சூடானில் அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூடான் அதன் உள்நாட்டு மோதல்களால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது என்றும், இதனால் 1 கோடியே 24 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தெற்கு சூடானுக்கு புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
சூடானில் 57 விழுக்காட்டினர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், இது தெற்கு சூடான், பாலஸ்தீனம், மாலி மற்றும் ஹைதியுடன் சேர்ந்து உலகின் முதல் ஐந்து பசி மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அதன் அறிக்கைச் சுட்டுகின்றது.
மேலும் உடனடி மனிதாபிமான உதவி இல்லாவிட்டால் இந்த நாடுகளில் பட்டினி மற்றும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கும் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) கூட்டு அறிக்கை, மோதல்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சரிவுகள் யாவும் இந்த நெருக்கடியின் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
சூடானில் ஏற்கனவே பஞ்சம் ஏற்பட்டு வருகிறது; காசா அதிக ஆபத்தில் உள்ளது, அதன் முழு மக்களும் நெருக்கடி அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும், ஐந்து இலட்சம் பேர் பேரழிவு நிலைகளை நெருங்கி வருகின்றனர் என்றும் இந்தக் கூட்டறிக்கை விவரிக்கின்றது.
மேலும் நிதிப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளால் மனிதாபிமான முயற்சிகளும் பல பகுதிகளில் உதவி விநியோகமும் தடைபட்டுள்ளன என்றும், இதனால் காசாவில் இடம்பெயர்ந்த சாவ்சனின் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க சிரமப்படுகிறார்கள் என்றும் விளக்கியுள்ளது இந்தக் கூட்டறிக்கை.
அத்துடன் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க, உலகளாவிய நிதியுதவியை அதிகரிக்கவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும், உலக உணவுத் திட்டமும் அவசரமாக அழைப்பு விடுத்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்