காசாவில் இடம்பெற்று வரும் கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் Alistair Dutton அவர்கள் அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
வத்திக்கான் செய்திக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த Dutton அவர்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வேண்டுகோளை எடுத்துக்காட்டியதுடன், இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மீதான கட்டுப்பாடுகளையும் கண்டித்துள்ளார்.
காரித்தாஸ் ஆலோசனைமுகாமில் இரண்டு பேர் கொல்லப்பட்டது உட்பட, கிறிஸ்தவர்களின் இறப்புகளுக்கு வருத்தம் தெரிவித்த Dutton அவர்கள், காசாவில் 21 இலட்சம் மக்கள் பசி, தங்குமிடம் இல்லாமை மற்றும் மருத்துவப் பொருள்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகலை எதிர்கொள்வதன் கடுமையான தேவைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலிய அரசின் கடுமையான உதவி கட்டுப்பாடுகளை விமர்சித்த Dutton அவர்கள், உதவி வந்தாலும் கூட, அதைப் பெறுவதற்கு முயற்சிக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீனியர்களை இரஃபாவில் உள்ள "மனிதாபிமான நகரம்" என்று அழைக்கப்படும் இடத்திற்கு மாற்றும் இஸ்ரேலிய அரசின் திட்டங்களையும் கண்டித்த Dutton அவர்கள், அந்த இடம் வாழத் தகுதியற்றது என்றும், அது இன அழிப்புக்கு ஒத்ததாக இருக்கும் என்றும் விவரித்துள்ளார்.
கட்டாயக் குடியேற்றம் அனைத்துலகச் சட்டத்தை மீறுவதாக குறிப்பிட்ட Dutton அவர்கள், இஸ்ரேல் அரசு அதன் செயல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், துன்பங்கள் விளைவிப்பதை நிறுத்தவும் உலகச் சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் இடம்பெற்று வரும் குண்டுவெடிப்பு மற்றும் அட்டூழியங்கள் இப்போதே நிறுத்தப்பட வேண்டும் என்பதையும், முழுமையான, பாதுகாப்பான மனிதாபிமான அணுகல் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இந்நேர்காணலில் தனது முக்கியமான செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார் Dutton
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்