வாரம் ஓர் அலசல் – குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
"இந்த உலகில் உண்மையான அமைதியை நாம் கற்பிக்க வேண்டும் என்றால், போருக்கு எதிரான உண்மையான போரை நாம் நடத்த வேண்டும் என்றால், நாம் அதை குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்" என்றார் அண்ணல் மகாத்மா காந்தி.
"ஒவ்வொரு குழந்தையும் கடவுள் இன்னும் மனிதனை கைவிட்டுவிடவில்லை என்ற செய்தியுடன் வருகிறது" என்றுரைத்தார் நொபேல் விருதுபெற்ற கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
"இன்றைய நாளை தியாகம் செய்வோம், இதனால் நம் குழந்தைகள் சிறந்த நாளை பெற முடியும்" என்றார் முன்னாள் குடியரசுத்தலைவர், அறிவியலாளர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
இவர்கள் குழந்தைகளைக் குறித்துப் பேசியவைகளை இப்போது நாம் ஏன் எடுத்துரைக்கிறோம் என நீங்கள் எண்ணலாம். ஆம். இம்மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள். இவ்வாண்டின் இந்நாளுக்கென ஐ.நா. நிறுவனம் எடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா? ‘முன்னேற்றம் தெளிவாக உள்ளது, ஆனால் இன்னும் நிறைய ஆற்ற வேண்டியுள்ளது. நாம் நம் முயற்சிகளை விரைவாக்குவோம்’ என்பதே இவ்வாண்டிற்கான தலைப்பு.
குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் உலகில் இருக்கிறதா என்ற கேள்வியும் இயல்பாக வருகிறது. ஆம். இன்றைய உலகில் தற்போதைய புள்ளிவிவரங்களின்படி 12 கோடியே 10 இலட்சம் குழந்தைகள், பாலர் தொழிலாளர்களாக உள்ளனர். அதிலும் 5 கோடியே 20 இலட்சம் பாலர் மிகவும் ஆபத்து தரும் வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
2000மாம் ஆண்டோடு ஒப்பிடும்பொது குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தே வருகின்றபோதிலும், இந்த முயற்சிகள் போதாது என்பதுதான் உண்மை. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் விவசாயத் துறையில் தான் 70% வரை அதிகமாக உள்ளது. அதிக அளவிலான எண்ணிக்கை என்பது ஆசியா, பசிபிக், ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் தான்.
குழந்தைகள் வேலை செய்ய முக்கிய காரணங்களில் ஒன்று வறுமை. பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் குழந்தைகளை அன்றாட கூலி வேலைக்கு அனுப்புகின்றனர். அதே சமயம், கல்வி வசதி இல்லாமை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலை செய்ய அனுப்பப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் இந்த உலகின் மிகப்பெரிய சோகம். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது உலகின் மிகப்பெரிய சட்ட விரோதச் செயல். அது இயற்கைக்கு முரணான ஒரு சமூகக் குற்றம். பகட்டாக ஜொலிக்கும் உலகின் களையப்படாத கீழ்மைகளுள் ஒன்று. குழந்தைகளின் கனவுகளை கலைப்பதற்கு ஈடான வன்செயல் எதுவும் இல்லை.
உலகின் ஏழ்மையான நாடுகளில், நான்கு குழந்தைகளில் ஒருவர் தங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி ஆப்பிரிக்காவில் காணப்படுகிறார்கள். அங்கு 5 குழந்தைகளில் ஒரு குழந்தை தொழிலாளராக வேலை செய்கிறது. வளர்ந்து வரும் கிழக்காசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமல்லாது நன்கு வளர்ச்சி அடைந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட குழந்தை தொழிலாளர் முறை மிகப் பெருமளவில் காணப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியான விடயம். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு குழந்தைத் தொழிலாளர்களை "குழந்தைப் பருவத்தை இழந்த குழந்தைகள்” என்று குறிப்பிடுகிறது. அவர்களின் ஆற்றல் மற்றும் சுய கௌரவத்தை இழந்து, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்" என்று இதை வரையறுக்கிறது.
குழந்தை தொழிலாளர்களின் உச்சகட்ட கொடூரம் அவர்களை பெற்றோரிடம் இருந்தும் குடும்பங்களிடம் இருந்தும் பிரித்து, அவர்கள் ஆற்றலுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேலைப் பளுவை திணித்து, அவர்களை பெரு நகரங்களில் சிறு விலைகளுக்கு போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம், தீவிரவாதம் போன்ற பல சமூக விரோத செயல்களுக்காக விற்கப்படுவதும் ஆகும்.
ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்கும், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புக்கும் தகுதியானவர்கள். ஆனால் குழந்தை தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. 2025க்குள் குழந்தை தொழிலாளர்களை முற்றாக ஒழித்துவிட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் இது எவ்வளவு தூரம் சாத்தியமான ஒன்று என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அந்த குறிக்கப்பட்ட ஆண்டுக்கு வந்துவிட்டோம். ஆனால் குறிக்கோளைத்தான் எட்டமுடியவிலை.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி, அரசுகள், தொழிலாளர் அமைப்புகள், நிறுவனங்கள், தொழில் வழங்குனர், மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்களுக்கு உதவ என்ன செய்ய முடியும் என்பதையும் எடுத்துக் காட்டும் பொருட்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டாக இணைந்து 2002-ல் இத்தினத்தை உருவாக்கின.
இந்த தினம் குழந்தை தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அரசுகள், மனிதஉரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இணைந்து குழந்தை தொழிலாளர்களின் அவலத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவும் பணியாற்ற வேண்டும்.
