உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நைஜீரியா மக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வடகிழக்கு நைஜீரியாவில் 33 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் நிலப்பரப்பின் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்றும் எடுத்துரைத்துள்ளது பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்.
வடகிழக்குப் பகுதிகளின் நிலைமையால், துன்பத்தில் உள்ள மக்கள், வீடுகளை விட்டு விட்டு வெளியேறுதல், குழந்தைத் தொழிலாளர், பள்ளிக்கல்வியை இழந்தவர்கள், குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர் என்றும், நாட்டின் வடமேற்குப் பகுதிகளும் இதே போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட குழுக்களில் இருப்பவர்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்றும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உணவுப் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளது செஞ்சிலுவைச் சங்க அறிக்கை.
உணவுப் பாதுகாப்பின்மை அமைப்பின் கூற்றுப்படி இந்த ஆண்டு கோடையில் முப்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மை அபாயத்தில் உள்ளனர் என்றும், இது அறுவடைக்கு முந்தைய பருவமாகிய இக்காலத்தில் நாட்டின் விவசாய மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றது அவ்வறிக்கை.
இந்த சூழ்நிலையின் விளைவுகளைக் குறைக்க பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 21,000 குடும்பங்கள், வறண்ட மற்றும் மழைக்காலங்களில் வளர்ப்பதற்கான விதைகளையும், விவசாய உற்பத்தியை எளிதாக்குவதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் விவசாய கருவிகளையும் பெற்றுள்ளன என்றும், பன்னாட்டு அமைப்பின் ஆதரவு சோளம், அரிசி, தக்காளி மற்றும் ஓக்ரா உள்ளிட்ட உணவை பல்வகைப்படுத்துவதையும், சாகுபடிக்கான நீர் விநியோக கட்டமைப்புகளை சரிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நைஜீரியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். மேலும் உணவுப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் உள் உறுதியற்ற தன்மை பரந்த மற்றும் கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் அபாயங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வறிக்கை.
நைஜீரியாவில், காலநிலை மாற்றம் வறட்சி மற்றும் வெள்ளம் என்னும் இரண்டு வடிவங்களை எடுத்துள்ளது என்றும், முதலாவது வடமேற்குப் பகுதிகளையும் இரண்டாவது கிழக்குப் பகுதிகளையும் பாதிக்கிறது என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்