MAP

காங்கோ சிறார் காங்கோ சிறார் 

ஆபத்தில் இருக்கும் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு

ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு என 40 க்கும் மேற்பட்ட நாடுகள், தாங்கள் இதுவரை பெற்று வந்த அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு உதவியானது நிறுத்தப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையானது அதிக அளவு உயர்ந்துள்ளதாலும், நிதிப்பற்றாக்குறையினாலும் ஏராளமான குழந்தைகளின் வாழ்க்கையும் எதிர்காலமும் ஆபத்தில் இருக்கின்றன என்று எடுத்துரைத்தார் Inger Ashing.

மார்ச் 3, திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள சேவ் த சில்ரன் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பின் தலைமை நிர்வாகி Inger Ashing அவர்கள்,

குழந்தைகளில் முதலீடு செய்வதற்கும், பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்திற்கான அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் நாம் கடமை கொண்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு என 40 க்கும் மேற்பட்ட நாடுகள், தாங்கள் பெற்று வந்த அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு உதவியானது நிறுத்தப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் இலட்சக்கணக்கான சிறுவர் சிறுமிகளுக்கு பயனளித்து வந்த நலவாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் கல்வித் திட்டங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

நிதிப் பற்றாக்குறையினால் குழந்தைகளுக்கான பல்வேறு முக்கியமான திட்டங்களை நிறுத்த வேண்டியிருப்பது மனவேதனை அளிக்கிறது என்றும், எதிர்காலத்திற்குத் தகுதியான குழந்தைகளின் வாழ்வைப் பாதிக்கும் இச்செயல் மிகவும் வருத்தத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார் இஞ்சர்.

குழந்தைகள் நல்வாழ்விற்கென்று வழங்கப்படும் நிதியானது எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1 கோடியே 70 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் உணவுக்கிடங்குகளிலும், சரக்கு வாகனங்களிலும், விற்பனையாளர்களிடமும் சிக்கியுள்ளன என்றும்,  உணவிருந்தும் அதை உண்ண முடியாத சூழலில் மக்கள் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் இஞ்சர்.

சேவ் தி சில்ட்ரன், அமைப்பின் திட்டங்களால் பயனடையும் 80 இலட்சம் முதல் 1 கோடியே 20 இலட்சம் வரையிலான மக்கள் இந்த நிதி நிறுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும், உலகளவில் 11 குழந்தைகளில் 1 பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்ற சூழல் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது சேவ் த சில்ரன் அமைப்பு.

முன்னெப்போதும் இல்லாத நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு, ஏறக்குறைய 115 நாடுகளில் செயல்படும் சேவ் தி சில்ட்ரன், செலவுகளைக் குறைக்கத் தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது என்றும், உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து அனுமதிக்கும் பிற நிதி ஆதாரங்களையும் ஆராய்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் இஞ்சர்.

நிதி பற்றாக்குறை உலகெங்கிலும் உள்ள உள்ளூர் அலுவலகங்களின் 2,300 சக பணியாளர்களைப் பாதிக்கிறது என்றும், இலங்கை, போலந்து, பிரேசில், ஜார்ஜியா மற்றும் லைபீரியாவில் செயல்பாடுகள் மூடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் இஞ்சர்.

மோதல், காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் சமத்துவமின்மை போன்ற காரணிகளின் கலவையால், அமெரிக்க வெளிநாட்டு உதவியானது நிறுத்தப்பட்டுள்ளது என்றும், குழந்தைகளின் தேவைகள் எப்போதும் அதிகமாக இல்லாத அளவுக்கு உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் இஞ்சர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 15:59