கடவுளின் மந்தையைப் பராமரிக்க அழைக்கப்பட்டவர்கள் ஆயர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவை என்பது கடவுளின் மந்தை, அது கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட கடவுளின் மக்களைக் கொண்டது என்றும், ஆயர்கள் பாதுகாவலர்களாக, உண்மையான உரிமையாளராம் கடவுளின் விருப்பத்தின்படி, கடவுளின் மந்தையை வழிநடத்த அழைக்கப்பட்டனர் என்றும் கூறினார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
செப்டம்பர் 4 உரோமில் உள்ள புனித பேதுரு திருப்பீடக்கல்லூரியில் நடைபெற்ற புதிய ஆயர்களுக்கான உருவாக்கப்பயிற்சியில் பங்குபெற்ற ஆயர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு எடுத்துரைத்தார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
கடவுள் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும், திருஅவை மற்றும் திருத்தந்தை வழியாகவும், மறைமாவட்ட ஆயர்களாக, தூய ஆவியின் துணையுடன் உங்களை நியமித்துள்ளார் இதனை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் கூறினார் கர்தினால் அந்தோணியோ தாக்லே.
“எதிர்நோக்கிற்கான ஒரு பகுதியைத் திறத்தல் – யூபிலி ஆண்டில் ஆயர்களாக" என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கர்தினால் தாக்லே, திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் நவ்சுக், பொர்துனாதுஸ், புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா ஆகியோர் உரையாற்றினர்.
ஆயர்களாகிய நாம் அனைவரும் பாதுகாவலர்கள், எஜமானர்கள் அல்ல என்று மொழிந்த கர்தினால் தாக்லே திருத்தூதர்களின் வழித்தோன்றல் என்பது "மரியாதையின் வழித்தோன்றல் அல்ல. இது நம்முடைய தகுதியோ அல்லது, நம்முடைய தகுதிகளைச் சார்ந்ததோ அல்ல என்றும், நாம், பலவீனமான மனிதர்கள், தூய ஆவியானவர்தான் நம்மை அங்கே வைத்திருக்கிறார் என்பதை மறந்துவிடுவதற்கான சோதனை எப்போதும் நமக்கு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆயர் பதவி என்னும் பரிசைப்பெற நாம் தகுதியற்றவர்கள் எனில், நாம் அந்த பரிசை ஒவ்வொரு நாளும் மனத்தாழ்மையுடனும் நன்றியுடனும் பெற வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், திருத்தூதர்களான தூய பேதுரு மற்றும் பவுலின் வார்த்தைகளின் அடிப்படையில், தூய ஆவியின் படியும் திருஅவையின் வாழும் பாரம்பரியத்தின்படியும் செயல்படும் ஆயர்களாக இருக்க வலியுறுத்தினார்.
திருஅவை என்பது கடவுளின் மந்தை, அது கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட கடவுளின் மக்களைக் கொண்டது என்றும், ஆயர்கள் பாதுகாவலர்களாக, உண்மையான உரிமையாளராம் கடவுளின் விருப்பத்தின்படி, கடவுளின் மந்தையை வழிநடத்த அழைக்கப்பட்டனர் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்