உலகளவில் பரவலாக மறைக்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள்!
சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்
இத்தாலியில் 7 முதல் 15 வயதுடைய 3,30,000 குழந்தைகள் பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.
இவ்வறிக்கையின்படி, இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 6.8 விழுக்காட்டினர் வேலை செய்கின்றனர் எனவும், இது 14 முதல் 15 வயதுடையவர்களில் 20 விழுக்காடாக அதிகரித்துள்ளது எனவும் உரைக்கிறது அதன் அறிக்கை.
மேலும் 27.8 விழுக்காட்டினர் ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், இது அவர்களின் கல்வி மற்றும் நலவாழ்வைப் பாதிக்கிறது எனவும் அந்த அமைப்பின் அறிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிறார்களைப் பணியமர்த்தும் முக்கிய துறைகள் பல உள்ளதாகவும் இதில் உணவு சேவை துறை 25.9 விழுக்காடாக மிக உயர்ந்த அளவில் காணப்படுவதாகவும் அதனைத் தொடர்ந்து சில்லறை விற்பனைத் துறை 16.2 விழுக்காடு இருப்பதாகவும் எடுத்துக்காட்டுகிறது அவ்வறிக்கை.
இத்துடன், விவசாயத் துறையில் 9.1 விழுக்காடு சிறார்கள் வேலை செய்வதாகவும், கட்டுமானத் துறையிலும் 7.8 விழுக்காடு சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மற்றும் அண்மைய காலங்களில் ஆன்லைன் வேலைகளிலும் 5.7 விழுக்காடு சிறார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் எனவும் இவ்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் இக்குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவது, பெரும்பாலும் பள்ளிக்குக் குழந்தைகள் வருவதை தடுப்பதாகவும், பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மேலும் பணநெருக்கடியினால் NEET போன்ற நுழைவுத்தேர்வு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வகுப்புக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது என்றும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
வறுமையை எதிர்த்துப் போராடவும், கல்விக்கான உதவிகளை மேம்படுத்தவும், ஆபத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவு வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இவ்வமைப்பு வலியுறுத்துவது மட்டுமல்லால் ஆதரவற்ற மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்