பள்ளி செல்லும் வாய்ப்பை இழக்கும் ஹெய்ட்டி குழந்தைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஹெய்ட்டியில் அமைதி, நிலைத்த தன்மை மற்றும் நிதியுதவி மிகவும் தேவை என்றும், 5 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி செல்லும் வாய்ப்பைப் பெறவில்லை என்றும் யுனிசெஃப் அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மார்ச் 1, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள யுனிசெஃப் அமைப்பானது, குழந்தைகள் பள்ளி செல்ல இயலாமல் இருப்பது ஆயுதம் ஏந்திய குழுக்களின் அதிகரிப்பினால் அல்ல, மாறாக நன்கொடையாளர்களின் பற்றாக்குறையினால் என்றும் எடுத்துரைத்துள்ளது.
கடந்த 2024 -ஆம் ஆண்டில் 284 பள்ளிகள் அழிக்கப்பட்ட நிலையில், கல்வியின் மீதான இடைவிடாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இவ்வாண்டு (2025) ஜனவரி மாதத்தில் மட்டும் ஹெய்ட்டியின் தலைநகரில் 47 பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளதால் இலட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி கற்க இடம் இல்லாமல் தவிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஹெய்ட்டி முழுவதும் அதிகரித்து வரும் வன்முறையினால், பல குழந்தைகளின் கடைசி நம்பிக்கையாகவும் பெற்றோரின் முதன்மையான முன்னுரிமையாகவும் இருக்கும் கல்வியானது இதுபோன்று, இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்ததில்லை என்றும் எடுத்துரைத்துள்ளது.
ஏறக்குறைய 10 இலட்சம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறும் அபாயத்தில் உள்ளனர் என்றும், பள்ளியில் கல்வி பயிலாத குழந்தைகள் ஆயுதக்குழுக்களில் சேர்க்கப்பட்டு சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெஃப் அமைப்பின் அறிக்கை.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி குழந்தைகளுக்கு தரமான கற்றலை உறுதி செய்வதற்காக, முறையான மற்றும் முறைசாரா கல்வி முன்னேற்பாடுகளை யுனிசெஃப் அமைப்பு வழங்குகிறது என்றும், போர்த் தாக்குதல்களின்போது சேதமடைந்த பள்ளிகளை சீரமைத்தல், தற்காலிக கற்றல் இடங்களை அமைத்தல், இடம்பெயர்ந்த குழந்தைகளை பள்ளிகளில் மீண்டும் இணைத்தல் ஆகியவற்றை செய்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப் அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்