வாரம் ஓர் அலசல் – மார்ச் 8. பன்னாட்டு மகளிர் தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அன்று தங்களின் வாக்குரிமைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தராவிட்டால் இன்று வாக்களிக்கும் உரிமையற்று வெறும் பதுமைகளாகவே இருந்து கொண்டிருப்பார்கள் பெண்கள். வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி அவர்கள் போராடி இருக்காவிட்டால் இன்று வெளியிலும் வீட்டிலும் பெண்களின் நேரம் சுரண்டப்பட்டிருக்கும். கொஞ்சம் உற்றுநோக்கினோமென்றால், பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகள் எல்லாம் அவர்களேப் போராடி பெற்றவை. பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த இந்த போராட்டத்தை கௌரவப்படுத்தி சிறப்பிக்க, பன்னாட்டு மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ஐத் தேர்ந்துள்ளோம். பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் கொண்டாடப்படும் இந்நாள், 2025ஆம் ஆண்டில், "செயலை துரிதப்படுத்து" என்ற கருப்பொருளை தலைப்பாகக் கொண்டு சிறப்பிக்கப்படுகிறது.
பன்னாட்டு மகளிர் தினம் என்பது வழக்கமான ஒரு கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு பாலின ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கான ஒரு தினமாக பார்க்கப்படுகிறது. இது பெண் அதிகாரத்திற்கான உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, அரசியல் பிரதிநிதித்துவமின்மை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பெண்களின் உரிமைகளை வடிவமைக்கும் சட்டங்கள் மற்றும் சமூக மாற்றங்களைக் கொணர்வதில் நாம் உறுதியுடன் செயல்படவேண்டும் என்பதை இந்த நாள் நமக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களின் உரிமைகள் பொறுத்தவரையில் இதுவரை கண்ட சாதனைகளை மதிப்பிடுவதற்கும், தடைகளை எதிர்கொள்வதற்கும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஒரு முக்கிய தருணமாக இந்நாள் உள்ளது.
நம்மால் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினம், ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியுமா?. 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, உழைக்கும் பெண்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், கூலியை உயர்த்தவும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரியும், ஏறக்குறைய 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, 1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் என்பவர் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக பன்னாட்டு மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள், முதல் பன்னாட்டு மகளிர் தினத்தைக் கொண்டாடினர். 1911லிருந்து பல நாடுகளில், பல தேதிகளில் ‘பன்னாட்டு மகளிர் மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டுவந்தது. 1975ஆம் ஆண்டுதான் மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா அறிவித்தது. அதைத் தொடர்ந்தே மெள்ள மெள்ள உலக அளவில் இது பரவ ஆரம்பித்தது.
உலக நிலை இப்படியிருக்க, தமிழகத்திலோ, துவக்க காலத்திலிருந்தே பெண்களின் பங்களிப்பும், அவர்களுக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் துவக்க காலத்திலிருந்தே இருந்தது என்றுச் சொல்லலாம். தொன்மை காலத்திலேயே ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், காக்கைப் பாடினியார், வெண்ணிக் குயத்தியார், ஆதி மந்தியார் என சங்க தமிழ் பெண் புலவர்களின் வரிசை நீண்டுகொண்டேச் செல்கிறது. ஆண்களின் அபரிவிதாமன அடக்குமுறை இருந்திருந்தால் நிச்சயமாக இவர்களால் வெளி உலகில் இவ்வளவு புகழோடு இருந்திருக்க முடியாது. இவர்கள் பெண் என்பதற்காக எங்கும் ஒதுக்கப்பட்டதாக வரலாற்றில் இல்லை.
