உக்ரைனில் இதுவரை 2,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி இன்றுவரை உக்ரைன் மீது இரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் ஏறக்குறைய 2,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
ஜூன் 5, வியாழக்கிழமையன்று, தனது எக்ஸ்தள பக்கத்தில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், இந்தப் படுகொலைகள் குறித்த தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் இன்னும் எத்தனை இளம் உயிர்கள் சிதைக்கப்பட வேண்டும்? என்றும், இன்னும் எத்தனை எதிர்காலங்கள் திருடப்பட வேண்டும்? என்றும் கேள்வியெழுப்பியுள்ள அந்நிறுவனம், உக்ரைனின் குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற மற்றும் நீடித்த அமைதி தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி, உக்ரைன் மீதான இரஷ்யாவின் தாக்குதலின்போது மொத்தம் 45,001 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) கணித்துள்ளது. மேலும் அவர்களில் 31,867 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று OHCHR குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்