வாரம் ஓர் அலசல் – இன்றைய நிலைகளுக்கு பொறுப்பேற்பது யார்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இன்றைய உலகில் மிக முக்கிய சமூகப் பிரச்சனைகள் என்னென்ன என்று இன்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?.
இப்புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களால் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதையா?,
உணவு, நீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதையா?,
குடிநீர் மற்றும் விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்றைய உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதையா?,
மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் காற்று, நீர் மற்றும் நில மாசுபாடு ஆகியவைகளையா?
சமூக அமைதியை சீர்குலைக்கும் அபாயத்தை கொண்டுள்ள, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையா?.
செய்திகள் உண்மையா பொய்யா என்பது தெரியாமல் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதையா?
அணுக்கழிவுகள், மின்சாரக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என நீரையும் நிலத்தையும் நாம் மாசுபடுத்தி வருவதையா?
உலக நாடுகளிடையே போரையும், அணுஆயுதப் போட்டியையும் குறிப்பிட விரும்புகிறீர்களா?
மனிதம் குறைந்து மிருகத்தை விட அதிகமாக மனிதர்கள் மதம் பிடித்து அலைவதையா?. அதையும் அரசியல் இலாபத்திற்கு சிலர் நன்றாகவே பயன்படுத்திக் கொள்வதையா?.
இன, ஜாதி வெறி, ஜாதி உட்பிரிவுகள் சண்டை என முரண்டுபிடித்து முரண்பட்டுப்போய் நிற்கிறோமே அதைச் சொல்கிறீர்களா?
கல்வியின் நோக்கமே வேலை பெறுவது என்றாகி, கற்றல் என்பது இங்கு வணிகமயமாகிவிட்டதை எடுத்துரைக்க வருகின்றீர்களா?.
இலஞ்சம் வாங்குதலும், ஊழல் செய்தலும் இன்று நடைமுறை வாழ்க்கையாகி விட்டதைக் கூற வருகிறீர்களா?
ஊழல் அரசியல்வாதிகளைத் தண்டிக்க இயலாத சட்டமும், அரசியலில் குண்டர் வன்முறையுமே நம்மை நசுக்கும் பிரச்சனை என்று கூறுகிறீர்களா?
சுய ஒழுக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவைகளை மறந்து, மனித உறவுகளுக்கும், நுண்ணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், அகவாழ்க்கைமுறைச் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனித இனம் தான்தோன்றித்தனமாக இருக்கிறதே அதைச் சொல்கிறீர்களா?
கடன்களை கழுத்துவரை வளரவிட்டு, அநியாய வட்டியால் ஏழைமக்களை மூழ்க அனுமதித்து, அதையும் வேடிக்கைப் பார்த்து நிற்கிறோமே அதைக் குறிப்பிட விரும்புகிறீர்களா?
இந்த கேள்விகளெல்லாம் எதனால் வருகின்றன?. மனித வாழ்வு பாழ்பட்டு நிற்பதற்கு காரணம் என்ன?. இத்தனைக் கேள்விகளைக் கேட்கும் மனிதன், எல்லாவற்றிற்கும், அனைத்து தீமைகளுக்கும் மூல காரணம் நம் சுயநலம்தான் என்று கூறினால் ஏற்றுக்கொள்வானா?
இன்றோ கோடிக்கணக்கான மக்கள் பசியுடனும் பட்டினியுடனும் இருக்கின்றனர். யார் காரணம்? தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார்.
இன்று மரபணு மாற்ற பயிர்கள் மற்றும் இரசாயன உரங்களின் உதவியால் நாம் உணவில் பெரும்பாலும் தன்னிறைவு பெற்று இருந்தாலும், எத்தியோப்பியா, சோமாலியா, வட கொரியா, சிரியா போன்ற நாடுகளிலும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் பசியின் கோரத்தாண்டவம் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொலைநோக்கு வளர்ச்சி இலக்கு. ஆனால் ஜூலையில் வெளியான அதனுடைய அறிக்கை, அந்த கெடு ஆண்டு வரும்போது உலக மக்கள் தொகையில் 6 விழுக்காட்டினர் அனைத்துலக ஏழ்மை நிலைக்குக் கீழே வசிப்பார்கள் என்று தெரிவிக்கிறது.
மக்கள் தொகையில் 3 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ஏழ்மை நிலைக்கு கீழே இருக்கும் வகையில் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று உலக வங்கி, சற்று தாராளமாகவே இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இப்போதைய நிலவரத்தின்படி பார்த்தால் அதை எட்ட முடியாது என்று தெரிகிறது.
தமிழர் தம் அறிவுச் செல்வமான ஔவை மூதாட்டி, “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார். உலகில் இன்றுள்ள மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டினர் இன்றும் வறுமையில் வாடுகின்றனர். செய்யாத ஒரு குற்றத்திற்கான தண்டனையே வறுமை என்பது உண்மையிலும் உண்மை.
