MAP

சூடானில் துயருறும் மக்கள் சூடானில் துயருறும் மக்கள்   (AFP or licensors)

சூடானில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் !

சூடானின் வடக்குக் கோர்தோபான் மாநிலத்தின் நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்துள்ளதுடன், மோதல்களினால் இடம்பெயர்வுகளும் அதிகரித்துள்ளன: யூனிசெஃப் அமைப்பு

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

சூடானின் வடக்குக் கோர்தோபான் மாநிலத்தில் உள்ள பாறா நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள ஷக் அல் நோம், ஹிலத் ஹமீத் உள்ளிட்ட கிராமங்களில் இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல்களில், 24 குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 450-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில், மேலும் பலர்  காணாமல் போயுள்ளனர் என்றும், பலியான குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் யூனிசெஃப் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது..

யூனிசெஃப் இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அதேவேளை, மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைவரும் உடனடியாக வன்முறையை கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

தாக்குதலின் எந்தச் சூழலிலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் குறிவைத்து தாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றும், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் நீதி இருக்கைக்கு முன் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் யூனிசெஃப் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் வடக்குக் கோர்தோபானின்  நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்துள்ளது என்றும், மோதல்களினால் இடம்பெயர்வுகள் அதிகரித்துள்ளன என்றும் தகவல் அளித்துள்ளது யூனிசெஃப்.

2024-ஆம் ஆண்டில், குழந்தைகளைக் கொல்வது, ஊனப்படுத்துவது, ஆயுதப்படைகள் மற்றும் ஆயுதக் குழுக்களில் குழந்தைகளைச் சேர்ப்பது, அல்லது பயன்படுத்துவது, பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் போன்ற குழந்தைகளுக்கு எதிரான கடுமையான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது யூனிசெஃப் அமைப்பு.

இவ்வகையான வன்முறைகளில் 6 விழுக்காட்டுத் தாக்குதல்கள் வடக்கு கோர்தோபானில் இடம்பெற்றுள்ளன என்றும், 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது என்றும் யூனிசெஃப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜூலை 2025, 14:25