MAP

குழந்தைத் தொழிலாளர் குழந்தைத் தொழிலாளர்  (AFP or licensors)

2024-ல் உலகில் 13.8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர்!

குழந்தைத் தொழிலாளர் முறையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அதாவது, ஏறக்குறைய 8 கோடியே 70 இலட்சம் குழந்தைகள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பும், யுனிசெஃப் நிறுவனமும், ஜூன் 12, வியாழக்கிழமையன்று இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 13 கோடியே 80 இலட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்தனர் என்றும், மேலும் ஏறக்குறைய 5 கோடியே 40 இலட்சம் குழந்தைகள் அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கும் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர் முறையில் 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் குறைந்துள்ளதாக அண்மையத் தரவுகள் காட்டுகின்றன என்றும், இது 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பதிவான ஆபத்தான அதிகரிப்பை மாற்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது அவற்றின் அறிக்கை.

அதேவேளையில், இந்த நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், 2025-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் இலக்கை உலகம் அடையத் தவறிவிட்டது என்றும் அவற்றின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கில்பர்ட் எஃப். ஹவுங்போ அவர்கள், "எங்கள் அறிக்கையின் கண்டுபிடிப்புகள் நம்பிக்கையை அளிக்கின்றன, மேலும் முன்னேற்றம் சாத்தியம் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

அத்துடன், குழந்தைகள் வேலையில் அல்ல, பள்ளியில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் தாங்களாகவே ஆதரிக்கப்பட வேண்டும், மேலும் நல்ல வேலைகள் கிடைக்க வேண்டும், இதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை சந்தைகளில் பொருட்களை விற்கவோ அல்லது குடும்பப் பண்ணைகளில் வேலை செய்யவோ வைப்பதற்குப் பதிலாக வகுப்பறையிலேயே வைத்திருக்க முடியும் என்று எடுத்துக்காட்டியுள்ள ஹவுங்போ அவர்கள், இருப்பினும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் எங்கள் இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நாம் நம்பிக்கையற்ற நிலையில் நோக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜூன் 2025, 15:44