MAP

அகில உலக மகளீர் தினம் அகில உலக மகளீர் தினம்   (ANSA)

உலகளாவிய மாற்றத்திற்கான ஆற்றல் வாய்ந்த சக்தி பெண்கள்

பாலின சமத்துவமின்மையைச் சமாளிப்பதற்கான அயராத முயற்சிகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உள்ளன என்றும், ஒரு பெண் பள்ளிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன

மெரினா ராஜ் - வத்திக்கான்

பதின்பருவப் பெண்கள் உலகளாவிய மாற்றத்திற்கான ஆற்றல் வாய்ந்த சக்தியாக உள்ளனர் என்றும், சரியான நேரத்தில் சரியான ஆதரவுடன், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், உலகத்தை மறுவடிவமைக்கவும் அவர்கள் உதவ முடியும், என்றும் கூறியுள்ளார் UNICEF நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல்.

மார்ச் 8, சனிக்கிழமை அகில உலக மகளீர் தினத்தை முன்னிட்டு பெண்ணின் இலக்குகள்: இளம்பெண்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? பதின்பருவப் பெண்களின்  30 ஆண்டு உரிமைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் UNICEF எனப்படும் பன்னாட்டு அமைப்பின்  நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல்

கல்வி, திறன்கள், பாதுகாப்பு, அடிப்படை உடல்நலம், ஊட்டச்சத்து சேவைகள் போன்ற முக்கியமான பகுதிகளில் செய்யும் முதலீடுகள், உலகெங்கிலும் உள்ள இளம்பெண்களின் திறனை அதிகரித்து, சமூகங்கள் மற்றும் நாடுகளை உயர்த்துவதற்கான வழிகளைச் செய்யும் என்றும் எடுத்துரைத்துள்ளார் கேத்தரின் ரஸ்ஸல்.

மேலும், பாலின சமத்துவமின்மையைச் சமாளிப்பதற்கான அயராத முயற்சிகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உள்ளன என்றும், ஒரு பெண் பள்ளிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன என்றும் கூறியுள்ளார் ரஸ்ஸல்.

இதனால் பெண்கள் இளம்வயதில் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவுபட்டுள்ளன என்றும், சிறுவயதிலேயே கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்துள்ளன என்றும் எடுத்துரைத்துள்ள ரஸ்ஸல் அவர்கள், பெண்களின் இத்தகைய முன்னேற்றம் குறித்து மகிழ்வடையும் நேரத்தில் தொடர் அச்சுறுத்தல், பாகுபாடு மற்றும் முறைகேடுகளுக்குப் பெண்கள் ஆளாகும் நிலையும் தொடர்ந்து இருந்துகொண்டு தான்  இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல இளம்பெண்கள் வன்முறை, மட்டுப்படுத்தப்பட்ட கல்வி மற்றும் நலவாழ்வுப் பணிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்றும், “ஒருவரையும் விலக்காமல் அனைவரையும் உள்ளடக்கிய” என்ற உறுதிமொழிக்கு ஏற்ப செயல்பட அவசர நடவடிக்கை தேவை என்றும் எடுத்துரைத்துள்ளார் ஐ.நா.வின் மகளிர் தலைமை இயக்குநர் சிமா பஹோஸ்.

மேலும், ஒவ்வொரு பெண்ணின் திறமையும் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கு முன் இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியிருக்கிறது என்று அறிவுறுத்தியுள்ள பஹோஸ் அவர்கள், அனைத்து இளம்பெண்களையும் மேம்படுத்துவது என்பது மிகவும் நிலையான, சமமான மற்றும் அமைதியான உலகத்திற்கான உறுதியான முதலீடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குநர் சிமா பஹோஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மார்ச் 2025, 14:30