வாரம் ஓர் அலசல் - உலக அரசு சாரா அமைப்புகள் தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலக அரசு சாரா அமைப்புகளின் (NGO) பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள்தான் பிப்ரவரி 27ல் சிறப்பிக்கப்படுகின்றது. அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களின் தனித்துவத்தை நிலைநாட்ட அனுசரிக்கும் நாள்தான் பிப்ரவரி 27. அனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்தே தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் உரிமை இயக்கம் போன்றவையெல்லாம் பல வேளைகளில் அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவதாக இருந்தன. இவைகளை அரசு சார்பற்றவர்களால்தான் ஆற்றமுடியும். இப்படி எழுந்தவைதான் அரசு சாரா இயக்கங்கள் அல்லது அமைப்புகள். ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் ‘அரசு சார்பற்ற அமைப்பு’ என்பது தன் முக்கியத்துவத்தின் உச்சத்தை எட்டியது. இந்த பெயர், 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது என்று கூறுவதும் மிகையாகாது. அரசு சாரா இயக்கம் என்று நாம் கொண்டாடுவது, அரசு சார்பற்றதாக இருந்தால் மட்டும் போதாது மாறாக, இலாப நோக்கமற்றதாகவும், உலகை வடிவமைப்பதிலும், அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்றுவதிலும் சிறப்புப் பங்காற்றுவதாகவும், தன்னலமற்ற சேவையை ஆற்றுபவைகளாகவும் இருத்தல் அவசியம்.
சுற்றுச்சூழல், மனித உரிமை, கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இது தவிர போரின் பாதிப்பு, மற்றும் தொற்றுநோய் காலங்களில் இதன் பணி மகத்தானது. உலகளவில் ஏறக்குறைய 1 கோடி என்.ஜி.ஓ.க்கள் செயல்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் பணியை அங்கீகரித்து பாராட்டுவதற்கும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து அற்புதமான நபர்களுக்கும் நன்றி கூறுவதற்கும், உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி சிந்திக்கவும் என சிறப்பான முறையில் ஒதுக்கப்பட்ட நாள்தான் இந்த பிப்ரவரி 27. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக, அதாவது தலைப்பாக, ‘நிலையான வருங்காலத்திற்கென அடித்தட்டு இயக்கங்களுக்கு அதிகாரமளித்தல்’ என்பது எடுக்கப்பட்டுள்ளது. நீடித்த சமூக மாற்றத்தைக் கொணரவும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு சாரா அமைப்புக்களின் பங்களிப்பை எடுத்துரைப்பதாக, வலியுறுத்துவதாக இந்த தலைப்பு உள்ளது.
எப்போது துவங்கியது?
2009ஆம் ஆண்டே இந்த அரசு சாரா அமைப்பு நாள் முன்மொழியப்பட்டபோதிலும், 2014 பிப்ரவரி 27ஆம் தேதிதான் இந்நாள் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இலாப நோக்கமற்ற அரசு சாரா அமைப்புக்கள் என்பவை பல்வேறு வளரும் நாடுகளில் தங்கள் சேவைகளை இலவசமாக வழங்குவதோடு, பல்வேறு நடவடிக்கைகளையும் எடுக்கின்றன.
எடுத்துக்காட்டாக சிலவற்றின் பணிகளைக் கொஞ்சம் உற்று நோக்குவோம்.
மக்களுக்கு நீர் (Water for people) என்பது அமெரிக்க அடிப்படையிலான அரசு சாரா அமைப்பு ஆகும். இது 1991 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நீர் வழங்கல் சங்கம் மூலம் நிறுவப்பட்டது. மக்களுக்கு நீர் அமைப்பானது வளரும் நாடுகளில் உயர்தரக் குடிநீர் மேம்பாட்டுக்காகவும் மற்றும் துப்புரவு சேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் வேலை செய்கிறது. இந்த அமைப்பின் நோக்கம் என்னவென்றால், உலகில் யாரும் நீராலோ அல்லது துப்புரவு சேவைக்குறைப்பாட்டாலோ இறக்கக் கூடாது என்பதாகும். ‘மக்களுக்கான நீர் அமைப்பு’ ஏற்கனவே 9 நாடுகளில் 40 இலட்சம் மக்களுக்குப் பாதுகாப்பான நீர் மற்றும் துப்புரவு வசதிகளை வழங்கியுள்ளது.
மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பு, அதாவது ‘எல்லைகளற்ற மருத்துவம்’ என்பது, 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, அரசு சார்பற்ற ஒரு மருத்துவ சர்வதேச மனிதாபிமான நிறுவனமாகும். இது ஒரு சிறு பிரெஞ்சு மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. இது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவ உதவி வழங்குகிறது. இதில் 30,000க்கும் அதிகமான செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து வல்லுனர்கள், சுகாதாரம் மற்றும் நீர்வழி பொறியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர்.
