யும் நபர்  (ANSA)

உறுதியான பாதுகாப்பு அர்ப்பணிப்புள்ள சேவை மனிதாபிமானத்திற்கு அடிப்படை

மனிதாபிமான உதவித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உறுதியான பாதுகாப்பு, பன்னாட்டு மனிதாபிமான சட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அரசியல் அர்ப்பணிப்பு போன்றவற்றிற்கு அவசரமாக அழைப்பு விடுத்துள்ளது பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்றும், அர்ப்பணிப்பு பொறுப்புடைமை இல்லாதவரை மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைச் செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்  காரித்தாஸ் பன்னாட்டு பொதுசெயலாளர் அலிஸ்டர் டட்டன்.

ஆகஸ்டு 19, செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் அறிக்கையில் இவ்வாறு வெளியிட்டுள்ள பொதுச் செயலாளர் அலிஸ்டர் டட்டன் அவர்கள், உறுதியான பாதுகாப்பு, ஆதரவு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தேவை, இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உலக மனிதாபிமான தினத்தன்று, போர் மண்டலங்களில் மக்களுக்கு உதவுபவர்களுக்கு உதவவும், பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், தங்களால் என்ன செய்ய முடியும், தங்கள் அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்று ஒரு நிமிடம் சிந்திக்க அனைவரும் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத வரை, மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைச் செயல்கள் தொடரும் என்றும் கூறியுள்ளார்  காரித்தாஸ் பன்னாட்டு பொதுசெயலாளர் அலிஸ்டர் டட்டன்.

மனிதாபிமான உதவித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உறுதியான பாதுகாப்பிற்கும், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அரசியல் அர்ப்பணிப்பிற்கும் அவசரமாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள டட்டன் அவர்கள், கிழக்க்கத்திய தலத்திருஅவைகளுக்கான உதவி நிறுவனங்களின் அண்மைய கூட்டத்தில், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தின் தொய்வு குறித்து கத்தோலிக்க திருஅவை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.

பன்னாட்டு சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் ஆற்றல் இனி பிணைக்கப்படவில்லை, மற்றவர்களை வற்புறுத்துவதற்கான உரிமை என்று கூறப்படுவதால் மாற்றப்படுகிறது என்பதைக் காண்பது கவலையளிக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

2024-ஆம் ஆண்டில் மட்டும், 20 நாடுகளில் 380 க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் தங்கள் முக்கிய பணிகளைச் செய்யும்போது கொல்லப்பட்டனர் என்றும், 2025-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 17 நாடுகளில் 128 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் அறிக்கைகள் இந்த நிலை குறைவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் டட்டன்.

162 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் கரிட்டாஸ் கூட்டமைப்பு, மோதல் மண்டலங்களில் முன்னணி அவசரகால பதிலளிப்பவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது. தெற்கு சூடான், கொலம்பியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற பல்வேறு நாடுகளில், உள்ளூர் திருச்சபை எப்போதும் உள்ளது, மற்ற அனைத்து நிறுவனங்களும் விலகியபோது உதவி மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஆகஸ்ட் 2025, 10:38