கிறிஸ்துவின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் அருளாளர் மதலேனா போதி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அருளாளர் மரியா மதலேனா போதி தன்னை கற்போடு இறைவனுக்கு அர்ப்பணித்து மறைசாட்சியாளராக இறந்தவர் என்றும், தனது 24 வயதில் கிறிஸ்துவின் மீது கொண்ட தனிப்பட்ட அன்பின் பலனாக தன்னையே அவருக்கு அர்ப்பணித்து கற்புடன் வாழ்ந்தார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பீட்டர் எர்தோ.
செப்டம்பர் 6, சனிக்கிழமையன்று ஹங்கேரியின் வெர்ஸ்ப்ரெம் என்னும் இடத்தில் மரிய மதலேனா போதி என்பவர் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் பீட்டர் எர்தோ.
கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும், தங்கள் சொந்த நிலைக்கு ஏற்ப, கற்புக்கான அழைப்பைப் பெற்றுள்ளனர் என்று வலியுறுத்திய கர்தினால் அவர்கள், திருமணமான தம்பதிகள் நம்பிக்கைக்கும், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரிய முடிவுகளுக்கு முன் ஒழுக்கமான தயாரிப்புக்கும், துறவறம் மற்றும் குருத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்துவுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும், மற்றவர்களுக்கு முழுமையான பணியாற்றவும் அழைப்பு பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.
இன்றைய உலகில் இந்த இலட்சியத்தை வெளிப்படுத்துவதும் பின்பற்றுவதும் எவ்வளவு கடினமாக இருந்தாலும், இறை அருளானது மனித வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யும் திறன் கொண்டது என்றும், ஒரு நீதியுள்ள மற்றும் புனிதமான நபர் முழு சமூகங்களின் ஆன்மீக மையமாகவும் ஆதரவாகவும் இருக்க முடியும். அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவர்களின் மரணத்திற்குப் பிறகும் வழியைக் காட்ட முடியும் என்றும் தெரிவித்தார் கர்தினால் எர்தோ.
சிறுவயது முதலே இறைபக்தியும் ஞானமும் கொண்டு விளங்கிய அருளாளர் போதி அவர்கள், இளமையிலேயே தனது கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர் என்றும், எந்த ஒரு துறவற சபையிலும் சேராமல் பொது நிலையினராகவே இருந்த அவர் கன்னிமையோடு தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்து செப மனநிலையில் வாழ்ந்தவர் என்றும் கூறினார் கர்தினால் எர்தோ.
1941 ஆம் ஆண்டு பெசலில் உள்ள ஒரு தியான இல்லத்தில் தனது முதல் ஆன்மீக தியானத்தை மேற்கொண்ட அவர், அங்கு, கத்தோலிக்க நடவடிக்கைக்காக திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி பெற்று கடவுளின் அருளை உணர்ந்தார் என்றும் அருள்சகோதரியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட போதும் அவரது பெற்றோர்கள் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தால் துறவற மடத்தில் சேர இயலாமல் போனார் என்றும் கூறினார்.
பெண்கள் தொழிற்பயிற்சியில் பணியாற்றியபோது அங்கு இருந்த பெண்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றக் காரணமாக இருந்தார் என்றும், தனது நற்செய்தி அறிவிப்புப் பேரார்வத்தைக் கைவிடாது, கிறிஸ்துவின் மீது ஒரு சிறப்பான அன்பு கொண்டு தன் வாழ்க்கையை முழுமையாக அவருக்கு அர்ப்பணித்தார் என்றும் கூறினார் கர்தினால்.
1945ஆம் ஆண்டு மார்ச் 23, அன்று சோவியத் துருப்புக்கள் கிராமத்தை வந்தடைய அப்போது அங்கு வந்த படைவீரர்கள் அவரை பதுங்குக்குழிக்குள் அடைக்க முயன்றனர், அவர்களால் தனது கற்பிற்கு தீங்கு நேறிடும் என அறிந்து படைவீரறரைக் கையில் இருந்த கத்திரிக்கோலால் தாக்கி தப்பிக்க முயன்றார். இதானல் கோபமுற்ற படைவீரர் துப்பாக்கியால் இவரை 6 முறை சுட்டுக்கொன்றார். இறக்கும் வேளையில் தனது கரங்களை விண்ணகத்தை நோக்கி நீட்டி, ஆண்டவரே அரசரே என்னை உம்மோடு அழைத்துச்செல்லும் என்று செபித்து உயிர்விட்டார் என்றும் கூறினார் கர்தினால் எர்தோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்