MAP

ஆபத்தான பயணம் மேற்கொண்டு வரும் புலம்பெயர்ந்தோர் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வரும் புலம்பெயர்ந்தோர்  

மத்தியதரைக் கடலில் அண்மையில் 40 பேர் உயிரிழப்பு!

2014-ஆம் ஆண்டு முதல், மத்தியதரைக் கடலில் 31,500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும், இதில் 1,300 சிறார்களும் அடங்குவர் : உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அண்மையில் மத்தியதரைக் கடலில் பயணம் செய்த புலம்பெயர்ந்தோரில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

மார்ச் 19, இப்புதன்கிழமையன்று, இத்தகவலை வழங்கியுள்ள இந்த அமைப்பு, உலகின் மிக மோசமான கடல் பாதைகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தை அடைவதற்குப் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ வழிகள் இல்லாத நிலையில், மக்கள் தொடர்ந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணித்து வருவதால், இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடு திரும்பும் சட்டங்களில் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், இந்தத் துயரங்கள் தொடர்கின்றன என்று கூறியுள்ள அவ்வமைப்பு, லம்பேடுசாவை வந்தடைந்த உயிர் பிழைத்தவர்கள், 56 பேருடன் ஒரு படகில் துனிசியாவிலிருந்து புறப்பட்டனர் என்றும் கூறியுள்ளது.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஏறத்தாழ 9,000 பேர் கடல் வழியாக இத்தாலிக்கு வந்துள்ளனர் என்றும், இதில் 1,000 பேர் ஆதரவற்ற சிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது இந்த உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

மேலும் 2014-ஆம் ஆண்டு முதல், மத்தியதரைக் கடலில் 31,500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும், இதில் 1,300 சிறார்களும் அடங்குவர் என்றும் புள்ளிவிபரங்களுடன் புலப்படுத்தியுள்ளது இவ்வமைப்பு.

Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவளித்து வருவதுடன், ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பின் அவசியத்தையும் ஐரோப்பாவிற்குச் சட்டப்பூர்வ பாதைகளைத் திறக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றிப்பைக் காட்டவும், மேலும் இறப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தும் இவ்வமைப்பு, பாதுகாப்பான பாதைகள் மற்றும் மேம்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கும் அழைப்புவிடுத்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மார்ச் 2025, 14:34