வாரம் ஓர் அலசல் - ஜூன் 26.- போதைப்பொருள் ஒழிப்பு தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி 'பன்னாட்டு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும் என்பதால், இந்நாளின் முக்கியத்துவம் நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏறக்குறைய 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையாவோரில் 85 விழுக்காடு படித்தவர்கள், அதில் 75 விழுக்காடு இளையோர் ஆவர்.
மது, சிகரெட் ஆகியவை முதலில் கையிலெடுக்கப்பட்டு பிறகு அதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. இவர்கள் மட்டுமின்றி இவர்களின் குடும்பங்கள், இவர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் என்று பலருடைய வாழ்வும் சீரழிகின்றது. தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டு நாட்டின் முன்னேற்றப் பாதைக்கே போதை தடையாக இருக்கிறது.
இதில் படித்த இளைஞர்கள், செல்வந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கண்டும் காணாத அதிகாரிகளும் இருக்கின்றார்கள். இதனால் ஊழலும் இலஞ்சமும் பெருகுகிறது. போதைப்பொருள்களைக் கடத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் குடும்பமும் பாதிக்கப்படுவதோடு பொருளாதார நெருக்கடியால் பரிதாபமான நிலையில் தற்கொலையும் நடந்து கொண்டிருக்கிறது.
வாழ்வு தரும் பாடம்
அவர் பெயர் ஆல்பர்ட். ஆசியாவின் ஒர் ஏழை நட்டில் பிறந்து வளர்ந்தவர். 14 வயதிலேயே மதுபானம் குடிக்கத் தொடங்கிவிட்டார். இந்தப் பழக்கம் அவரது திருமணம் முடிந்த பின்னரும் 53 வயது வரை நீடித்தது. இதன் காரணமாக பல்வேறு துன்பங்களை அவர் அனுபவித்தார். குறிப்பாகத் தனது கௌரவத்தை 'போதைப் பழக்கம்' இல்லாமல் ஆக்கிவிட்டதாக, அப்பழக்கத்திலிருந்து வெளிவந்துள்ள அவர் இப்போது, தன் 64ஆம் வயதில் வருந்துகிறார்.
அவரது மனைவியின் பெரும் முயற்சியால், புனர்வாழ்வு இல்லமொன்றில் சேர்க்கப்பட்ட ஆல்பர்ட், வெறும் 36 நாட்களுக்குள் அவரது 39 ஆண்டு கால போதைப் பழக்கத்தைக் கைவிட்டார். தனது போதைப் பழக்கத்தின் காரணமாக திருடும் நிலைக்குக்கூட சென்றதாகவும், அதனால், தனது குடும்பம் பல முறை அவமானத்தை எதிர்கொண்டதாகவும் கூறுகிறார் அவர்.
மதுவுக்கு அடிமையாக இருந்த நான், ஹெரோயின் எடுக்கத் தொடங்கிய பிறகு, எனது தொழில், கௌரவம் எல்லாவற்றையும் இழக்கத் தொடங்கினேன். கையில் காசு இல்லாதபோது ஹெரோயின் வாங்குவதற்காக நண்பர்களிடம் கடன் கேட்டேன், அதற்காகப் பொய் கூறினேன். வீட்டில் பணம், நகை, பெறுமதியான பொருட்கள் எனப் பலவற்றையும் திருடினேன். ஒரு கட்டத்தில் வேறு இடங்களிலும் திருடும் நிலைக்கு ஆளானேன். போதை நிலையில் யாருடனும் பேச முடியாது என்பதால், போதைப் பழக்கம் என்னைத் தனிமைப்படுத்தியது" என்கிறார்.
ஹேரோயின் பழக்கத்தால் உடலில் இருந்த நோய்கள் அனைத்தும் அதிகரித்தன. கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. உடல் கடுமையாக பலவீனமடைந்தது. மனம் ஒருவித பதற்றத்திற்கு உள்ளேயே உழன்றது. போதையால் ஏற்பட்ட சில கெட்ட பழக்கங்கங்கள் காரணமாக காவல்துறையால் சிலமுறை கைது செய்யப்பட்டார். ஹெரோயின் பழக்கத்தைத் திடீரென நிறுத்த முடிவுச் செய்தார். அதற்கு அடுத்து வந்த நாட்களில், உடல் மற்றும் உளவியல்ரீதியாக மிக அதிகமான சிரமங்களை அனுபவித்தார். தூக்கமின்மை, பசியின்மை, அதிக கோபம் போன்றவை ஏற்பட்டன. ஹெரோயின் பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். அதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒரு நாள் ஆல்பர்ட்டின் மனைவி போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் இல்லம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மூன்று நாட்கள் கடந்த நிலையில் அவருக்குள் மாற்றமொன்று உருவாகத் தொடங்கியதை உணர்ந்தார். குறிப்பாக, கடவுள் மீதான அன்பும், ஆன்மீக ஈடுபாடும் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் 'குடி இல்லாமல் இருக்க முடியும்' என்னும் மனநிலை ஏற்பட்டது. அந்த இல்லத்தில் நிறைய வாசித்ததாகவும், கற்றுக் கொண்டதாகவும் ஆல்பர்ட் கூறுகின்றார். அங்கு 36 நாட்களில் வழங்கப்பட்ட புனர்வாழ்வுக்குப் பிறகு, 'வேறொரு' நபராக ஆல்பிரட் வீடு திரும்பினார்.
