வாரம் ஓர் அலசல் – மே 22. - உயிரினப் பன்மய தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உயிரினப் பன்மயம் அல்லது பல்லுயிரியம் என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடுகளை உள்ளடக்கியது. இது புவியில் காணப்படும் அனைத்து, பல்வேறுபட்ட சூழல் மண்டலங்களையும், அனைத்து உயிரினங்களையும், அவற்றின் வாழிடங்களையும், மரபணுக்களையும் பற்றி குறிக்கின்றது.
இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள் முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்கின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களிலும், பனிபடர்ந்த கடுங்குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன.
உயிரியல் பல்வகைமை தினம் மே 22ஆம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. உயிரியல் என்பது 'உயிர் வாழ்வன' பற்றிய அறிவியலாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும், அவை எதிர்நோக்கக் கூடிய சவால்களை கவனத்தில் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும், விளக்கங்களையும் முன்வைப்பதாகும்
உலகின் மக்கள்தொகை 2050ஆம் ஆண்டில் 910 கோடியாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அதிகரிக்கும்போது, எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு. சில பத்தாண்டுகளுக்குள் ஆப்ரிக்க நாடான டன்சானியாவின் கிளிமஞ்ஞாரோ சிகரத்தில் பனிச்சரிவுகள் எதுவுமில்லாமல் போகலாம் எனவும், அமெரிக்காவில் உள்ள மன்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் இல்லாமல் போகலாம் எனவும் அச்சம் நிலவுகிறது. அதேநேரம், சுவிட்சர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன. அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின. அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிமலைகள் உருகிக் கரைந்து விட்டன. வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை, காலநிலை மாற்றங்களும் மனித குலத்தை பெருமளவில் அச்சுறுத்தி வருகின்றது. புவியின் வெப்பநிலை அதிகரிப்பதனால் காலநிலைக் கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் நீர் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புகள் போன்றவற்றைக் காண்கின்றோம். நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வறட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமோ என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது. நிலவளம் சீர்குலைந்து வறட்சிகளும், காட்டு நெருப்புகளும் அடிக்கடி ஏற்படலாம். புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சனைகளுக்கு நாம் ஒன்று கூடித் தீர்வு காண முடியும். அவற்றிற்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயம், வருங்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு நமக்கோர் கடமையாகவும் உள்ளது.
நாம் உண்ணும் உணவில் 80 விழுக்காடு இந்த உலகில் வாழும் தாவரங்களையும், விலங்குகளையும் சார்ந்து தான் இருக்கின்றன. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும் மருந்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த உயிரினங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள் தான். இருப்பிடங்கள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்கும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறு நமக்கு இன்றியமையாத பொருட்களான உணவு, உடை, உறைவிடம் என்பவைகளுக்கு நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட இயற்கையான சூழ்நிலையை அறிவியல் வளர்ச்சியின் வழியாக நாம் ஒருநாளும் ஈடு செய்துவிட முடியாது. ஏனெனில், மனிதர்கள் தற்போது நவீன காலத்தில் வாழ்ந்தாலும் இன்றும் தங்களது இன்றியமையாத தேவைகளுக்கு இயற்கையையே சார்ந்துள்ளனர்.
80% தாவரங்களின் மகரந்தரச் சேர்க்கையானது பறவைகள், பூச்சிகள், நத்தைகள், மற்றும் வவ்வால் மூலம் நடைபெறுகின்றது. இதில் தேனீக்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உலகில் உள்ள அனைத்து தேனீக்களும் அழிந்துவிட்டால், அதன்பின் மனிதனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வாழமுடியாது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார். இன்றைய நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 40% மருந்தின் மூலக்கூறுகள் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55%க்கும் அதிகமானவை பல்லுயிர்களையேச் சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் மூலம் நாம் ஆண்டுக்கு 125-140 டிரில்லியன் டாலர் சேவைகளை பெறுகிறோம், அதாவது உலகளாவிய மொத்த உற்பத்தியின் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.
இந்நூற்றாண்டு வரை உலகம் பல பில்லியன் கணக்கான உயிரினங்களை இழந்திருந்தாலும், இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உயிர்ப்பல்வகைமை இழப்புப் பல்மடங்காகப் பெருகியுள்ளது. அமேசான் மற்றும் ஆஸ்திரேலியக் காட்டுத் தீ ஏற்படுத்திய உயிரின இழப்புக்கள் இதற்குத் தகுந்த சான்றாக அமைகின்றன. 2019ஆம் ஆண்டில் அமேசன் காட்டுத் தீயினால் 23 இலட்சம் விலங்குகளும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஏறக்குறைய 50 கோடி விலங்குகளும் அழிவடைந்துள்ளன. உலகில் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள உயிரினங்கள் பற்றிய தகவலை வழங்கும் ஆய்வுப் பட்டியலில் 1,28,918 இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு 35,500க்கும் மேற்பட்ட இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த உயிரினங்களில் 30 விழுக்காட்டு உயிரினங்கள் 2050க்குள் அழிந்துவிடும் என்பதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல் 2020ல் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகம் வெளியிட்ட தகவலின் படி 2070ஆம் ஆண்டளவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்து போகக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த ஒரு கோடி ஆண்டுகளில் இடம்பெற்ற இயற்கையான உயிரின அழிவை விட நூறு மடங்கு அழிவு கடந்த 50 ஆண்டுகளில் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் வாழ்கின்றன. இவற்றுள் 19ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நூற்றாண்டு வரையான காலப் பகுதிக்குள் நிலவாழ் பூர்வீக உயிரினங்கள் 20 விழுக்காடாகவும், ஊர்வன இனங்கள் 41 விழுக்காடாகவும், பவளப்பாறைகள் 33 விழுக்காடாகவும், பூச்சியினங்கள் 10 விழுக்காடாகவும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன.
