வாரம் ஓர் அலசல் – ஜூன்.5. உலகச் சுற்றுச்சூழல் தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன. ஐ.நா. ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், பனிக்கட்டிகள் உருகிவருகின்றன என்றும், மனித செயல்பாடுகளால் சில உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.
தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையை விட 2 டிகிரி செல்ஷியசுக்கு மிகாமல் புவியின் வெப்பநிலையைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்கை பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் முன்வைத்தது. ஆனால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. ஐரோப்பிய ஒன்றியம் அளித்த வாக்குறுதிகளைக் காக்கவில்லை. எனவே, இந்த இலக்கை அடையமுடியாமல் போகும் ஆபத்து இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது ஏறத்தாழ 1 டிகிரி கூடுதலாக இருக்கிறது. மனிதர்களுக்கும், புவியில் வாழும் உயிர்களுக்கும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, உயர்ந்து வரும் வெப்பநிலையின் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும், அதன் காரணமாக பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
மேலும், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே உலகளவில் பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருகின்றன. இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றலில் 40 விழுக்காட்டிற்கு காரணமாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆர்டிக் பெருங்கடலிலுள்ள பனிக்கட்டிகளின் அளவு கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. கடலில் காணப்படும் பனிக்கட்டிகள் பல ஆண்டுகளாக உருகிய வண்ணம் இருந்தாலும், 2000வது ஆண்டிற்கு பிறகுதான் அதன் வீரியம் அதிகரித்ததாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல் தணிக்கை குழு தெரிவிக்கிறது. தற்போதுள்ள மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050-ஆம் ஆண்டின் கோடைக்காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் அந்த குழுவின் அறிக்கை கூறுகிறது.
இதில் நாம் எப்படி உதவ முடியும், நம் பங்களிப்பு என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது. இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள். இது உங்களுக்கு சாதாரணமான விடயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விடயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும். பூமி வெப்பமடைவதன் பின்னணியில் மனிதர்களின் செயல்பாடுதான் உள்ளது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். கொஞ்சம் விவாதம், வாக்குவாதம் நடத்திவிட்டு, ஓர் ஒத்த கருத்துடன் பிரிந்து செல்லக் கூடிய விடயமல்ல என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும். அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனை இது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பது உலகுக்கு தெரியும். அதுதான் முரண்பாடானது. என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தும், நாம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறோம் என்பது முரண்பாடுதான்.
மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் விவசாயம் மூலம் வெளியாகும் பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை 2030ஆம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால் 2030க்கு இன்னும் 5 ஆண்டுகள் கூட இல்லை.
பருவநிலை மாற்றம் என்பது எப்போதோ நடக்கப் போவது என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புதிய வெப்பநிலை அதிகரிப்பு பதிவுகள், புதிய ஆபத்துகளை, தொடர்ந்து உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. இயற்கையான உலகத்தில் செயற்கைத்தனத்தை உட்புகுத்தி உருமாற்றி வருகிறோம், அதனால் பாதிக்கப்படப்போவது நாம்தான் என்பது தெரியாமலே.
சுற்றுச்சூழல் மண்டலத்தை பாதிக்கும் வகையிலான மனிதர்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதற்கு வழிவகைகளைக் காண வேண்டியது முக்கியமானதாக உள்ளது.
''நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்துக்கும் மூச்சுக் காற்றுக்கும், நாம் சாப்பிடும் ஒவ்வொரு கை உணவுக்கும் இயற்கை உலகைத்தான் நாம் சார்ந்திருக்கிறோம்'' என்று எத்தனை பேர் உணர்ந்து செயல்படுகிறோம்?.
வரக்கூடிய பத்தாண்டுகளில் பத்து இலட்சம் விலங்கு, பூச்சி மற்றும் தாவர இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமோ அழிவு நிலைகளை இன்னும் கைவிடவில்லை.
நகரங்களின் வளர்ச்சி, விவசாயத்துக்காக வனங்கள் அழிப்பு, உணவுக்காக மீன் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் முக்கால் பகுதி நிலம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முக்கியமான உயிரினங்களை நாம் குறைத்து மதிப்பிடுவதால், நமது பாதுகாப்பு வளையத்தை நாமே அழித்துக் கொள்கிறோம், நாம் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழலை நாமே அழித்துக் கொள்கிறோம் என்று அந்த ஆய்வுக் குழுவில் பங்கேற்றவர்களில் ஒருவரான இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியக பேராசிரியர் ஆண்டி பர்விஸ் கூறியுள்ளார்.
முன்னேறிய பல நாடுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவசியத்தை புரிந்து கொண்டுள்ளனர் என்றாலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கையாள முடியாத ஏழை நாடுகளுக்கு இந்த ஆபத்துகளை நாம் ஏற்றுமதி செய்கிறோம் என்பதுதான் உண்மை. அவை நமக்கு விற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதில் அந்த ஆபத்துகளை அந்த ஏழை நாடுகள் எதிர்கொள்ள நாம் காரணமாகிறோம்.
கடந்த பல பத்தாண்டுகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட 90 விழுக்காட்டிற்கும் அதிகமான வெப்பத்தை கடல் நீர் உள்ளிழுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடல் மட்டம் உயர்கிறது. இப்போது கடல் மட்டம் உயர்வதற்கு கிரீன்லேண்ட் மற்றும் அண்டார்ட்டிக்கா பனிப்பாறைகள் உருகுவதுதான் முக்கிய காரணம் என்கிறது பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு.
2007 - 2016 இடையேயான காலகட்டத்தில் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் கிரீன்லேண்டில் பனிப்பாறைகள் உருகுவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தின் காரணமாக வடக்கு ஆசியா மற்றும் மத்திய ஐரோப்பாவில் உள்ள பனிப்பாறைகள் 2100ஆம் ஆண்டுக்குள் 80 விழுக்காடு வரை உருகிவிடும். இது பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தும். இந்த பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கும்போது, கடல் மட்டம் உயரும். அதாவது 2100ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 1.1 மீட்டர் வரை உயரும் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இது தாழ்வான பகுதியில் வசிக்கும் 70 கோடி மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குமெனவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆனால், முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிடத் தேவையில்லை என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
ஆம். 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 45 விழுக்காடு குறைத்தால் இந்த பேரழிவிலிருந்து நாம் தப்பலாம். இதற்காக அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தர வேண்டும் என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஒன்று மட்டும் உண்மை. நம்மை நேரடியாகத் தாக்காத எது குறித்தும் மனிதன் கவலைப்படப் போவதில்லை. ஏதோ பேராபத்து வருவதாக உளறிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது தேவையற்ற பயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது புலி வருது... புலி வருது.... என்ற கதையில்லை. புலி வீட்டு வாசல் வரை வந்து விட்டது. எப்போது வீட்டுக்குள் நுழையப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி. இன்றே செயல்படவேண்டும். இல்லையெனில் என்றும் செயல்படமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்