விவசாயம், சுரங்கப்பணி, தொழிற்சாலைப் பணிகள் போன்றவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நம் ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் கல்வி கற்கவும், சுதந்திரமாக வளரவும் உரிமை உள்ளதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறது. குழந்தைகள் வேலை செய்யாமல், அவர்களின் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்கும் வகையில் நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்களுக்கு இச்சமூகத்தில் இடமில்லை. இது குழந்தைகளின் எதிர்காலத்தை கொள்ளையடிக்கிறது மற்றும் குடும்பங்களை தொடர்ந்து வறுமையில் வைத்திருக்கிறது என்பதை உள்ளத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய உலகளாவிய கவனத்தை ஈர்க்கவும், அதை முற்றாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளிலும் கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் முறையை அடியோடு வேரறுக்க வேண்டும் என நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யாத்ரி போன்ற தன்னார்வலர்களும், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகளாவிய அமைப்புகளும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை அடிமைத்தனம், கடத்தல், அத்துமீறல் போன்றவற்றை முற்றாக தடுப்பதற்கும், சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கும், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வியை கிடைக்கச் செய்யவும் இவ்வமைப்புகள் பாடு பட்டாலும், ஒவ்வொரு தனி நபரின் ஒத்துழைப்பும் இல்லாமல் இது சாத்தியப்படாது.
குழந்தை தொழிலாளர்கள் இரண்டு வகையில் உருவாகுகிறார்கள். வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக பெற்றோர், பாதுகாவலர்கள் தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, அல்லது இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பது ஒரு வகை. இரண்டாவது வகை குழந்தை கடத்தல். உலகின் இருண்ட அறைக்குள் பணம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்ட குழந்தை கடத்தலில் மில்லியன் கணக்கான குழந்தைகள் குழந்தை தொழிலாளராக விற்கப்படுகிறார்கள்.
இன்று வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு துயரமாக இது தொடர்ந்து கொண்டிருப்பதற்கு, அரசுகள் இலவச மற்றும் அனைவராலும் அணுகக்கூடிய கல்வியை வழங்க தவறியமை, சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகள் முறையாகக் கடைபிடிக்காமை, குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படாமை, மக்களின் அலட்சியப் போக்கு என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.
திரையில் நிழல் உலக ஹீரோக்கள் இவ்வாறான ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கும் போது உணர்ச்சிவசப்பட்டு கை தட்டும் மக்கள், படம் முடிந்து வெளியே வந்து சுண்டல் விற்கும் சிறுவனிடம் பேரம் பேசி சுண்டல் வாங்கி செல்கிறார்கள். எத்தனை பேர் அந்தச் சிறுவன் ஏன் பாடசாலை போகாமல் இப்படி வேலை செய்கிறான் என்று தேடி, தீர்வு காண்கிறார்கள்? வீதியில் போகும்போது பிச்சை கேட்கும் குழந்தைகளை புறக்கணித்து செல்கிறோமே தவிர அவர்களுக்கான மறுக்கப்படும் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எவருமே நினைப்பதில்லையே? இந்த அலட்சியப் போக்கால் ஒரு சமூகமாகவும் நாம் நம் குழந்தைகளை பாதுகாக்க தவறி விடுகிறோம்.
வயல்களிலும், சுரங்கங்களிலும் பல இலட்சம் குழந்தைகள் வியர்வை சிந்தி கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு காட்டுத்தீ. இளம் தளிர்கள் மேல் பற்றிக்கொண்ட இந்தத் தீ மெல்ல மெல்லப் பரவி, எதிர்கால உலகையே எரித்து சுடுகாடாக மாற்றிவிடும். ஒரு சமூகமாக அரசும், நிறுவனங்களும், மக்களும், சட்டமும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே ஒழிய இதனை அணைக்க வேறு வழி இல்லை.
எந்தக் குழந்தையும் விரும்பி வேலைக்கு செல்வதில்லை. அவர்கள் பலவந்தமாக இந்தச் சுழலுக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பாக வளர, சுதந்திரமாக வாழ, தரமான கல்வி கற்க உரிமை உள்ளது. அது எந்தக் காரணத்திற்காகவும் பறிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகை கையில் எடுத்துக் கொள்ளப் போகிறவர்கள். அவர்கள் இன்று எப்படி நடத்தப்படுகிறார்களோ அதன் எதிரொளிப்பு தான் நாளை வெளிப்படப்போகிறது. எனவே எதிர்கால உலகை அவர்கள் நேர்மறையாக அணுக வேண்டுமா, இல்லை எதிர் மறையாக மாற்ற வேண்டுமா என்பதை இன்று நாம் தான் தீர்மானிக்கப் போகிறோம்.
"குழந்தைத் தொழிலாளர்" என்ற சொற்றொடர், மனரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, தார்மீக ரீதியாக குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. ஒரு பள்ளி செல்ல வேண்டிய வயதுடைய குழந்தை பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் எந்தவொரு வேலையும், குழந்தைத் தொழிலாக கருதப்படும் என்பதையும் இந்த சொற்றொடர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 18 வயது ஆகாத இளைஞர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது சட்டப்படி இந்தியாவில் தண்டனைக்குரியது.
குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குதல், குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், குழந்தைகள் பணி செய்யும் நிறுவனங்களை புறக்கணித்தல், குழந்தை தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை நம்மால் செய்யமுடியும். குழந்தை தொழிலாளர் முறையை எதிர்ப்பதற்கு நம் பங்களிப்பாக அது இருக்கட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்