MAP

ஹெய்ட்டி குழந்தைகள் ஹெய்ட்டி குழந்தைகள் 

நெருக்கடிச்சூழலின் சுமையைத் தாங்கி வாழும் ஹெய்ட்டி குழந்தைகள்

நாட்டில் ஏறக்குறைய 30 இலட்சம் குழந்தைகள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

"ஹெய்ட்டியில் வாழும் குழந்தைகள் நெருக்கடியான சூழலின் சுமையைத் தாங்கி வருகின்றனர் என்றும், ஹெய்ட்டி அரசாங்கமும் பன்னாட்டு சமூகமும் இணைந்து குழந்தைகளின் உயிரையும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் அவசரமாக தலையிட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் யுனிசெஃப் குழந்தைகள் நல அமைப்பின் இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல்.

நாட்டில் ஏறக்குறைய 30 இலட்சம்  குழந்தைகள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும், போர்ட் ஓ பிரின்ஸ் பெருநகரப் பகுதியில் மட்டும் 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி மோசமான நிலையில் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் மீதான முற்றுகை முயற்சிகள் அதிகப்படியான இடம்பெயர்வை ஏற்படுத்தியுள்ளன என்றும்,  இரண்டு வாரங்களில் ஏறக்குறைய 40,000 பேர் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார் இயக்குநர் ரஸ்ஸல்.

ஆயுதக் குழுக்களுக்கு குழந்தைகளை ஆள்சேர்ப்பு செய்தல், அக்குழுக்களில் பயன்படுத்துதல், பாலியல் வன்முறை, மற்றும் குழந்தை உரிமை மீறல் போன்றவற்றை நிறுத்தவேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளை மீண்டும் புதுப்பிப்பதாக எடுத்துரைத்த ரஸ்ஸல் அவர்கள்,  தேவையிலிருக்கும் மக்கள், இடம்பெயர்ந்தோர், உட்பட பாதிக்கப்படக்கூடிய சமூக மக்களுக்கு உதவ மனிதாபிமானப் பணியாளர்களுக்குத் தடையின்றி அணுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பல வருட அரசியல் சீரற்ற நிலை கொந்தளிப்பு,  பேரழிவு தரும் வறுமை, சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வு ஆகியவை ஹைட்டியில் ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளன என்றும்,  உயிர்வாழ்வதற்கான அல்லது பாதுகாப்புக்கான பிற வழிகள் இல்லாத நிலையில், குழந்தைகள் ஆயுதக் குழுக்களில் சேர அதிகளவில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் ஹெய்ட்டி பகுதி சூழலை விவரித்துள்ளார் ரஸ்ஸல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜனவரி 2025, 15:30