நாம் செய்ய வெண்டியது என்ன?
அந்த காலத்தில் சிகரெட்டை மறைத்து குடித்து வந்தவர்கள் இன்று மதுவையும் வீட்டுக் கூடத்தில் வாரிசுகளுடன் சேர்ந்து அருந்தும் மேனாட்டு நாகரீகத்தில் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். திரைப்படங்களும், மாறிவிட்ட வாழ்க்கை முறைகளும், எளிதாக கிடைக்கும் போதைப்பொருள்களுமே இதற்கான காரணம். குடிப்பதும், கஞ்சா அடிப்பதும் ஹீரோயிசம் என்று காட்சிப்படுத்தும் திரைப்படங்களை எப்படித் திருத்தப் போகின்றோம்? சமூகப் பொறுப்பு அற்ற சிலரின் திரைக் காட்சிகள் காணும் சிறுவர் சிறுமிகள் எதுவும் தவறில்லை எனும் மனப்பான்மையில் தள்ளப்பட்டு மாணவப் பருவத்திலேயே போதைக்கு அடிமையாகி வருவது வேதனைக்குரிய விடயம்.
ஆதரவற்ற நிலை, போதிய அன்பு கிடைக்காமை, விரக்தி, அறியாமை, உளவியல் குறைபாடுகள், பொழுதுபோக்கு, தற்காலிக உற்சாகம் போன்ற நிவாரணங்கள் தேடியே பெரும்பாலோருக்கு போதை அறிமுகமாகிறது. இதுவே நாளடைவில் அவர்களை வீழ்த்தி மரணம் வரை கொண்டு விடுகிறது.
ஒருவர் போதைக்கு அடிமையானால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமும்தான். முக்கியமாக அவர்களின் குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி அவர்களும் போதையின் வழியில் செல்லும் வாய்ப்புகள் அதிகம். போதைப் பொருள்களை அதிகம் பயன்படுத்துவதால் கொள்ளை, வன்முறை, கொலை, தற்கொலை போன்ற பல குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உடல் நலக்குறைவு மற்றும் மனநல பாதிப்புகளும் அதிகமாகி குடும்பக் கட்டமைப்புகள் உடைந்து வருகின்றன.
தற்போது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க வைக்கும் போதைக்கு ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமின்றி அடிமையாகி வருவது நிச்சயம் வேதனை தரும் ஒன்றாக உள்ளது. வீதிக்கு வீதி இருக்கும் டாஸ்மாக்குகள், பள்ளிகளின் வாசலிலேயே கிடைக்கும் கஞ்சா அபின் போன்றவை, காவல்துறையின் எச்சரிக்கையையும் கண்காணிப்பையும் மீறி உலாவரும் கடத்தல்காரர்கள் என போதையின் அரசாட்சி எங்கும் பரவிக் கிடக்கிறது. இதில் கவனமாக இருந்து, அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வுடன் அன்பையும் தந்து பிள்ளைகளைப் போதையிலிருந்து பாதுகாக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது எனலாம்.
போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராகப் பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. தலைக்கவசம் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிவித்து அபராதம் விதிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கை, போதைப் பொருள்களாலும் உயிருக்கும் சமூகத்திற்கும் ஆபத்து என்பதைக் கண்டித்தும், தண்டித்தும் அவர்கள் பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். திரைப்படங்களில் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். மக்களுடைய நலன்களைக் கருதி போதைப்பொருள்கள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன் வரவேண்டும். அரசு நடத்தும் மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்தியதால் சீர் கெட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமையாகும்.
போதை பொருட்களை ஒழிப்போம் மனித மாண்பை காப்போம். போதையில் பாதை மாறாதிருப்போம். போதை அது சாவின் பாதை. மேதையின் பாதையை அழிக்கும் போதை அது. போதை ஒழிப்போம், சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்