பன்னாட்டு அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடந்த காலத்தின் பயங்கரமான அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கான நாளாகவும், பகிரப்பட்ட பொறுப்பைப் பற்றிய பிரதிபலிப்பாகவும் பன்னாட்டு அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான நாளைக் கருதவேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார் பேராயர் கபிரியேலே காச்சா.
செப்டம்பர் 4, வியாழனன்று அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு தினத்தை (IDANT) நினைவுகூர்ந்து ஊக்குவிப்பதற்காக ஐநா பொது அவயின் உயர்மட்டக் கூட்டத்தின் போது எடுத்துரைத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.
வளிமண்டலத்தில், நிலத்தடியில், கடல்களுக்கு அடியில் மற்றும் நிலத்தில் நடத்தப்பட்டுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அணுசக்தி சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைவரையும் பாதிக்கின்றன, குறிப்பாக பழங்குடி மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பிறக்காத குழந்தைகளை பாதித்துள்ளன என்றும், பலரின் உடல்நலமும் மாண்பும் நிவாரணம் இல்லாமல் அமைதியான முறையில் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறினார் பேராயர் காச்சா.
இந்த முக்கியமான மற்றும் பகிரப்பட்ட பொறுப்பை எதிர்கொண்டு, உலகளாவிய பதில் எதிர் திசையில் நகர்வது குறிப்பாக கவலை அளிக்கிறது என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதி கலாச்சாரத்தை நோக்கி முன்னேறுவதற்குப் பதிலாக, ஆக்கிரமிப்பு அணுசக்தி வாய்வீச்சு, பெருகிய முறையில் அழிவுகரமான ஆயுதங்களின் வளர்ச்சி மற்றும் இராணுவ செலவினங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகியவற்றை நாம் காண்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
“நாம் ஒருபோதும் போருக்குப் பழக்கப்படக்கூடாது. சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன ஆயுதங்களில் நம்பிக்கை வைக்கும் சோதனையை உறுதியாக நிராகரிக்க வேண்டும்” என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய பேராயர் காச்சா அவர்கள், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தைப் பின்தொடர்வது அடிப்படையான மற்றும் முக்கியமான தேவை மட்டுமல்ல, ஆழ்ந்த தார்மீகப் பொறுப்பு என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்