கடவுளின் கையில் தன்னை ஒப்படைத்தவர் அருளாளர் Edoardo Profittlich
மெரினா ராஜ் - வத்திக்கான்
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கைகளில் உள்ளன, கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது என்ற இறைவார்த்தைக்கேற்ப கடவுளின் கையில் தனது ஆன்மாவை ஒப்படைத்து வாழ்ந்தவர் பேராயர் எதுவார்தோ என்றும், வதைமுகாமில் கொல்லப்பட்ட 23000 பேர்களில் அவரும் ஒருவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிறிஸ்டோஃப் ஸ்கோன்போர்ன்.
செப்டம்பர் 6, சனிக்கிழமையன்று எஸ்தோனியாவின் தலின் பகுதியில் நடைபெற்ற பேராயர் Edoardo Profittlich அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார், ஆஸ்ட்ரியா நாட்டு தலைநகரான வியன்னா மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் கிறிஸ்டோஃப் ஸ்கோன்போர்ன்.
திருஅவையின் புனிதர்களின் நாள்காட்டியில் வதைமுகாம்களில் இறந்தவர்களின் பெயர்கள் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை என்றாலும், கடவுளின் வாழ்க்கை புத்தகத்தில் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது என்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் கருத்துக்களை நினைவுகூர்ந்த கர்தினால் கிறிஸ்டோஃப் அவர்கள், பேராயர் அருளாளராக உயர்த்தப்படக் காரணம் தலின் பகுதியில் உள்ள மக்கள் என்றும் கூறினார்.
பெற்றொருக்குப் பிறந்த பத்து பிள்ளைகளுள் எட்டாவதாக ஜெர்மனியில் பிறந்து, இயேசு சபை அருள்பணியாளராக எஸ்தோனியாவில் பணியாற்றிய பேராயர் அவர்கள், தலின் மக்கள் மீது கொண்ட அன்பால் மீண்டும் ஜெர்மன் நாட்டிற்குத் திரும்பாமல் அங்கேயே பணியாற்றி தன் உயிரைக் கையளித்தார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிறிஸ்டோஃப்.
ஆரம்பகால திருஅவை மக்களை திருத்தூதர் பவுல் ஆண்டவரின் புனித மக்கள் என்று அழைப்பார் என்று எடுத்துரைத்த கர்தினால் கிறிஸ்டோஃப் அவர்கள், அத்தகைய புனித மக்களைக் காக்கவும், ஆண்டவரது மந்தையாம் ஆடுகளுக்காகத் தனது உயிரைக் கையளிக்கவும் தயாராக இருந்தவர் பேராயர் எட்வர்டு என்றும் கூறினார்.
“கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?” (உரோ:8:35) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கேற்ப கிறிஸ்துவோடு இணைந்திருந்து மகிழ்ச்சியுடன், தனது மக்களைத் தொடவும், ஆறுதல்படுத்தவும், பலப்படுத்தவும் முடிந்தது என்றும் கூறினார் கர்தினால் கிறிஸ்டோஃப்.
ஜெர்மனியில் ஹிட்லர், சோவியத் யூனியனில் ஸ்டாலின் என்னும் இரண்டு வன்முறை சித்தாந்தங்களுக்கு பலியான இலட்சக் கணக்கானவர்களில் ஒருவராக பேராயர் எட்வர்டு அவர்கள், 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 22, அன்று இறந்தார் என்றும், அமைதிக்கான நம்பிக்கைகள் கடுமையாக சோதிக்கப்படும் காலத்தில் அவர் அருளாளராக உயர்த்தப்பட்டுள்ளார் என்றும் கூறினார் கர்தினால் கிறிஸ்டோஃப்.
மறைசாட்சிய வாழ்வு எனக்காகக் காத்திருக்கின்றது, அதனை எதிர்நோக்கி நான் மிகவும் ஆவலுடன் மகிழ்வுடன் செல்கின்றேன் என்றும், கடவுள் என்னுடன் இருப்பதால் இந்த வாழ்க்கைப் பாதையில் நான் தனியாக இல்லை என்று பேராயர் கூறியதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் கிறிஸ்டோஃப்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்