MAP

மழைக்காடு மழைக்காடு&Բ;

வாரம் ஓர் அலசல் - ஜூன் 22. உலக மழைக் காடுகள் தினம்

மக்களிடம் மழைக்காடுகளின் முக்கியத்துவம், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி மழைக்காடுகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

'உலக மழைக்காடுகள் தினம்' என்பது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. நம் வருங்காலத் தலைமுறைக்கு மழைக்காடுகளைப் பாதுகாத்து வழங்குவது குறித்த விழிப்புணர்வைத் தருவதுதான் இந்த நாளின் நோக்கம். 2025ஆம் ஆண்டிற்கான தலைப்பாக "மழைக் காடுகளைப் பாதுகாப்பதில் உலகை வலுப்படுத்துதல்" என்பது எடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காடுகளின் முக்கியத்துவம்

மழைக்காடுகள், பெயர் குறிப்பிடுவது போல, ஏராளமான மழையைப் பெறும் காடுகள். அவை அடிக்கடி மழையைப் பெறுகின்றன, மேலும் சதுர மீட்டருக்கு மழைப்பொழிவு சாதாரண காடுகளை விட மிக அதிகம். அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் மழைக்காடுகள் செழித்து வளர்கின்றன. இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கப் பகுதிகளில் இந்தக் காடுகள் காணப்படுகின்றன.

மழைக்காடுகள் அதிகளவு ஆக்ஸிஜனை வழங்குவதால் உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஆக்ஸிஜனின் 20 விழுக்காட்டை இக்காடுகள் வழங்குகின்றன. வானிலை மற்றும் சுற்றுசூழலின் வெப்பநிலை கட்டுப்பாட்டாளர்களாக மழைக்காடுகள் விளங்குகின்றன.

உலகில் தற்போது உள்ள மருந்துக‌ளில் 25 விழுக்காடு இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும். மழைக்காடானது உலகின் உணவுக்கிடங்காகவும் உள்ளது. காப்பி, வாழை, கொட்டைகள், அன்னாசிப்பழங்கள், கோகோ, காகிதம், மூங்கில், இரப்பர், தேங்காய், வென்னிலா, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவைகள் இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவையே.

இக்காடுகள் உலகில் உள்ள நீர்சுழற்சியினை சமநிலைப்படுத்துகின்றன. பொதுவாக, பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக காடுகள் செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது மழை நீரில் 3 விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காட்டு நீரும் உடனடியாக வெளியேறி விடுகின்றது. ஆனால், காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிழுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. இதுதான் காடுகளை நம்பி வாழும் மக்களுக்கு மிகப்பெரும் கொடையாக அமைந்துள்ளது. பூமியில் உள்ள நீரினை உறிஞ்சி காற்று மண்டலத்தில் வெளியிட்டு மழையைப் பெய்யச் செய்கிறது. மழைக்காடுகளில் உள்ள மரங்கள் மண்அரிப்பு, வெள்ளப்பெருக்கு, வண்டல் படிவு ஆகியவற்றைத் தடுக்கின்றன.

வெப்பமண்டல மழைக்காடுகளில் 30 மில்லியன் தாவர மற்றும் விலங்கு இனங்கள் வாழ்கின்றன. உலகின் தாவர இனங்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு மழைக்காடுகளில் வளர்கிறது. ஆனால், மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ளது. இவ்வாழிடத்தில் உயிரினங்கள் இன்றைக்கும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1999 முதல் 2015 வரையிலான காலத்தில் இங்கு 2000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நூற்றுக்கணக்கான உயிரினங்களைக் கண்டுபிடித்துவருகின்றனர்.

உலகின் முக்கிய 10 மழைக்காடுகள் குறித்து தற்போது நோக்குவோம்.

1. அமேசான் மழைக்காடு

அமேசான் மழைக்காடு 55,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு முதல் 10 மழைக்காடு பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது. இது வெப்ப மண்டல மழைக்காடு வகையினைச் சார்ந்தது.

இது பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவதோர், பொலிவியா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளில், அமேசான் நதியின் வடிநிலப் பகுதிகளில் காணப்படுகிறது. இக்காட்டின் 60 விழுக்காடு பிரேசிலில் காணப்படுகிறது.

இக்காட்டில் 16,000 இனங்களாக பகுக்கப்பட்ட ஏறக்குறைய 390 பில்லியன் மரங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள உயிரினங்களில் 2.5 மில்லியன் பூச்சிகள், 2000 வகையான பாலூட்டிகள் மற்றும் பறவைகள், பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் அடங்கும்.

இன்றுவரை இப்பகுதியில் பொருளாதார மற்றும் சமூக ஆர்வமுள்ள 4,38,000 வகையான தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல கண்டுபிடிக்கப்பட உள்ளன.

2. காங்கோ மழைக்காடு

17,80,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட காங்கோ மழைக்காடு இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது வெப்ப மண்டல மழைக்காட்டினைச் சார்ந்தது. காங்கோ காடுகள் ஏறத்தாழ 85 விழுக்காடு அளவிற்கு அழிக்கப்பட்டு, மனிதரின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி வருகிறது. 2050ம் ஆண்டில் இது இன்னும் உச்சம்தொடும் என்று மத்திய ஆப்பிரிக்காவில் காடழிப்பு பற்றிய மதிப்பீடுகள் கணித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் வாழ்வதற்கு காடுகளை நம்பியுள்ள நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும் 4 கோடி மக்கள் இந்தக் காடுகளில் வாழ்கின்றனர்.

காமரூன், காபோன், காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, மத்திய ஆப்ரிக்கன் குடியரசு, ஈக்குவதோரியல் கினியா ஆகிய ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.

