சியோலில் உலக இளையோர் தினத்திற்கான தயாரிப்புகள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
எதிர்நோக்கு என்னும் இந்த யூபிலி ஆண்டின் கருப்பொருள் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்க நமக்கு உதவுகிறது என்றும், தனிமையையும் வறுமையையும் குணப்படுத்தும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாறுவதும், மோதல்கள் மற்றும் போர்களால் பிளவுபட்டுள்ள உலகில் அமைதியின் சாட்சிகளாக செயல்படுவதும் இன்றைய இளையோரின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் Kevin Farrell.
ஆகஸ்டு 3, ஞாயிறன்று தோர் வேர்காதாவில் நடைபெற்ற திருப்பலியின் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது, 2027-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3 முதல் 8 வரை, தென் கொரியாவின் சியோலில் நடைபெறவுள்ள உலக இளையோர் தினத்தைக் கொண்டாட அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தையின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த பொதுநிலையினர், குடும்பங்கள் மற்றும் வாழ்விற்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்கள் இந்நிகழ்விற்கான பயணங்களைத் தொடங்க உலகெங்கிலும் உள்ள ஆயர்கள் மற்றும் இளைஞர் பணி இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், சியோலில் நடைபெறவுள்ள இளையோர் தினத்திற்கான தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், திருத்தந்தை அறிவித்த இளையோர் தின நாட்களை நோக்கி விரைவாக முன்னேறி வருவதாகவும், பொதுநிலையினர், குடும்பங்கள் மற்றும் வாழ்விற்கான திருப்பீடத் துறையின் செயலர் முனைவர் Gleison De Paula Souza கூறியுள்ளார்.
இறுதியாக ,"நம் இதயங்களில் வாழும் நம்பிக்கைதான், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெற்றியை அறிவிக்க நமக்கு ஆற்றலைத் தருகிறது; எதிர்நோக்கின் இளம் திருப்பயணிகளாகிய நீங்கள், பூமியின் கடை எல்லை வரை கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருப்பீர்கள்! சியோலில் மீண்டும் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: ஒன்றாக கனவு காண்போம், ஒன்றாக நம்பிக்கை கொள்வோம்" என்று இளையோரிடம் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்