இலங்கையின் ஆபத்து நிறைந்த திட்டங்களுக்கு குடிமக்கள் எதிர்ப்பு
சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்
இலங்கையில் உள்ள மன்னார் தீவின் சுற்றுச்சூழலையும், அதன் மெல்லிய உயிரியல் சூழலையும் அழிக்கக்கூடிய சில வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த சில நாட்களாக 2,000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர் எனவும், இந்த போராட்டத்தை மன்னார் குடிமக்கள் குழு (MCC) முன்னெடுத்ததுடன், சுற்றுச்சூழல் நியாய மையம் (CEJ) மற்றும் பல உள்ளூர் குடிமக்கள் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது எனவும் ஆசியா செய்தி குறிப்புகள் வெளியிட்டுள்ளன.
மன்னார் தீவின் நுட்பமான உயிரியல் பல்வகைத்தன்மையை கெடுக்கக்கூடிய சட்டவிரோத மணல் அகழ்வு, கனிமங்கள் எடுத்தல், மற்றும் மிகப்பெரிய காற்றாலைத் திட்டங்கள் போன்ற செயல்கள், தீவின் உயிரியல் பல்வகைத்தன்மை, உள்ளூர் வாழ்வாதாரம் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஆபத்துக்குள் ஆழ்த்துவதாகவும், இதில் வீடிழந்த மக்கள், இளைஞர் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் அமைப்புகள், மதத் தலைவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.
இத்திட்டங்கள் நாட்டின் உள்நாட்டு போரைவிட அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்தையும் அரசு சரியாக ஆய்வு செய்த பின்னர்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அது மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
CEJ என்னும் சுற்றுச்சூழல் நியாய மையத்தின் மூத்த அதிகாரியான ஜனக வித்தானகே செய்தியாளருக்கு கூறும் போது, “நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அது நியாயமானதாகவும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகவும் மற்றும் வளர்ச்சியுள்ளதாகவும் இருக்க வேண்டும், ஆனால் மன்னாரில் நாம் காணும் விடயம் சுற்றுச்சூழல்களுக்கும் சமூகத்திற்கும் கேடுவிளைவிப்பதாக அமைந்துள்ளது என்று அச்செய்தி நிறுவனத்திற்கு விளக்கியுள்ளார்.
நாங்கள் போராடுவது எங்காளுக்காக மட்டுமல்ல, இந்நாட்டின் எதிர்கால தலைமுறைகளுக்காகவும் போராடுகிறோம், எனவே அனைத்து கொள்கைமுறையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களும் எங்களது குரலைக் கேளுங்கள் மற்றும் எங்களது மதிப்புமிக்க கடலோர சூழல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திடுங்கள் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்