காசாவில் போதிய சத்துணவின்மையால் குழந்தைகளும் தாய்களும் பாதிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
காசா பகுதியில் உணவு பஞ்சத்தாலும், போதிய சத்துணவின்மையாலும் ஏறக்குறைய 71000 குழந்தைகளும், 17,000 தாய்மார்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பும், உலக உணவு திட்ட அமைப்பும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
காசா பகுதியில் மீண்டும் மோதல்கள் துவங்கியுள்ளதாலும், எல்லைப் பகுதிகள் இன்னும் மூடப்பட்டிருப்பதாலும் உணவு கிட்டா நிலையே தொடர்ந்து நீடிப்பதாகக் கூறும் UNICEF மற்றும் WFPன் இவ்வறிக்கை, மார்ச் மாதம் 2ஆம் தேதியிலிருந்து உதவி நிறுவனங்களுக்கு காசா பகுதியில் நுழைய முடியா நிலை இருப்பதால் பசித் துன்பங்களும் போதிய சத்துணவின்மையும் மக்களை வாட்டுவதாக மேலும் கூறுகிறது.
போதிய சத்துணவின்மையால் 71,000 குழந்தைகளும் 17,000 தாய்மார்களும் துன்புறுவதாகக் கூறும் இவ்வறிக்கை, 4 இலட்சத்து 70ஆயிரம் காசா மக்கள் பசிச் சாவுகளை எதிர்நோக்கியிருப்பதாகவும், காசா பகுதியின் அனைத்து மக்களும் மிகத் தீவிர உணவில்லா நிலையை சந்தித்து வருவதாகவும் கவலையை வெளியிடுகிறது.
ஏற்கனவே இவ்வாண்டின் துவக்கத்தில் பல்வேறு உதவி நிறுவனங்களின் கூற்றுப்படி, ஏறக்குறைய 60,000 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிகள், சுத்தக்குடிநீர் இன்மை, சுகாதார வசதிகளின்மை போன்றவைகளால் துன்புறும் காசா மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையே மிகப் பெரிய அளவில் பாதிப்பைக் கொண்டுவந்துள்ளதாக கூறும் இவ்வறிக்கை, 10 இலட்சம் மக்களுக்கு 4 மாதங்களுக்கு தேவையான 116,000 மெட்ரிக் டன் உணவு, விநியோகிக்கும் அனுமதி வேண்டி எல்லைப் பகுதியிலேயே காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்