இக்காடுகள் அதன் உயர்பல்லுயிரியலுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 600-க்கு மேற்பட்ட மர இனங்கள் மற்றும் 10,000 விலங்கு இனங்கள் காணப்படுகின்றன.

3. நியூகினியா மழைக்காடு

நியூகினியா மழைக்காடு 2,88,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆசிய-பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இது வெப்ப மண்டல மழைக் காட்டினைச் சார்ந்தது. இந்தோனேசியா, பாப்பு நியூகினியா போன்ற நாடுகளில் இக்காடுகள் பரவிக் காணப்படுகின்றன.

4. வால்டிவியன் மிதவெப்பமண்டல மழைக்காடு

2,48,100 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு நான்காவது இடத்தில் உள்ள இது, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் உள்ள சிலே, அர்ஜென்டினா பகுதிகளில் காணப்படுகிறது.

5. கிழக்கு ஆஸ்திரேலிய மித வெப்ப மண்டல மழைக்காடுகள்

2,22,100 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள

இது, ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ்ஸின் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து, தென்கிழக்கு குயின்ஸ்லாந்து வரை நீண்டுள்ளது. யுனஸ்கோ நிறுவனத்தால் உலகப் பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, நீலமலைகள் தேசியப்பூங்கா இவ்விடத்தில் அடங்கியுள்ளது.

6. போர்னியோ மழைக்காடு

2,20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவினைக் கொண்ட போர்னியா மழைக்காடு இப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வெப்ப மண்டல மழைக் காட்டினைச் சார்ந்த இது மலே தீவுகள் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் அமைந்துள்ளது. 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதான இது, உலகின் மிகவும் பழமையானதாககக் கருதப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய மழைக்காடாகும்.

7. பசிபிக் மித வெப்ப மண்டல மழைக்காடு

60,346 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டுள்ள இது, பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மித வெப்ப மண்டல மழைக்காடு வகையைச் சார்ந்த இது கானடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா பகுதிகளை உள்ளடக்கியது.

ஏறக்குறைய 4000 கிமீ நீளத்தில் குறுகி கடலோரமாக இது பரவியுள்ளது. இது உலகின் கடலோர மிதமான மழைகாடுகளில் முதலிடம் பெறுகிறது.

8. சுமத்திரன் மழைக்காடு

25,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டுள்ள இப்பகுதி  10 மழைக்காடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெப்பமண்டல மழைக்காடு வகையினைச் சார்ந்த இது, மூன்று இந்தோனேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது.

9. போசாவாஸ் பாதுகாக்கப்பட்ட மழைக்காடு

20,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட போசாவாஸ் பாதுகாக்கப்பட்ட மழைக்காடு இப்பட்டிலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெப்ப மண்டல மழைகாடு வகையினைச் சார்ந்த இது மத்திய‌ அமெரிக்காவின் நிகரகுவா நாட்டில் உள்ளது. இந்நாட்டின் 15 விழுக்காட்டுப் பரப்பினை ஆக்கிரமித்துள்ள இக்காட்டில் ஆயிரக்கணக்கான மரங்களும், 2,00,000 பூச்சியினங்களும் காணப்படுகின்றன.

10. வெஸ்ட்லேண்ட் மித வெப்ப மண்டல மழைக்காடு

11,880 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட இம்மழைக்காடு, மழைக்காடு பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது நியூசிலாந்தின் தெற்கு தீவில், மத்திய மேற்கு கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ளது.

மழைக்காடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

"தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு மழைக்காடு ஏற்கனவே தொலைந்துவிட்டது". தற்போது காடுகள் அழிப்பு உள்ளிட்ட மனித நடவடிக்கைகளால் மழைக்காடு மட்டுமின்றி அதிலுள்ள விலங்குகளும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

காலநிலை மாறுபாடு அமேசான் மற்றும் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியநாடுகளின் காடுகளில் வறட்சியை உண்டாக்கியுள்ளது. காட்டில் வறட்சி ஏற்படும்போது காட்டுத்தீ உண்டாகி காற்று மாசுப்பாட்டை அதிகளவு ஏற்படுத்துகிறது. அமேசான் மழைக்காடுகளின் ஏறக்குறைய 40% காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பகுதிகளாக  உள்ளன. தீ காரணமாக 2024ஆம் ஆண்டில் பேரளவிலான மழைக்காடுகள் அழிந்தன. நிமிடத்துக்கு 18 கால்பந்துத் திடல்களுக்கு நிகரான பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் தீக்கிரையாகின.

பருவநிலை மாற்றம், கடுமையான வெப்பம், மழைக்காடுகள் உள்ள பகுதிகளில் விவசாய விரிவாக்கம் ஆகியவை அதற்குக் காரணம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தீயில் அழிந்த மழைக்காடுகளில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை பிரேசிலுக்கும் பொலிவியாவுக்கும் சொந்தமானவை.

நாம் செய்ய வேண்டியவை

நாம் உண்டாக்கும் கழிவுப்பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். முடிந்தளவு மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடிய பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

மக்களிடம் மழைக்காடுகளின் முக்கியத்துவம், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி மழைக்காடுகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். ஏற்கனவே அமேசான் மழைக்காடுகளின் ஐந்தில் ஒரு பகுதி இன்றைய தொழிற்துறை வளர்ச்சிக்கு முன்பே அழிந்து விட்டது. தற்போதைய அழிவு இன்னும் பேரழிவைக் கொண்டு வரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

மழைக்காடுகளை நாம் காப்பாற்றவில்லை என்றால் அங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும். அது மட்டுமில்லாமல் மழைப்பொழிவு, நதிகளில் தண்ணீர் வருவது உள்ளிட்ட இயற்கை வளங்களும் நமக்குக் கிடைக்காமல் போகும். உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நாம் பிழைத்துக் கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூன் 2025, 13:06