சூடான் தொடர் மோதலால் பாதிக்கப்படும் சிறார் வாழ்வு
மெரினா ராஜ் – வத்திக்கான்
சூடானின் தார்பூரில் ஏற்பட்டு வரும் தொடர் மோதலால் சிறார் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், ஆயிரக்கணக்கான சிறாருக் அவர்களது குடும்பங்களும் தங்கள் வீடுகளை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.
மே3, சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பானது பாதுகாப்பான நீர், தங்குமிடம், உணவு, நலவாழ்வு இன்றி ஏறக்குறைய 1,50,000 பேர் அல் ஃபாஷரில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மற்றும் சிலர் கட்டி, முடிக்கப்படாத கட்டிடங்கள், பள்ளிகள் அல்லது மரங்களுக்கு அடியில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளது.
தவிலா பகுதியில் ஏறக்குறைய 1,80,000 மக்கள் புலம்பெயர்ந்து தற்போது அப்பகுதியில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், இதனால் 800க்கும் மேற்பட்ட மக்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகள் எங்கிருந்தாலும், பாதுகாக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் பிற தடைகள் இல்லாமல் அவர்களை சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் அமைப்பானது, குழந்தைகளுக்கான உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையாக உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளது.
பன்னாட்டு மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களும் அவர்களின் உடைமைகள் மற்றும் பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யுனிசெஃப் அமைப்பானது, மிக முக்கியமாக, குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் போரானது நிறுத்தப்பட வேண்டும், இதுவே சிறந்த வழி என்றும் எடுத்துரைத்துள்ளது.
போரினால் மனிதாபிமான நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன, சில மருத்துவமனைகள் மட்டுமே செயல்படுகின்றன என்றும், மருத்துவப் பொருள்கள் சில வாரங்களில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்