மேலும், உலகளவில் 1 கோடி ஹெக்டேர் வெப்பக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உலகளவில் காடுகளை விட மூன்று மடங்கு வேகமாக ஈர நிலங்கள் அழிவடைந்துள்ளன. இன்றளவில், நிலவாழ் உயிரினங்கள் 40 விழுக்காடாகவும், கடல்வாழ் உயிரினங்கள் 35 விழுக்காடாகவும் நன்னீர் இனங்கள் 84 விழுக்காடாகவும் உலகளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
ஓர் உதாரணத்திற்கு அமேசான் காடுகளை எடுத்துக் கொள்வோம். அமேசன் காடுகள் ஒரு ஹெக்டேருக்கு 250 வகையான மரங்கள், 25 இலட்சம் பூச்சி இனங்கள், 2000 பறவை மற்றும் பாலூட்டிகள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 2200 மீன்கள், 378 ஊர்வன என ஏராளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ளன. இந்நிலையில் 2019ல் அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஏறக்குறைய 23 இலட்சம் விலங்குகள் இறந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போன்று 2019ல் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஏறக்குறைய 50 கோடி விலங்குகள் உயிரிழந்ததாகவும், 48 கோடி பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கங்காருகள் அழிவடைந்ததோடு 44 ஆயிரம் ஆடுகள், குதிரைகள், கால்நடைகள் மற்றும் பிற வளர்ப்பு விலங்குகள் தீயில் சிக்கிச் சிதைந்து இறந்து போயுள்ளன
இருபத்தோராம் நூற்றாண்டு வரையில் உயிரினங்கள் உலக அளவில் அழிவுக்குள்ளாகி
உயிர்ப் பல்வகைமை இழக்கப்படுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. இயற்கை மரணம் மற்றும் இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் அழிவுகள் என முதல் காரணத்தைக் குறிப்பிடலாம். இரண்டாவது காரணமாக, மனித செயற்பாடுகளின் விளைவாக ஏற்படும் அழிவுகள் வருகிறது. இவ்விரண்டிலும் கூட, சுற்றுச்சூழல் குறித்த அக்கறையற்ற மனித செயல்பாடுகளே இந்நூற்றாண்டின் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கான மூலகாரணமாக உள்ளது. 2019ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 20 ஆயிரத்து 338 இனங்கள மனித நடவடிக்கைகளால் அழிந்து போயுள்ளன.
மனிதனால் உயிர்ப் பல்வகைமை இழக்கப்படுவதற்குள்ளும் ஐந்து காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை, வாழிடம் அழித்தல், ஆக்கிரமிப்பு இனங்களின் அறிமுகம், மாசுபாடு, மக்கள் தொகை அதிகரிப்பு, தேவைக்கதிகமான நுகர்வுக் கலாச்சாரம் என்பனவாகும். இது தவிர இயற்கைப் பேரிடர்கள், விலங்கு வேட்டை, விலங்கு வியாபாரம், அதிகரிக்கும் தொற்று நோய்கள், வணிகச் சுரண்டல் போன்றவை உயிர்ப் பல்வகைமை இழப்பிற்குக் காரணமாக அமைகின்றன.
இன்னொன்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஓர் இனத்தின் அழிவு இன்னோர் இனத்தின் அழிவிற்குக் காரணமாக அமைந்து விடுவதால் இரண்டாம் நிலை அழிவுகள் இடம் பெறுகின்றன. இதனால் பல்வேறு உயிரினங்கள் இழக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தாவர இனங்கள் அழிந்து போகும்போது அவற்றை நம்பியிருக்கும் தேனீக்களும் அழிந்து போவதை இதற்குத் தகுந்த ஆதாரமாகக் குறிப்படலாம். மிகவும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், மானிட இனத்தின் சுயநலமான போக்குகளே, உயிரின இழப்பிற்கான முதன்மைக் காரணமாக இன்று இருந்துவருகிறது.
புவியில் அதிகம் உயிர்ப்பல்வகைமைகளைக் கொண்டுள்ள மழைக் காடுகள் பெருமளவில்
அழிக்கப்படுவதால் உலகின் வெப்பநிலை குறிப்பிடத்தகும் அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பனிக்கட்டி உருகுதல், கடல் மட்ட உயர்வு போன்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும், இன்றும் அரசாங்க ஆதரவுடன் பல நாடுகளிலும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. அவ்வாறே தாவரங்கள், மூலிகைகள், சதுப்பு நிலங்கள் போன்றவையும் அழிக்கப்பட்டு, துண்டாடப்பட்டு மனிதகுல நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் ‘மனித நிலைத்திருப்பு’ என்பதை விட பொருளாதார வளர்ச்சி என்பதற்கே முக்கியத்துவமளிக்கப்படுகின்றது. அனைத்து உயிர்களின் பாதுகாப்பு மற்றும் மண் வளத்தின் வாழ்வு அபிவிருத்தியை நோக்கிய பயணம் இன்னும் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு விடயத்தில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை. எனவே உயிர்ப் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான நிலையான திட்டங்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வகுக்கப்பட்டு பன்னாட்டு அளவில் நடைமுறைப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்