வாரம் ஓர் அலசல் – ஜூலை 17. - அனைத்துலக நீதி நாள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புலி, வேட்டையாடி மானைக் கொல்வது இயற்கையின் நியதி. ஒரு விலங்கு தன் பசிக்குக் கொல்லும் இந்த நியதிகளுக்கு தீர்ப்பெழுதும் நீதிகள் இல்லை. ஆனால், மனிதன் அப்படியில்லை. தன் இனமான மனிதனை ஏதேதோ காரணங்கள் சொல்லி தானே கொல்லும் சுயநலவாதியாக இருக்கிறான். எனவேதான், சட்டங்களும் வரையறைகளும், கட்டுப்பாடுகளும், சரி, தவறுகளும், நீதியும் கொண்டு ஒரு மனிதனின் செயல்பாடுகளை நாம் அளவிட வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் உற்றுநோக்கினோமென்றால், வெறும் இடமும் காலமும் மட்டுமே தீர்மானிக்கும் சரிகளும் தவறுகளும்தான் மனித வாழக்கையை நகர்த்திச் செல்கின்றன. அதாவது, ஒரு செயலில் நியாய அநியாயங்களை முதலில் நாம் வாழும் இடம் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சரியெனப் பார்க்கப்படும் ஒரு வழக்கம் அமெரிக்காவில் தவறு எனப் பார்க்கப்படலாம். இரண்டாவது, அதைக் காலமும் தீர்மானிக்கிறது. 1920-ல் தவறு என நம்பப்பட்ட விடயம் 2025-ல் சரியானதாக, நடைமுறை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகப் பார்க்கப்படலாம். எனவே, சரி தவறு என்பது ஓரளவு காலமும் இடமும் தீர்மானிப்பவை. அந்த சரிகளுக்கும் தவறுகளுக்கும் மாநில வாரியாக, தேசங்கள் வாரியாகப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, காலத்திற்குத் தகுந்தவாறு இந்தச் சட்டங்கள் திருத்தியெழுதப்பட்டு மேம்படுத்தவும் படுகின்றன.
ஆனால், குற்றங்கள் என்பது வேறு. குறிப்பாக, மனித உயிர்களை வதைக்கும் பெரும் குற்றங்கள் உலகம் முழுவதும் ஒரே அளவுகோல் கொண்டே அளக்கப்படுகின்றன. ஆனால், இவற்றை விசாரிக்க, தண்டனை வழங்க உலகம் முழுவதும் ஒரே சட்டமும், அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரமும், அமைப்பும் இல்லாமல் இருந்தது. இப்படியான ஒரு பொதுவான அமைப்பு உருவாவதன் தேவையை உலகுக்கு உணர்த்தின முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில், அதாவது மனித உரிமை மீறல்கள் கட்டுப்பாடின்றி சென்ற நிலையில், ஜூலை 17, 1998-ல் உரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal court) உருவாக்குவதற்கான உரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. 2010-ஆம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அங்கத்தினர் நாடுகள், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தை உகாண்டாவின் கம்பாலாவில் நடத்தின. அந்தக் கூட்டத்தில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, உரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17-ஆம் தேதியை அனைத்துலக நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அனைத்துலக நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், அனைத்துலக நீதி என்பது என்ன என்ற புரிதலை உருவாக்கவும் இந்த தினம் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இன்று உலகில் இரண்டு அனைத்துலக நீதி அமைப்புகள் உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice). இதில் ஐ.நா.வில் அங்கத்தினராக இருக்கும் அனைத்து நாடுகளும் உறுப்பினராக இருக்கும். மற்றொன்று, உரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court). இதில் 1998-ல் உரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகளாக இருக்கும். முதலில், இனப் படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகிய மூன்று குற்றங்களை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் ஒருவர் தேசிய இராணுவத்தைப் பயன்படுத்தி தேவையற்ற தாக்குதலில் ஈடுபடும் குற்றமும் சேர்க்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி கொண்டாடப்படும் உலக நீதி நாள், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டுவதையும், குற்றவாளிகளை சட்டத்தின்படி தண்டிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதும், நீதிமன்றங்களின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பதை உறுதி செய்வதும் உலக நீதி நாளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. தீவிரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு அமைதி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வது குறித்து இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
'எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்' - என்று பாடினார் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனாக இருந்தாலும், அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது. அவ்வேளைகளில், நாடுகளைத் தாண்டியும் பன்னாட்டு அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.
போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று பல வகையான குற்றச் செயல்களைப் பற்றி விசாரிக்க அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் செயல்படுகிறது. ஜூலை 17-ஆம் நாள் அன்று, பெண்கள் மீதான வன்முறைகள், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குற்றம் நடக்கும் இடம் எங்கு இருந்தாலும், குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதற்கான உலகளாவிய உறுதியை பிரதிபலிப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, மற்றும், முன்னெச்சரிக்கையாக வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.
உலக நீதிக்கான தினம் என்பது ஒரு குற்றவாளி எங்கே இருந்தாலும், நீதியிலிருந்து அவன் தப்பிக்க இயலாது என்பதற்கான உறுதியை வலியுறுத்தும் நாள். ஏனெனில் நீதியின் வழியாகத்தான் அமைதியைக் கொணர வேண்டும். நீதியற்ற தன்மை, அமைதியற்ற சூழலை உருவாக்குகிறது என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்கே நீதி நசுக்கப்படுகிறதோ, புறக்கணிக்கப்படுகிறதோ அங்கே அமைதி தனது அமைதியை இழக்கிறது, வாழ்வும் அர்த்தமிழக்கிறது.
மனிதனின் தேடல் எப்போதுமே நீதி மற்றும் அமைதியை நோக்கியே இருக்கிறது. குடும்பங்கள் அமைதியாக இருக்க வேண்டும், குழந்தைகள் அமைதியாய் இருக்க வேண்டும், பணி சூழல் அமைதியாக இருக்க வேண்டும், நம் சமூகம், நாடு அமைதியாக இருக்க வேண்டும் என எத்தனையோ அமைதி குறித்த ஆசைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அமைதியின் விதை நீதியில் முளைக்கிறது என்ற அடிப்படை உண்மையை உணரத் தவறி விடுகிறோம். இதனை கருத்தில் கொண்டுதான் உலக நீதி நாள் சிறப்பிக்கப்படுகின்றது. அத்துமீறல்களுக்கான அங்கீகாரங்களை துடைத்தெறிவதுதான் இந்த நாளின் நோக்கம்.
சட்டங்களின் பக்கங்களைப் புரட்டி நீதியை நிர்ணயிக்க முயலும் இன்றைய உலகில், இதயத்தின் பக்கங்களைப் புரட்டி நீதியை நிலை நாட்ட நாம் முன்வந்தால் நிச்சயம் இப்படி ஒரு நாளின் தேவையே இருக்காது. மனித வாழ்க்கையில் நாம் அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்குள் வாழ்வதை நீதியான வாழ்க்கை என்றுரைக்கிறோம். அந்த வரையறைகள் நீதியைப் பெறுவதையும் அமைதியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதைத்தான் அனைத்துலக நீதி நாள் கொண்டுவர முயல்கிறது.
“நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்” என நீதிமொழிகள் 21:15ல் நாம் காண்கிறோம். நமது வாழ்வில் நாம் நீதியைக் கண்டு மகிழ்பவர்களாக இருப்போமானால், நமது வாழ்க்கை சரியான பாதையில் நடக்கிறது என்பது திண்ணம். நம் ஒவ்வொருவரின் இலக்கும் நீதியையும், அமைதியையும் நோக்கிய பயணமே. அதை இறைவன் நமக்கு அருள வேண்டுமெனும் பார்வையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். நீதியை நோக்கிய நம் பயணம், அனைவரையும் சரிசமமாக நடத்துவதையும், பிறருக்காகப் பரிந்து பேசுவதையும், நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்பதையும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிப்பதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அமைதியும் சகிப்புத்தன்மையும் அப்பயணத்தில் இணைந்துச் செல்ல வேண்டும். இதன் வழியாகத்தான் நீதி நிறைந்த ஓர் உலகை நாம் படைக்க முடியும். அதன் வழியாகத்தான் அமைதி பிறக்கும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்