MAP

ஜெர்மனியின் அணுமின் நிலையம்   ஜெர்மனியின் அணுமின் நிலையம்   (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - ஆகஸ்ட் 29 அணுஆயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்

ஆயுத ஏற்றுமதிக்காக போட்டி போட்டுக் கொண்டு ஆயுத விற்பனை செய்வதால், பல நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. பாதுகாப்பு விடயத்தில் அதிக நிதியை ஒதுக்குவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் பல நாடுகள் திணறுகின்றன.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

அணுசக்தி என்பது மனித அறிவியலின் மிகப்பெரிய சாதனை என்றாலும், அதனை தவறாக பயன்படுத்தும் போது அது மனித குலத்தின் பேரழிவிற்கே வழிவகுக்கும்.அணு ஆயுதங்கள் மனித குலத்தின் உயிருக்கும், உலகின் அமைதிக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டபோது ஏற்பட்ட பெரும் அழிவும், ஆயிரக்கணக்கான மக்களின் உடனடி மரணமும், அடுத்த தலைமுறைகளிலும் தொடர்ந்த பாதிப்புகளும், இந்த ஆயுதங்களின் கொடூரத்தைக் காட்டியுள்ளன. இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் வீசப்பட்ட அணுகுண்டுகள், மனித வரலாற்றின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கின. அந்த அழிவின் நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. பாதுகாப்பு மற்றும் அதிகாரப் போட்டியின் பேரில் உலக நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்கியும், சோதனைகள் மேற்கொண்டும் வந்தன.

இந்தச் சோதனைகள் மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழகும் மிகப்பெரிய தீங்குகளை உண்டாக்குகின்றன. கதிரியக்கப் பொருட்கள் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி, புற்றுநோய், பிறவிக் குறைபாடு, நீண்டகால நோய்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை உருவாக்குகின்றன. தீவிரமான அச்சுறுத்தலாக மாறிய  அணு ஆயுத சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,  உலகளாவிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 29ஆம் தேதியை “அணுஆயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்” என அறிவித்தது.

1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் அணு ஆயுதச் சோதனை தொடங்கியதிலிருந்து, தற்போது வரை 2,000-க்கும் அதிகமான சோதனைகள் நடந்துள்ளன. அணுசக்திச் சோதனையின் தொடக்க நாட்களில், வளிமண்டலச் சோதனைகளால் அணுசக்தி வீழ்ச்சியின் ஆபத்துகள் ஒரு புறம் இருக்க, மனித வாழ்வில் அதன் பேரழிவு விளைவுகளைப் பற்றிச் சிறிது கூடக் கருத்தில் கொள்ளப்படவில்லை. நம் உலக வரலாற்றில் முந்தைய வரலாறுகளைப் படித்துப் பார்த்தால், அணு ஆயுதச் சோதனையின் திகிலூட்டும் மற்றும் சோகமான விளைவுகள் நமக்கு அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் நடந்த சோதனைகள், அரசியல் போட்டிகளின் அடையாளமாகவும், மக்களின் வாழ்க்கையை அழிக்கும் ஆபத்தாகவும் அமைந்தன.

அணுவாயுத சோதனைகளின் வரலாறு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல் வளர்ச்சியோடு தொடங்கியது. 1938ஆம் ஆண்டு ஜெர்மனிய விஞ்ஞானிகள் அணுவெடிப்பை (nuclear fission) கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, உலகம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டது. அதன் பின், அமெரிக்கா தலைமையிலான உலகின் முதல் அணுவாயுதம் உருவாக்கப்பட்டது. 1945 ஜூலை 16ஆம் தேதி அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் 'Trinity Test' எனப்படும் முதல் அணுசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டத்தில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணு குண்டு வீசி, நூற்றுக்கணக்கான உயிர்களை மாய்த்தது.

இதன் பின்னர், பல நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா, சோவியத் இரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா – தங்களது சொந்த அணுஆயுதங்களை உருவாக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டன. இந்த சோதனைகள் வானில், கடலில், நிலத்தில் நடத்தப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் ஷார் போம்பா (‘Tsar Bomba’ - 1961) என்பது இதுவரை நடந்த மிகப்பெரிய அணுசோதனையாகும்.

