இலாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயினால் 24 பேர் உயிரிழப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
அமெரிக்காவின் இலாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் 4 இல்ட்சம் பேர் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதத்தின் முதல் வாரமாகிய 7 திங்கள் கிழமை பரவத்தொடங்கிய தீயானது காற்றின் வேகம் காரணமாக மக்கள் வாழும் பகுதிகளில் பரவி அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இத்தீ ஏற்பட்ட காரணம் எது என சரியாக தெரியாத நிலையில் வீடற்ற மக்கள் குளிருக்காக நெருப்பு கொழுத்தியது, மின்கசிவு, மழையின்றி காய்ந்து போன பைன் மரங்களில் ஏற்பட்ட நெருப்பு என பல காரணங்கள் கூறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 50,000 ஏக்கர் அளவுக்கு பரவியுள்ள தீயானது 40,000 ஏக்கர் பரப்பளவினை முழுமையாக எரித்து பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும், ஏறக்குறைய 7,500 தீயணைப்பு வீரர்கள், ஏராளமான வானூர்திகள், விமானங்கள் வழியாக தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலையும் மலை சார்ந்த பகுதியுமான இலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே 200 மைல் தொலைவில் கிரேட் பேசின் பாலைவனம் அமைந்துள்ளது என்றும், அங்கிருந்து வரும் வறண்ட காற்று வழக்கத்தைவிட அதிவேகமாக 80 கி.மீ. வேகத்தில் வீசி காட்டுத் தீயாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏறக்குறைய 13,000-க்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துள்ளன என்றும், ஏறக்குறைய 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், காட்டுத் தீயை அணைக்க கனடா, மெக்சிகோ நாடுகள் உதவிக் கரம் நீட்டி வருகின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்