காங்கோவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) சில பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான விதிமீறல்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாகப் பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 27, வியாழக்கிழமை இன்று, அறிக்கையொன்றில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள அந்நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதியன்று தொடங்கிய வன்முறையின் கடைசி அதிகரிப்பிலிருந்து இங்கு இடம்பெற்று வரும் சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2.5 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், கடத்தல்கள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கொலைகள் மற்றும் ஊனமுற்றோர் நிலை ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதானத் தாக்குதல்கள் பன்னிரெண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் துயரம் நிறைந்த சூழலில் வன்முறையால் பிரிந்த குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் உரைத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மேலும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் இம்மோதலிலிருந்து விடுபடுவதற்கும், மனிதாபிமான தீர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் அனைத்துலகச் சட்டங்களுக்கு இணங்குமாறு அனைத்து மோதல் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்