MAP

உலகின் அண்மை தாக்குதல்கள் உலகின் அண்மை தாக்குதல்கள் 

புதிய அணு ஆயுதப் போட்டியில் ஆசியா முன்னணியில் உள்ளது

உலகின் அனைத்து அணு ஆயுதக் கிடங்குகளின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலை வெளிப்படுத்தியுள்ளது, SIPRI என்னும் ஸ்டாக்ஹோம் உலக அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய அறிக்கை.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்க ஈரான் மீது இஸ்ரேயேல் போர் தொடுப்பதை உலகம் கவனித்து வரும்   அதே வேளையில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற பிற அணு ஆயுத நாடுகளின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த விவரங்களை  வெளியிட்டுள்ளது ஸ்டாக்ஹோம் உலக  அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI).

ஒவ்வோர் ஆண்டும் இந்த நிறுவனம், ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் உலக பாதுகாப்பு நிலை குறித்த மதிப்பீட்டை வெளியிடுகிறது என்றும்,  இந்த நாடுகள் அனைத்தும் கடந்த ஆண்டில் தங்கள் ஆயுதக் கிடங்குகளை புதிய ஆயுதங்களுடன் மேம்படுத்தியுள்ளதாகவும்  இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி நிலவரப்படி, உலகளவில் 12,241 அணு ஆயுதங்கள் இருப்பதாக SIPRI மதிப்பிட்டுள்ளதாகவும்,  அவற்றில் 9,614 பயன்படுத்தத் தயாராக உள்ளன எனவும்,  பெரும்பாலும் அவை இரஷ்யா மற்றும் அமெரிக்காவால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும்,  மேலும் சீனா ஏவுகணைகளுடன் சில போர்க்கப்பல்களை வைத்திருக்கலாம் என்றும் அச்செய்தி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஏற்பட்ட விரோதப் போக்கு அணு ஆயுதங்களால்   தடுக்கப்படவில்லை, மேலும் அவை  தவறான கணக்கீடுகளினாலும், குறிப்பாக தவறான தகவல்களாலும் அபாயத்தை உருவாக்கியது என்றும்  இது  ஒரு நாட்டின் மக்களை பாதுகாப்பற்றதாக  மாற்றக்கூடும் என்றும்  அச்செய்தி மேலும் கூறியுள்ளது.

இதற்கிடையே, முடிவெடுப்பதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, தகவல் தொடர்பு பிழைகள், தவறான புரிதல்கள் அல்லது தொழில்நுட்ப விபத்துக்கள் காரணமாக அணு மோதல் வெடிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும், இத்தகையச் சூழலில், ஒரு நாட்டின் நன்மையை மற்றொரு நாட்டிற்கு எதிராகத் தீர்மானிக்க பாரம்பரியக் கணிப்புகள் பயன்படுத்தப்படுவது இல்லை எனவும், இது உலக நிலைமையை இன்னும் நிச்சயமற்றதாக ஆக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜூன் 2025, 14:22