வாரம் ஓர் அலசல் – போர் தரும் வெற்றி யாருக்கு?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகின் எந்த மூலையில் எங்கு போர் நடந்தாலும் ஒவ்வொரு போருக்கு பின்னாலும் பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். ஒரு போர் நிச்சயமாக கொடூரமானதுதான். மனிதாபிமானத்தின் எச்சம் ஒட்டியிருக்கும் எந்த மனதாலும் போரை நியாப்படுத்தவே முடியாது. போர்களால் பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். உலகின் எந்த மூலையில் எங்கு போர் நடந்தாலும் ஒவ்வொரு போருக்கு பின்னாலும் பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான்.
போரில் ஈடுபடும் எந்த நாடும் வெற்றியடைவதில்லை. போர்களில் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மட்டுமே வெற்றி. அப்பாவி மக்களுக்குக் கிடைப்பது தோல்விதான். ஒரு நாடு போர்க்களத்தில் முன்னேறினாலும் கூட, அந்த நாட்டின் மக்கள் தம் வரிப்பணத்தில் பெரும்பகுதியை அந்த களத்தில் இழக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சாதாரண மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறுகிறது; பல நாடுகளில் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. கடல் மற்றும் வான்வழிப் போக்குவரத்து மாற்றங்களால் வணிகச் சிக்கல்கள் உருவாகின்றன; சுற்றுலாத் துறை பாதிக்கப்படுகிறது. நவீன ஆயுதங்களைச் சோதிக்க சாதாரண இராணுவ வீரர்களின் உயிர்களைப் பலியிடும் ஓர் ஆபத்தானக் களமாக போர்கள் மாறிவிட்டதையும் மறுக்க முடியாது.
மற்ற செலவினங்களை குறைத்து விட்டு, இராணுவப் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதால், சமூக முன்னேற்றத் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் நேட்டோ கூட்டணிக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியவற்றால் இரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகளின் இராணுவச் செலவு 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது பனிப்போரின் முடிவில் பதிவு செய்யப்பட்ட அளவை விட அதிகம் என ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு போர் மானுடத்திற்கு எவ்வளவு பெரிய வலியையும், பேரழிவையும் கொடுத்திருக்கிறது என்பதை முதலாம், இரண்டாம் போர்களில் உலகம் பார்த்திருக்கிறது. இன்னொரு உலகப்போர் வந்தால் நிச்சயம் அதைத் தாங்கக்கூடிய ஆற்றல் இந்த உலகத்திற்கு இல்லை. நிலம், இயற்கை வளம், என பல விஷயங்கள்தான் போருக்கு காரணமாக இருக்கின்றன. இந்த நிலம், இயற்கை வளங்கள் மூலம் அவர்களுக்கு அதிக இலாபங்கள் கிடைப்பதால் அதன் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இரஷ்யாவின் இராணுவச் செலவு 2024ஆம் ஆண்டில் 149 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 38 விழுக்காடு அதிகமாகும். உக்ரைனின் மொத்த இராணுவச் செலவு, இரஷ்யாவின் இராணுவச் செலவில் 43 விழுக்காடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 விழுக்காட்டுடன், மற்ற நாடுகளை விட மிகப்பெரிய இராணுவச் சுமையை உக்ரைன் சுமக்கிறது. மேலும் தற்போது, உக்ரைன் அனைத்து வரி வசூலையும் இராணுவத்திற்காக செலவிடுகிறது. இதனால் சில ஆண்டுகளில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் என ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஜெர்மனியின் இராணுவ நிதி ஒதுக்கீடும் 28 விழுக்காடு அதிகரித்து, 88.5 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் இராணுவ நிதி ஒதுக்கீடும் கடந்த ஆண்டை விட 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. காசாவை தாக்கி வரும் இஸ்ரேலின் இராணுவ நிதி ஒதுக்கீடு 65 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவச் செலவு 5.7 விழுக்காடு அதிகரித்து 997 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இது 2024 இல் உலக இராணுவ நிதியில் 37 விழுக்காடு. அதிகரித்து வரும் சிக்கலான புவிசார் அரசியல் உலகில் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்ட உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் இராணுவப் படைகளை பலப்படுத்தி வருகின்றன.
உக்ரைன்-இரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு உலக நாடுகளும் முயன்றாலும் பலன் கிடைக்கவில்லை. இந்தப் போரால் இலட்சகணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இன்றும் உருக்குலைந்த உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. போரால் சொந்த ஊரை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் குடியெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 20 மாதங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை பல அயிரக்கணக்கில். இப்போது, இஸ்ராயேல்-ஈரான்-அமெரிக்க ஐக்கியநாடுகளிடையே எழுந்துள்ள பதட்டநிலை அச்சத்தைத் தருகிறது.
இதேபோல சிரியா, சூடான் போன்ற உள்நாட்டு போர்களும் இலட்சக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை நரகமாக்கி இருக்கிறது. குறிப்பாக சூடானில் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல இயலாத சூழல் நிலவுகிறது.
உக்ரைன்-இரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டநிலை என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் இராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023-ஆம் ஆண்டை விட 2024-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இராணுவ நிதி 2 இலட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. கடந்த 22ஆம் தேதி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்கின. குறிப்பாக போர்டோ அணு உலை மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அணு உலைகள் முற்றிலும் சேதமடைந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தாக்குதலில் பெரும் சேதம் இல்லை என்று ஈரான் மறுத்து வந்தது. மேலும் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியம் செறிவூட்டும் பணியை உடனடியாக தொடங்க உள்ளதாகவும் ஈரான் அறிவித்திருந்தது.
இத்தகைய ஒரு பதட்ட நிலை வருங்காலம் குறித்த அச்சத்தைத் தொடர்ந்து தந்துகொண்டிருகிறது. ஒவ்வொரு போரும் மக்களின் அத்தியாவசிய நலன்களான நலவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு நாட்டின் பணத்தையும் வளங்களையும் ஆயுதங்கள் மற்றும் போருக்காக திருப்பிவிடுகிறது.
போர் வேண்டும் என அழைப்பு விடுக்கும் நபர்கள் ஒன்று போரின் விளைவுகளால் ஏற்படும் துன்பத்தை குறித்து அறியாதவர்களாக இருப்பார்கள். அல்லது மக்களை சுரண்டி கொழுத்துபோயுள்ள பெருமுதலாளிகள், ஆயுத வியாபாரிகள் ஆகியோரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களாக இருப்பார்கள்.
உலகில் காங்கோ-சூடான் உள்நாட்டு போர், இஸ்ரேல்-பாலஸ்தீன போர், உக்ரைன்-இரஷ்யா போர் என ஏற்கனவே பல போர்கள் நடத்து வருகின்றன. இன்னும் இத்தகைய மோதல்கள் தொடர வேண்டுமா? அரசும் மக்களும் இணைந்து நின்று பயங்கரவாதச் சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். "கண்ணுக்குக் கண்" என்ற கொள்கையில் உலகம் செயல்பட்டால், எல்லோரும் விரைவில் இருளில்தான் வீழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்