கேர் (CARE), அதாவது கேர் இன்டர்நேஷனல் என்பது ஒரு பன்னாட்டு அரசு சார்பற்ற நிறுவனமாகும். இது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உலகளாவிய வறுமையை ஒடுக்குவதற்கும் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்துவதற்கும் உழைக்கும் அமைப்பாகும். கேர் இன்டர்நேஷனல் 1945இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மனிதாபிமான உதவி நிறுவனங்களில் ஒன்றாகும். 94க்கும் மேற்பட்ட நாடுகளில் கேர் பணியாற்றுகிறது. பாதுகாப்பு அவசரநிலை, நீர் மற்றும் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் இவ்வமைப்பு கவனம் செலுத்துகிறது.
அகுமன் அமைப்பு, உலகெங்கிலும் உள்ள வறுமை, உடல்நலம் மற்றும் பசி போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொழில் முனைவோர் அணுகுமுறையைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஏழை மக்களுக்கு ஏற்ற நலன்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இது உதவுகிறது.
க்யூர் வயலன்ஸ், என்பது முன்னர் சீஸ்பயர் (Ceasefire) என அழைக்கப்படும் சிகாகோவை சேர்ந்த அமைப்பாகும். இது சமுதாயத்தில் வன்முறைகளைக் குறைப்பதற்கும், அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறிந்து சமூக நெறிமுறையை மாற்றுவதற்கும் உலகம் முழுவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முதல் ஆண்டிலேயே 67 விழுக்காட்டு துப்பாக்கி சூடுகளைக் குறைத்துள்ளது.
இவ்வாறு பல அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளன.
இவைகள் உலகளவில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித உரிமைகளுக்காக வாதிடுவதற்கும், நெருக்கடி காலங்களில் உதவி வழங்குவதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அயராது உழைக்கின்றன. உலக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதாவது அரசு சாரா அமைப்புக்கள் நம் உலகில் அதிகம் அறியப்படாத கதாநாயகர்கள் என்று கூறலாம். இவர்கள், குரல் இல்லாதவர்களின் குரல். இவர்கள் கருணையின் ஆற்றலை செயலில் காட்டுபவர்கள். எதிர்கால தலைமுறைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள். நேர்மறையான மாற்றத்தின் அலைகளை உருவாக்குபவர்கள். ஒற்றுமையின் வலிமையை நினைவூட்டுபவர்கள். இவர்கள், சமூக நீதியின் சிற்பிகள். ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் நாம் அனைவரும் பங்கு வகிக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டி நிற்பவர்கள். ஆம், மாற்றம் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்குகிறது என்பதை இவர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றார்கள். இவர்கள், நீதிக்கான உறுதிப்பாட்டைக் கொண்டு, மனித உரிமைகளின் பாதுகாவலர்களாகச் செயல்பட்டு, நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தருபவர்களாகச் செயல்படுகிறார்கள். இன்றைய உலகிற்கு இவர்கள்
நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது, ஊக்கமளிக்க வேண்டியது நம் கடமை. ஒரு சிறிய இரக்கச் செயல்கூட பெரும் மாற்றத்திற்கு வித்திட வல்லது. நாளைய உலகிற்காக உழைக்கும் தன்னலமற்ற அரசு சாரா அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவோம். ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வோம். அரசு சரா அமைப்புக்கள் உதவிகளை மட்டும் வழங்கவில்லை, அதற்கும் மேலாக, வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகின்றன. அவைகள் ஏழ்மையை அகற்றுவதற்கும், நல மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்காகவும், இவ்வுலக வளங்களைக் காக்கவும் உழைக்கும்போதெல்லாம் அவைகளின் அடிமனதில் இருக்கும் நோக்கமெல்லாம், வளமான, வாழ்வதற்கு இயைந்த வருங்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அவைகளும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. நிதியின்மை, அரசின் கட்டுப்பாடுகள், அங்கீகாரமின்மை என எத்தனை சவால்கள் இருப்பினும், மக்கள் நலனே அவர்களை முன்னோக்கி உந்தித் தள்ளுகிறது. இதில் நம் ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நாம் நம்மால் இயன்ற நிதியுதவி ஆற்றலாம், அவர்களுடன் இணைந்து சுயவிருப்பப் பணியாளர்களாகச் செயலாற்றலாம், அவர்களின் பணிகள் குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஊட்டலாம் என பல்வேறு வழிகளில் நாம் அவர்களுக்கு உதவலாம். சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கவும் ஒத்துழைக்கவும் மக்களை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை.
சிக்கலான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவருக்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும் கூட்டு நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்பதை இந்த நம் கடமை நினைவூட்டி நிற்கிறது. ஏனெனில், மனித உரிமைகள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதிலும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உலக அரசு சாரா அமைப்புக்களின் நாளைச் சிறப்பித்து, வருங்காலத்திற்கு வழிகோல்வதில் நம் பங்கையும் ஆற்றுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்