அதற்கடுத்ததாக வருவது தண்ணீர் பற்றாக்குறை. நமக்குத் தெரியும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், மனிதன் விலங்குகள் தாவரங்கள் அனைத்திற்கும் நீர் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்பது. உலக தண்ணீரில் 97 விழுக்காடு கடல் நீராக இருப்பதால் குடிப்பதற்கு என்று அதனை நாம் பயன்படுத்த இயலாது. மீதமுள்ள 3 விழுக்காடு குடிப்பதற்கு இருந்தாலும் அதில் 2.5 விழுக்காடு பனிப்பாறைகளாகவும், துருவ பனி மூடிகளாகவும், வளிமண்டலத்திலும், மிக மிக ஆழமான நிலத்தடியிலும் இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலை. மீதமுள்ள 0.5 விழுக்காட்டு நீரே குடிநீராக பயன்படுத்தப் படுகிறது. அதிலும், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் நீர் மாசுபடுதல் ஆகிய காரணங்களால் குடிநீர் பயனிழந்துப் போகிறது. 820 கோடி மக்கள் வெறும் 0.5% நீரை பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவற்றையெல்லாம்விட, நதிநீர் பிரச்சினையில் நிறைய நாடுகளுக்குள் மோதல் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஓர் உலகப் போர் ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற அச்சமும் நிலவுகிறது.
உலகில் ஏறக்குறைய 400 பகுதிகளில் உள்ள மக்கள், ''மிகவும் மோசமான தண்ணீர் பிரச்சனை'' சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 75 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வியாதிகளால் ஒரு நாளைக்கு 2300 பேர் உலகில் இறக்கின்றனர்.
அடுத்து முக்கிய செய்தியாக பார்க்கப்படுவது, பூமி வெப்பமயமாதல். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் என இரண்டும் சேர்ந்து தொழில் மயமாக்கல் என்ற பெயரில் கார்பன் மோனாக்சைடு வாயுவை விண்வெளியில் கலந்துவருகின்றன. இத்தகைய வாயுக்கள் விண்வெளியில் பரவுவதால் இயற்கையான ஓசோன் மண்டலம் பாதிப்படைகிறது. ஓசோன் மண்டலம் ஓட்டையாவதால் சூரியனுடைய புற ஊதாக் கதிர்கள் நம் உடலில் புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கும். அடுத்ததாக அமில மழை பொழியக் கூடிய வாய்ப்புகள் வரும். பூமி வெப்பம் அடைவதன் காரணமாக, ஆர்டிக் அண்டார்டிக் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி விடும் சூழல் உள்ளதால் கடல் மட்டத்தில் நீர் உயர வாய்ப்பு உள்ளது. அப்படி கடல் மட்டம் உயர்ந்தால் கடல் நீர், கடற்கரை ஒட்டி உள்ள நாடுகளில் புகுந்து அந்த நகரங்கள் அழிந்து விட வாய்ப்பு உண்டு.
இதற்கிடையே, ஹிரோசிமா, நாகசாகி குண்டுவீச்சிற்குப் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், அணுஆயுதச் சோதனைகளில் பல கோடி டாலர்கள் தொடர்ந்து கொட்டப்பட்டுதான் வருகின்றது.
இதற்கெல்லாம் காரணம் யார் என சிந்தித்திருக்கிறோமா? நம்மால் தலையிட்டு சரிசெய்ய முடியாதது ஆயிரம் இருந்தாலும், சீர்கேடுகளைக் களைவதில் நம் பங்களிப்பையும் வழங்கமுடியும். ஆனால் ஏன் செய்ய முடியாமல் இருக்கிறது என்பதையும் கொஞ்சம் சிந்திப்போம்.
பலரும் வாழ்வில் குறுகிய மனநிலையுடன், சிறிய இலக்குகளே கொண்டிருக்கின்றனர். உலகு முழுவதற்கும் சேர்த்து எண்ணுகிற மனப்பான்மை குறைந்து வருகிறது. இளையத் தலைமுறையினர் பெருமளவு மேலைநாட்டினரின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது ஒரு மதிப்பு, மற்றும் தகுதி என்று கருதி அதன்படியே நடந்துகொள்வதுடன், நம் மண்ணின் கலாச்சார விழுமியங்களையும், நமக்கேயுரிய மதிப்பீடுகளையும் உள்வாங்கத் தவறிவருகின்றனர். இளைஞர்கள் யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அடிமையாகி, பல்வேறு சூதாட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை அழித்து வருவது நமக்குத் தெரியத்தான் செய்கின்றது. நம் குழந்தைகளும் நம்மைச் சுற்றியிருப்போரும் எப்படியிருக்கிறார்கள், இந்த விடயத்தில் நம் வழிகாட்டுதல் என்ன என சிந்தித்திருக்கிறோமா? பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உளப்பூர்வமான உரையாடல்களும், விளையாட்டுகளும் குறைவது பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
இயந்திர உலகில் நாமும் இயந்திரமாகிவிட்டு, பின் தொலைத்த உறவுகளைத் தேடுவதை நம் வாழ்விலும் கண்டிருக்கிறோமா? 'அனைவரையும் நேசியுங்கள்' என்ற ஒரே கருத்தினை அனைத்து மதங்களும் கூறியிருக்க, இப்போது அதற்கெல்லாம் புது விளக்கமளித்து மக்களைப் பிளவுப்படுத்துவதை உணர்ந்திருக்கிறோமா?
இந்த சமூகம் ஒருவரையொருவர் ஏமாற்றுவதில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறதே, ஏன் இப்படி உள்ளது என எப்போதாவது சுய சோதனைச் செய்திருக்கிறோமா?
ஒரு நாட்டின் வரலாற்றை செல்வந்தர்கள் மட்டும் எழுதவிட்டுவிட்டு, பழிகளை மட்டும் ஏழைகள் மீது போட்டு வருகிறோமே, யாரின் பொறுப்பின்மை இதற்கு காரணம்.
கொஞ்சம் சிந்தித்து பதில் சொல்லுங்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்