சூடானில் காலரா பரவலால் குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து!
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
சூடான் நாட்டில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல், அதன் கார்ட்டூம் மாநிலத்தில் 7,700-க்கும் மேற்பட்டோரை காலரா நோய் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மே 29, வியாழனன்று, இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், இந்தக் காலரா தாக்குதலில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் 185 பேர் இறந்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.
இந்தக் காலரா தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கார்ட்டூம் மாநிலத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்றும், அங்கு நிகழ்ந்துவரும் வன்முறை இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ளது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து சூழல் மாறிவருவதால் 34,000-க்கும் மேற்பட்ட மக்கள் கார்ட்டூம் மாநிலத்திற்குத் திரும்பியுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் தண்ணீர் மற்றும் உடல்நலம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கிடைக்காத நிலையிலும் அவர்கள் சேதமடைந்த வீடுகளுக்கே திரும்புகின்றனர் என்றும் உரைக்கிறது அந்நிறுவனம்.
இந்நிலையில், கொடிய நோய்கள் மற்றும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை உடல்நலம், தூய்மையான நீர், ஊட்டச்சத்து மற்றும் பிற உயிர்காக்கும் சேவைகளை வழங்க எங்கள் துணைவர்களுடன் இணைந்து சரியான நேரத்திற்கு உதவி செய்ய முயன்று வருகிறோம் என்று சூடானுக்கான யுனிசெஃப் பிரதிநிதி ஷெல்டன் யெட் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு நாளும், அதிகமான குழந்தைகள் காலரா மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் இரண்டு விதமான நோய்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர், ஆனால் சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு உதவ முடிந்தால் இவை இரண்டும் தடுக்கக்கூடியவை மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியவை என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் யெட்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்