கூட்டொருங்கியக்கத் திருஅவையில் அன்னை மரியின் பரிமாணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவை வாழ்க்கையிலும், அன்னை மரியாவின்மீது அன்பு கொண்ட நம்பிக்கையாளர்களின் பக்தியிலும் அன்னை மரியாவின் பங்கை நாம் அங்கீகரிக்கும்போது கூட்டொருங்கியக்கம் மற்றும் கூட்டொருங்கியக்க மறைப்பணி தலத்திருஅவையை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும், அவ்வாறு நாம் புரிந்துகொள்ள அன்னை மரியா பற்றிய மறைபொருளை நாம் ஆழப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மாரியோ கிரேக்.
செப்டம்பர் 4, வியாழனன்று உரோமில் உள்ள அந்தோனியானும் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 26-ஆவது மரியியல் பேரவையில் உரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் கர்தினால் மாரியோ கிரேக்.
அன்னை மரியாவின் கண்கள் வழியாக மீட்பின் மறைபொருளை பற்றி தியானித்தல், செபமாலை செபித்தல் போன்றவற்றின் வழியாக அவரது வாழ்க்கையை வகைப்படுத்திய மனப்பான்மைகளை முதிர்ச்சி அடையச் செய்வதற்கும், உள்வாங்குவதற்கும் ஒரு பாக்கியமான வழி என்றும், இத்தகைய வழி இல்லாமல் கூட்டொங்கியக்கத் திருஅவை இருக்க முடியாது என்றும் கூறினார் கர்தினால் மாரியோ கிரேக்.
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை, நற்செய்தியில் கூட்டொருங்கியக்கப் பரிமாணம், திருஅவையை வழிநடத்துபவர் அன்னை மரியா, திருஅவையுடன் ஒரு அமைப்பு ரீதியான உறவில் கன்னி மரியா என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் கர்தினால் கிரேக்.
கேட்கும் திருஅவையாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் கிரேக் அவர்கள், தூய ஆவியிலிருந்து வருவதை நாம் தடுக்க முடியாது என்றும்
அன்னை மரியாவின் செவிசாய்ப்பு என்பது, ஆழ்ந்த உள் அமைதியை அடிப்படையாகக் கொண்டது, இது ஆவியின் பரிசைப் பெறுவதற்கான ஒரு சலுகை பெற்ற இடம் என்று குறிப்பிட்டார்.
மறைப்பணி மற்றும் கிறிஸ்தவ சமயத்தின் ஓர் எடுத்துக்காட்டு அன்னை மரியா என்று வலியுறுத்திய கர்தினால் கிரேக் அவர்கள், மறைப்பணி பரிமாணம் என்பது இடைவிடாத செபம் இல்லாமல் இல்லை என்றும், அப்பணியில் திருஅவையின் முதல் நற்செய்தி அறிவிப்பாளரான தூய ஆவியார், தனது உறுதியை நம்மில் நிலைநிறுத்தி இயக்குகிறார் என்றும் எடுத்துரைத்தார்.
அன்னை மரியா திருஅவையின் தாய் என்ற பட்டமானது திருமுழுக்கு பெற்ற அனைவரின் சமமான மாண்பினை வலுப்படுத்துகிறது என்றும், திருஅவைக்குச் சொந்தமான மிகப்பெரிய பட்டமானது நாம் அத்தாயின் குழந்தையாக இருப்பது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்