காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இயலுமானவைகளைச் செய்வோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
வாழ்க்கை நிலைமைகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ள காசா பகுதியில் போர்நிறுத்தத்தை அடைய, இயலுமானவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், குண்டுவெடிப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் Juliette Touma
UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி அமைப்பின் இயக்குனரான Juliette Touma அவர்கள், மக்கள் போரினால் அதிகமாக துன்புறுகின்றார்கள் அவர்களுக்கு நிவாரணம் தேவை. பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், மனிதாபிமான மற்றும் வணிக உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போர் தொடங்கி ஏறக்குறைய 580 நாள்களைக் கடந்த நிலையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 52,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் ஏறக்குறைய 1,20,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள Touma அவர்கள், பாலஸ்தீன நிறுவனமான WAFA வின் அறிக்கையின்படி, காசா பகுதி முழுமையான சரிவின் விளிம்பில் உள்ளது என்றும் கூறினார்.
காசா முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், பன்னாட்டு சமூகம் போர்நிறுத்தத்தை எட்ட உதவி வழங்குவதை உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ள Touma அவர்கள், காசாவில் நிலைமை மோசமாக உள்ளது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் முற்றுகையால் நாடு மிகவும் மோசமடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அடிப்படை பொருட்கள், உணவு, நலவாழ்வுப் பொருள்கள், மருந்துகள் தீர்ந்து போன நிலையில் பணிக்குழுக்கள் அங்கேயே இருந்து பணியாற்றுகின்றன என்றும், இப்பணியாளர்களில் பலர் தொடக்கத்தில் கல்வியாளர்களாக இருந்து 3,00,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவினார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் நாளுக்குப் பின், பள்ளிகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு கல்வி நிலையங்கள் இடம்பெயர்ந்தோர் தங்குமிடங்களாக மாறிவிட்டன என்றும், ஒரு காலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்களில் பலர் இப்போது மனிதாபிமான செயல்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்