MAP

உணவிற்காக காத்திருக்கும் காசா மக்கள் உணவிற்காக காத்திருக்கும் காசா மக்கள்   (AFP or licensors)

திட்டமிட்ட பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ள காசா மக்கள்

உலகம் பார்த்துக்கொண்டும், வரலாறு பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை, காசா வார்த்தைகளுக்காக அல்ல, மீட்பிற்காகக் காத்திருக்கிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

காசாவில் 112 குழந்தைகள் உள்பட 273 பேர் உணவின்மையால் உயிரிழந்துள்ளதாக உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 20-ஆம் தேதி இஸ்ரேலிய படைகள் காசா நகரில் நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஐ.நா. அதிகாரப்பூர்வமாக அந்தப் பகுதியில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது என்றும், அனால் அதற்கு முன்பே காசாவின் நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாக காரித்தாஸ் அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஐ. நா.வின் இந்த அறிவிப்பு, பல மாதங்களாக மனிதாபிமான அமைப்புகள் சொல்வதை உறுதிப்படுத்தும் துயரமான சான்று என்றும், காசா மக்கள் திட்டமிட்ட பசியின் பள்ளத்தில் நீண்ட காலமாக தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பஞ்சத்தைப் போலல்லாமல், இது மனிதனால் உண்டாக்கப்பட்ட நேரடி அரசியல் உத்தி என்றும், உதவிகளைத் தடுத்து, உணவு குவியல்கள் மீது குண்டுவீசி, அடிப்படைத் தேவைகளையும்  உள்கட்டமைப்புகளையும்  தகர்த்து, மக்களின் வாழ்க்கை முறையை அழிக்கும் ஒரு செயல் என்றும் காசா மக்களின் துயரத்தைச் சுட்டிக்காட்டியதுள்ளது அவ்வறிக்கை.

பசி மற்றும்  குண்டுவீச்சால், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பன்னாட்டு சமூகத்தின் வெற்று வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும், புறக்கணிப்புகளையும் வன்மையாகக் கண்டித்துள்ள உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, இச்செயல்கள் அனைத்துலக  மனிதாபிமானச்  சட்டம், அனைத்துலக  மனித உரிமைகள் சட்டம், அத்துடன் இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான  ஐ.நா. மாநாடுகளின் ஏராளமான விதிகளை தெளிவாக மீறுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளது.

காசாவின்  பஞ்சம் தார்மீக ஒருமைப்பாட்டின் ஒரு சோதனை என்று தெரிவித்துள்ள காரித்தாஸ் அமைப்பு, மக்களை பசியால் வதைக்கும் செயலானது வாழ்க்கையை அவமதிப்பது போன்றதாகும் என்றும், இந்நிலைகளைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது உடந்தையாக இருப்பதாகும் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து நம்பிக்கையாளர்களையும்,  மக்களையும், காசாவிற்காகத்  தங்கள் குரலை எழுப்பவும், அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதியை வலியுறுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளது அனைத்துலக  காரித்தாஸ் அமைப்பு.

உலகம் பார்த்துக்கொண்டும், வரலாறு பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை,  காசா வார்த்தைகளுக்காக அல்ல, மீட்பிற்காகக்  காத்திருக்கிறது என்று காரித்தாஸ் அமைப்பு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஆகஸ்ட் 2025, 13:39