MAP

மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மியான்மார் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மியான்மார்  (ANSA)

மியான்மாரில் இயற்கை சீற்றத்தால் மக்கள் மேலும் பாதிப்பு

மழைக்காலம் தொடங்கியதால், மியான்மாரின் மாண்டலாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது - ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

மியான்மாரின் வடமத்திய பகுதியான மாண்டலே மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த மூன்று வாரங்களாக கடும் மழையும், இடியுடன் கூடிய புயல்களும் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றன என்றும், இதனால் நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சில கட்டிடங்கள் தொடர்ச்சியான மழையின் காரணமாக இடிந்து விழுகின்றன என்றும் பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் அதிகப்படியான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்று மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட அவசர மீட்புக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தார்ப்பாய்கள், கூடாரங்கள் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். ஆனால், அவற்றால் கடும் மழையையும் காற்றையும் தாங்க இயலாது எனவும், வெள்ளமும், நலவாழ்வு வசதிகளின் பற்றாக்குறையும் நீர்வழி நோய்களை பரப்பும் அபாயத்தை அதிகரிக்கின்றன எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் மூத்தவர்களுக்கு தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பற்றாக்குறை உள்ளன எனவும், உள்ளூரில் வசிக்கும் மக்களின் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிகள் போதுமான அளவில் இல்லை எனவும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாண்டலே மறைமாவட்டத்தின் தன்னார்வ குழுவினர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர் என்றும், மேலும் சிலர் சேதமடைந்த தலத்திருஅவை ஆலயக் கட்டிடங்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சிலர் அவசர நிவாரண குழுக்களை வழிநடத்துகின்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் எடுத்துரைத்துள்ளது.

குருக்கள் மற்றும் துறவிகளும் குடியிருப்புகளை இழந்த மக்களுடன் தங்கியுள்ளனர். அவர்களின் அறைகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், எளிய விரிப்புக் கம்பளங்கள் மற்றும் கொசு வலைகளைக் கொண்டு தங்கும் இடங்களை ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார் ஆயரின் செயலாளரான தந்தை பீட்டர் கீ மாங். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூன் 2025, 12:29