MAP

பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்   (AFP or licensors)

இந்தியாவின் மணிப்பூரில் மெய்தி இன அமைப்பு முழு அடைப்பைக் கைவிட்டது!

மியான்மாரின் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிலைமை தற்போது சீரடைந்து வருகின்றது என்றும், அங்கு மீண்டும் அமைதிநிலை திரும்பி வருகிறது என்றும் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார் : யூக்கான் செய்தி நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மணிப்பூரிலுள்ள மெய்தி இன மக்களின் ஆயுதமேந்திய குழு, மக்களுக்கு ஏற்பட்டு வரும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஜூன் 10, செவ்வாயன்று, 10 நாள் முழு அடைப்பை கைவிட்டதாகக் கூறியது என்றும், ஆனால் கைது செய்யப்பட்ட தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராடுகிறது என்றும் தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.  

அரம்பாய் தெங்கோல் என்ற ஆயுதக் குழு ஜூன் 7, சனிக்கிழமையன்று, அதன் தலைவர் ஏ. கனன் சிங்கை  கூட்டாட்சி புலனாய்வு நிறுவனம் ஒன்று கைது செய்ததைத் தொடர்ந்து, முழுஅடைப்பை அறிவித்தது என்றும், அம்மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இன வன்முறைத் தொடர்பான குற்றங்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது என்றும் அச்செய்தி நிறுவனம் உரைக்கின்றது.

இந்தக் கைதால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது என்றும், இதனால் அதிகாரிகள் தடை உத்தரவுகளை விதிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

மாநிலத் தலைநகரான இம்பாலைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத தலத்திருஅவையைச் சேர்ந்த தலைவர் ஒருவர், ஜூன் 11, இப்புதனன்று, சந்தை மற்றும் பிற பொது இடங்களுக்குச் செல்லும் சாலைகள் இன்னும் சாதாரண மக்களுக்கு அணுக முடியாததாக இருப்பதால் நிலைமை மோசமாகவே உள்ளது என்று இச்செய்தி நிறுவனத்திடம் கூறியதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது.

போராட்டக்காரர்களால் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் சந்தைக்கு வருவதில் இடையூறு ஏற்பட்டது என்றும், வரும் நாள்களில் நிலைமை இன்னும் மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தலத் திருஅவையின் மற்றொரு தலைவர் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

மணிப்பூரின் 32 இலட்சம் மக்கள் தொகையில் குக்கி-சோ சமூகங்கள் உட்பட பூர்வீக சமூகங்கள் 41 விழுக்காடு உள்ளனர். மெய்தி இன மக்கள் 53 விழுக்காடு மற்றும் இவர்களே மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூன் 2025, 12:52