இவ்வாறு வளர்ந்த அணுசக்தி சோதனையின் பேராபத்தை உணர்ந்த கஜகஸ்தான் குடியரசு, 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று செமிபாலடின்ஸ்க் அணுசக்திச் சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூறும் நோக்கில்,  இந்நாளை அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 64-வது கூட்டத்தில்,  இத்தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 29 ஆம் நாள், 'அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான நாள்’ (International Day against Nuclear Tests) என்று அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தில், "அணு ஆயுதச் சோதனை வெடிப்புகள் அல்லது வேறு ஏதேனும் அணு வெடிப்புகளின் விளைவுகள் மற்றும் அணு ஆயுதம் இல்லாத உலகத்தின் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, அவை நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரிக்க வேண்டும்" என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளின் தொடக்க நினைவாகக் குறிக்கப்பட்டது. ஒவ்வொர் ஆண்டும், உலகெங்கிலும் கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள், போட்டிகள், வெளியீடுகள், விரிவுரைகள், ஊடக ஒளிபரப்புகள் மற்றும் பிற முயற்சிகள் என்று பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாள் நிறுவப்பட்டதிலிருந்து, இருதரப்பு மற்றும் பலதரப்பு அரசாங்க நிலை முன்னேற்றங்கள் மற்றும் குடிமைச் சமூகத்தில் பரந்த இயக்கங்கள் அணுசக்தி சோதனைகளைத் தடை செய்வதற்கான காரணத்தை முன்னெடுக்க உதவியுள்ளன. அதன் பிறகு, "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு எதிரான ஒரே முழுமையான உத்தரவாதம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணுவாயுதங்களை முற்றிலுமாக அகற்றுவது மட்டுமே" என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, செப்டம்பர் 26 ஆம் நாளை, "அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்" என்று அறிவித்தது. அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டது. பிற நிகழ்வுகள் மற்றும் செயல்கள், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்காக வலுவாக வாதிடும் உலகளாவிய சூழலை வளர்த்தெடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள்தான் இதனை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால், அந்நாடுகள் அதற்குத் தயாராக இல்லை. சொல்லப் போனால், இந்த ஐந்து நாடுகள்தான் பிற நாடுகளுக்குப் பெரிய அளவில் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்கின்றன. ஆயுத ஏற்றுமதிக்காக உலகையே பதற்றத்தில் வைத்திருக்கும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஆயுத விற்பனை செய்வதால், பல நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. பாதுகாப்பு விஷயத்தில் அதிக நிதியை ஒதுக்குவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் அந்நாடுகள் திணறுகின்றன. பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு சுருக்கமாக ICAN (International Campaign to Abolish Nuclear Weapons) என அழைக்கப்படுகிறது. இது அணு ஆயுதங்கள் மீதான தடை ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்கவும், முழுமையாக செயல்படுத்தவும் செயல்பட்டு வருகிறது. ஐகேன் அமைப்பு 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான இவ்வமைப்பு, 2017ஆம் ஆண்டுவாக்கில் 101 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அணுஆயுத ஒழிப்புக்காக போராடி வரும் இந்த அமைப்புக்கு 2017ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. "அணு ஆயுதங்கள் மீதான, `ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக இந்த விருது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணு ஆயுதச் சோதனைகள் வழியாக மனிதகுலம், சுற்றுச்சூழல் அனைத்தும் கதிரியக்கத் தன்மையால் மாசடைந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறுகின்றன. இதனால் தாவரங்கள், விலங்குகள் அழிந்து, இயற்கைச் சமநிலை சிதைவடைகிறது. சமூக ரீதியாக மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது; தலைமுறைகள் முழுவதும் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தைகள் உடல், மனக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அரசியல் ரீதியாக அணு சோதனைகள் அண்டை நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி போர் சூழ்நிலைகளை தூண்டுகின்றன, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகின்றன. எனவே, அணு ஆயுதச் சோதனைகள் மனித வாழ்வுக்கும், உலக அமைதிக்கும் பேராபத்தானவை என்பதால் அவை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டியது அவசியம்.

இந்த நாளில், அணுவாயுதங்கள் மனித குலத்திற்கும் இயற்கைக்கும் ஏற்படுத்தும் அழிவை நினைவுகூர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஆயுதமற்ற உலகை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே முதன்மையான  செய்தியாகிறது. அமைதி, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவை அணுவாயுதங்களை விட பலம் வாய்ந்தவை என்பதை நாம் உணர வேண்டும். அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள், உலக சமாதானத்தின் அவசியத்தை நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது. சில நாடுகள் இன்னும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அணுவாயுத மேம்பாட்டை நியாயப்படுத்துகின்றன. ஆயுதப் போட்டியால் அல்ல, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தால் மட்டுமே உலகம் முன்னேற முடியும். எனவே அணுவாயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நாகரிகமான மனிதனின் கடமை ஆகும்.

‘அணுசோதனைகள் இல்லா உலகம்’ என்பது கனவாக மட்டுமே இருக்கக்கூடாது, அது நிஜமாக மாற வேண்டும். ஒவ்வோர் ஆண்டும்  ஆகஸ்ட் 29-ஆம் நாளை நாம் வெறும் நாள் கொண்டாட்டமாக அல்லாது, அணுஅழிவுகளுக்கெதிரான உறுதியான எழுச்சியாக மாற்ற வேண்டும். உலகம் நம்மிடம் அல்ல, நாம் உலகத்தில் இருக்கிறோம். அதனால், இதை பாதுகாப்பது ஒவ்வொருவரது கடமையாக இருக்கிறது. கடமையை உணர்ந்து அணுசோதனைகளைத் தடுத்து, அமைதி மற்றும்  பசுமை பூமிக்காக ஒன்றாக எழுவோம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஆகஸ்ட் 2025, 14:14