உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
போர், மோதல்கள், அதிர்ச்சி தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தீவிர வானிலை மாற்றங்கள், கட்டாய இடம்பெயர்வுகள் ஆகியவை உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தொடர்ந்து தூண்டி வருகின்றன என்றும், பலவீனமான பல பகுதிகளில் பேரழிவு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres.
மே 16, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres அவர்கள், 2024 ஆம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் 29,50,00,000க்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர் என்றும், இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 13,70,00,000 மக்கள் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
பேரழிவு தரும் பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக 19 இலட்சம் மக்களாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள Guterres அவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தை ஊட்டச்சத்து குறைபாடானது, காசா பகுதி, மாலி, சூடான் மற்றும் ஏமனில் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 3,80,00,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடன் இருந்தனர் என்றும், கட்டாய இடம்பெயர்வு காரணமாக ஏற்படும் பட்டினியின் அதிகரிப்பை பன்னாட்டு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார் Guterres.
பசி மற்றும் பட்டினி மனிதகுலத்தின் தோல்வி, 21 ஆம் நூற்றாண்டில் பசி என்பது தவிர்க்க முடியாதது என்றும், வெறும் கைகளாலும், பின்வாங்கிய முதுகுகளாலும் பசியோடு இருக்கும் வெற்று வயிற்றுக்கு நம்மால் பதிலளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் Guterres.
உலகளாவிய உணவு நெருக்கடி குறித்த அறிக்கையானது, உலகு ஆபத்தான பாதையை நோக்கிச் செல்கின்றது என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், நீண்டகால நெருக்கடிகள் இப்போது மக்களின் உணவுத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் கூறியுள்ளார் Guterres.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் உட்பட ஏறக்குறைய 9,50,00,000 மக்கள், உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் வாழ்கின்றனர் என்றும், உலகளாவிய வகையில் ஏறக்குறைய 12,80,00,000 வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த மக்கள், காங்கோ ஜனநாயகக் குடியரசு, கொலம்பியா, சூடான், சிரியா போன்ற நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்