யுனிசெப் : ஒவ்வோர் இரண்டு நிமிடத்திற்கு ஒரு பெண் உயிரிழப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வரும் ஞாயிறு, மே மாதம் 11ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் சிறப்பிக்கப்படும் அன்னையர் தினத்தையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலகக் குழந்தைகள் நிதி நிறுவனமான யுனிசெப், பெண்களின் இன்றைய துயர நிலைகள் குறித்த கவலையை வெளியிட்டுள்ளது.
குழந்தை பிறப்பின்போது அல்லது கர்ப்ப காலத்தில் ஒவ்வோர் இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் உயிரிழப்பதாகக் கூறும் யுனிசெப்பின் அறிக்கை, இன்றைய உலகில் 100 கோடி பெண்களும் சிறுமிகளும் போதிய சத்துணவின்றி வாழ்வதாகவும் தெரிவிக்கிறது.
போதிய சத்துணவின்றி வாடும் மக்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் போதிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாட்டை எதிர்நோக்குவதாகவும், 50 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சத்துணவுக் குறைபாடு காரணமாக இரத்தச் சோகையைக் கொண்டிருப்பதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் நிதி நெருக்கடிகளால் தங்கள் உணவை விட குடும்ப அங்கத்தினர்களின் உணவுக்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பதாலும், போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலையிலும், பல அன்னையர்க்கு போதிய கவனிப்பது கிட்டுவதில்லை என்பதை எடுத்துரைக்கிறது ஐ.நா. அமைப்பான யுனிசெப்பின் அறிக்கை.
ஒரு தாயின் சத்துணவின்மை என்பது அவரின் குழந்தைகளையும், வருங்காலத் தலைமுறையையும் பாதிக்கும் எனவும் கூறும் இவ்வறிக்கை, கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சிறப்புக் கவனம் தேவைப்படும் நாடுகளாக பதினொரு நாடுகளை அடையாளம் காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்