கத்தாரில் DRC-க்கான பகுதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) அரசிற்கும், M23 கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையே கத்தாரின் தோஹாவில் ஒரு பகுதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும், இது போரினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
இந்த உறுதி ஆவணத்தில் (declaration) நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் அரசு அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முன்னெடுப்பு ஆகியவை அடங்கும் என்றும், விரைவில் ஒரு முழு அமைதி ஒப்பந்தத்திற்கான முறையான பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது.
போர் நிறுத்தம் இருந்தபோதிலும், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் வன்முறை தொடர்கிறது என்றும், குறிப்பாக, அங்குக் கனிம வளம் நிறைந்த பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்கள் நீடித்து வருகின்றன என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் M23 கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் ருவாண்டா துருப்புக்கள் சம்பந்தப்பட்ட அண்மைய மோதல்கள், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் பெருமளவிலான இடம்பெயர்வுகளுக்கும் வழிவகுத்துள்ளன என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீடித்த அமைதியை அடைய முயற்சி, ஆதரவு மற்றும் சலுகைகளின் அவசியத்தை காங்கோ ஜனநாயகக் குடியரசின் உள்துறை அமைச்சர் ஜாக்குமைன் ஷபானி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பேட்ரிக் முயாயா இருவரும் இவ்வொப்பந்தத்தின்போது வலியுறுத்தியதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்த அளவிலான அமைதி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படைகளை மீண்டும் நிலைநிறுத்தி நிர்வாகத்தை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர் என்றும் அச்செய்தித் தொகுப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்