புலமையில் மட்டுமல்ல, போராட்ட குணத்திலும் சிறந்து விளங்கிய, அதாவது இந்திய தேசிய போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் வீராங்கணைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், வேலு நாச்சியார், வை. மு. கோதை நாயகி அம்மாள், கி. சாவித்திரி அம்மாள், அம்புஜத்தம்மாள், குமுதினி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி லட்சுமிபதி, அஞ்சலையம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என சொல்லிக் கொண்டேச் செல்லலாம். மருத்துவம் என்று பார்த்தோமானால் தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் அறுவைச் சிகிச்சை நிபுணர். இந்தியாவின் கானக் குயில்கள் என்று பார்த்தோமானால் தமிழகத்தின் M.S. சுப்புலட்சுமி, T.K. பட்டம்மாள், M.L. வசந்தகுமாரி, K.B. சுந்தராம்பாள் என்ற வரிசை தொடர்கிறது. இவர்களெல்லாம் தமிழகத்தின் பெருமைகள்.
இத்தகைய ஒரு பின்னணியில் பார்க்கும்போது, பெண்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த கொண்டாட்டத்தில், கட்டட வேலை செய்பவர்களும், விவசாயக் கூலி வேலை செய்பவர்களும் கலந்துகொள்கிறார்களா? அவர்களுக்கு இந்த நாளின் முக்கியத்துவம் தெரியுமா?. உண்மையில் அவர்களுக்கு மகளிர் தினம் என்றால் என்ன என்பது தெரியாது. பெண் உரிமை, பெண் விடுதலை பற்றித் தெரியாது. பெண் கல்வி பற்றி தெரியாது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது தெரியாது. அவர்கள் பாட்டுக்கு அன்று கூட மழையில், வெயிலில், வயற்காட்டில், வீட்டில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். இங்கு இருவேறு காட்சிகளைத்தான் நாம் கண்டுவருகிறோம். இதுதான் யதார்த்தம், உண்மை. ஒருபுறம் மகளிர் தினத்தை அதிகமாக கொண்டாடிக் கொண்டே இன்னொரு புறம் ஒரு பகுதிப் பெண்களை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறோம். பெண்கள் தினத்தைக் கொண்டாட ஆரம்பித்த நாளிலிருந்தே இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பெண்களையும் உள்ளடக்கிய ஒரு கொண்டாட்டம்தானே சரியாக இருக்க முடியும்? ஒரு பகுதி பெண்கள் அதுகுறித்த எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதற்கு எது காரணம்? என்பது குறித்து நாம் என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
கல்வி சார்ந்த பணிகள் உயர்வானவை, கற்றறிந்த பெண்கள் தான் உயர்வானவர்கள், உடலுழைப்பு சார்ந்த வேலைகள் தாழ்ந்தவை, படிக்காத பெண்கள் தாழ்ந்தவர்கள் என எண்ணுதல்தான் மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது. இந்த மேட்டிமைத் தனத்தில் இருந்து நாம் வெளியே வரும்போதுதான் மகளிர் தினம் என்பது எல்லா பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆம். ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட, உடலுழைப்பு சார்ந்த பணிகளைச் செய்துவரும் பெண்களையும், ஏனையப் பெண்களோடு, பெண் அரசியலோடு இணைக்க வேண்டும். இது நிகழவில்லை என்றால் மகளிர் தினம் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண் என்னும் பாலினம் மட்டுமன்று. மாறாக, சாதி, மதம், வர்க்கம் எல்லாமுமே செயல்படுகின்றன என்பதை நாம் கண்களைத் திறந்து, பக்கச் சார்பின்றிப் பார்க்கப் பழக வேண்டும். இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்கத் துவங்க வேண்டும்.
எப்போதெல்லாம் எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் அங்கெல்லாம் பெண் உரிமைக்காகப் போராடுவதும், போராட்டத்தின் நியாயங்களை சமூகத்துக்கு எடுத்துச் செல்வதும்தான் பெண்களுக்கு உண்மையான மகளிர் தினக் கொண்டாட்டம் என்பதை உணரவேண்டும். அன்றுதான், பன்னாட்டு மகளிர் தினம் தன் நோக்கத்தில் நிறைவு காணும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்